ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!




விருட்சங்கள் வரிசையிலே, நாயுருவியின் மருத்துவக் குணங்கள், குறித்துத் தெளிவாக அறிய முடிந்தது. ஹோமத்திற்கு ஒன்பது குச்சிகளை நம் முனிவர்கள், பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும், அவற்றுள் நாயுருவியும் ஒன்று என்ற விவரம் ஆன்மிக பலன் சொல்லித்தான் தெரிந்தது.

இரா.கண்ணன்,  திருநெல்வேலி-2.

அன்னாபிஷேகம் ஸ்பெஷலாக பஞ்சம், பட்டினி, நீக்கும் பதிகம் தந்து வறுமையில் வாடுபவர்கள் வளமாக வழி வகுத்தமைக்கு வாழ்த்துகள்.நாகை கீவளூர் அருகே உள்ள அந்தணப்பேட்டை தான் எங்கள் சொந்த கிராமம். இருந்தாலும் எங்களுக்கே தெரியாத அஞ்சுவட்டத்தம்மன் மகிமையை மெய்சிலிர்க்கும்படி விவரித்து, உடனே புறப்பட்டுச் சென்று மீண்டுமொருமுறை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

ஆதிசங்கரர் அருளிய அற்புத (ஷண்) மதங்கள் பற்றியும் அதனைக் குறிக்கிற கோயில்கள் பற்றியும் விவரித்த கட்டுரை பிரமிக்க வைத்துவிட்டது. இதுவரை எந்த இதழிலும் படிக்காத அபூர்வத் தொகுப்பு! மன்றோ மறைந்தாலும் இந்து மதத்தை மதித்து வாழ்ந்து மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற 'மன்றோ' என்ற ஆங்கிலேய மகானின் சிறப்பை விவரித்த கட்டுரை  வியப்பிலாழ்த்தி விட்டதன்றோ!

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மேல் அட்டையில் கணேசன், உமையுடன்கூடிய மகேஸ்வரரின் அழகிய வண்ணப்படத்தை தந்து ஆனந்த கடலில் மிதக்க விட்டீர்கள். மேலும் அன்று  பாட வேண்டிய 11 பதிகங்களைத் தந்து ஆன்மிகத்தில் லயிக்க வைத்துவிட்டீர்கள்.

- ஏ.சந்தானம், வாழைப்பந்தல்.

இந்து மதத்தின் வேர்களே வேதங்கள் என்ற கணேச சர்மா அவர்கள் தமது கருத்துகளால் எங்களை ஆன்மிகத்தில் மேலும் ஒரு படி உயர்த்தி மகிழ்ச்சியில் மிதிக்க வைத்துவிட்டார் நன்றி.

- அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல்.

ஆதிசங்கரர் அருளிய ஷண்மதங்கள் திருக்கோயில்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் மற்ற எந்த பத்திரிகையிலும் காணாததாக இருந்தது. கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் நேரில் செல்ல அவாவினை ஏற்படுத்தியது.

- இரா.பிரபாவதி, வேளச்சேரி.

‘பூர்வ ஜன்மத்து பந்தம்’ தலையங்கம் சிலருக்கு புரியாமல் இருக்கலாம். பலருக்கும் புரிந்திருக்கும். ஒரு ஜாதகருக்கு தவறான பலன் நடப்பதாக இருந்தாலும், ஜோதிடர்கள் தங்களின் வார்த்தைகளில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அந்தப் பலனைச் சொல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களாக இருக்க வேண்டும்.

ஜோதிடத்தை வியாபாரமாக்கி பலன் சொல்லுகின்ற போர்வையில், ‘பரிகாரம் செய்தால் சரியாகி விடும்’ என்ற அவநம்பிக்கைகளை ஏற்படுத்தி பணம் பார்க்கத் துடிக்கும் ஜோதிடர்களின் மத்தியில், அந்த வளர்ப்புக் குழந்தையின் உறவுமுறை¬யை பிரிக்காதபடி தத்துவ வார்த்தையால் மென்மையாக கூறியுள்ள விதம்தான் இறைவன் அருளிய ஜோதிடத்தின் மீதுள்ள தூய்மையான நம்பிக்கையை ஏற்படுத்தியது.இப்படி பல்வேறு தகவல்களை பக்தர்களின் மனதில் பதிய வைத்து தவறான வழி இதுவல்ல என்று நல்வழிப்படுத்தி வரும் ‘ஆன்மிகம் பல’ னுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

 எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

‘ஆன்மிகம் பலன்’ அன்னாபிஷேகம் பக்தி ஸ்பெஷல் பக்கத்துக்குப்பக்கம் படிக்கத்தூண்டி பரவசத்தில் ஆழ்த்தியது.பஞ்சம் பட்டினி நீக்கும் பதிகம்பஞ்சம் விரட்டிய பரமேஸ்வரன்
- இந்த இரண்டுமே இவ்விதழுக்குமகுடம். மற்ற கட்டுரை தொடர்களையும் படிக்கும்போது ஆன்மிகத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் மேலும் அதிகப்படுத்தியது.

- வா.மீனாவாசன், சென்னாவரம்.