குருவின் நிழலும் அனுக்கிரக பொழிவும்!



குரு பரம்பரை வைபவம் - ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள், திருக்கச்சி நம்பிகள் சாப்பிட்டுவிட்டு சென்றபிறகு, அந்த இலையை, வெளியே தூர எறிந்துவிட்டு, தாமும் நீராடி, மீண்டும் அமுது பிரசாதங்களை புதியதாக சமைத்தாள். இதைக்கண்டு ஸ்ரீராமானுஜர் மனம்  குமுறினார். காரணம், தஞ்சம்மாள், அந்த ஆச்சார்யரை (திருக்கச்சி நம்பிகளை) கீழ்ச்சாதிக்காரர் என்று எண்ணி இவ்வாறு நடந்து கொண்டாள்.

ஆச்சார்யாரின் பிரசாதம் கிடைக்க வழியில்லாமல் போயிற்றே என்று ஸ்ரீராமானுஜர் தம்முள் வருந்தினார். இவள் தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்று உடனே இல்லம் துறக்க எண்ணினார். இதுபோல மூன்று அல்லது நான்கு வேண்டாத நிகழ்ச்சிகள் நடைபெறவே, துறவறம் மேற்கொள்ள எண்ணி, வரதராஜன் சந்நதிக்கு வந்தார்.

தேவப் பெருமாள் தம்மைக் குறித்து என்ன எண்ணம் கொண்டிருக்கிறார் என்று அறிய, தம் எண்ணத்தை மனதார சரணாகதி பண்ணி தன்னையே பூரணமாக அர்ப்பணித்தார். இதுநாள் வரையிலும், ஸ்ரீராமானுஜர் இப்படி தம்முள் குமுறியது கிடையாது. தேவப்பெருமாள், ‘ஸ்ரீராமானுஜர்’ என்றுதான் அர்ச்சா திருமேனியிலிருந்து அழைப்பதுண்டு. ஆனால், இன்று வந்துள்ள ஸ்ரீராமானுஜரைப் பார்த்தவுடன், அவருடைய எண்ணங்களை அறிந்தவராய், ‘ஸ்ரீராமானுஜா’ என்றழைக்காமல் ‘எதிராஜா’ என்று அழைத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தாம் துறவறம் மேற்கொள்வதற்கு பகவானே அங்கீகாரம் கொடுத்துள்ளான் என்பதாகக் கொண்டு அந்தக் கணமே துறவறம் மேற்கொண்டார்.

இந்தச் சமயத்தில் வேறுசில நிகழ்வுகளும் திருவரங்கத்தில் நடந்தன. ஸ்ரீஆளவந்தார் நோய்வாய்ப்பட்டிருந்தார். இப்படி இருக்கையில், இவருடைய சிஷ்யர்கள் எல்லோரும் முக்கியமாக, பெரிய நம்பிகளும், திருக்கோட்டியூர் நம்பிகளும், ஸ்ரீதிருவரங்கப் பெருமாளரையர் என்பவரை முன்னிட்டுக்கொண்டு, ‘எங்களுக்கு எம்பெருமானைக் குறித்து, நூல்களிலுள்ள அர்த்த விசேஷங்களை ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்’ என்று பிரார்த்தித்தனர்.

“அப்படியாகில் நாம் கூறுவதை நீவீர் இருவரும் கேளும்” என்று ஆளவந்தார், பின்வருமாறு கூறலானார். “கோயிலாழ்வாரே உங்களுக்கு உயர்நிலை மற்றும் பெரிய பெருமாளான திருவரங்கனின் திருவடிகளின்  கீழே வீணையும், கையுமாக சேவித்துக் கொண்டிருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரகத்தை பாதம் முதல் கேசம் வரை வணங்கி விட்டுச் செல்லுங்கள் என்று சிஷ்யர்களைப் பார்த்துக் கூறினார்.

அதாவது, முதலில் கூறிய விஷயத்தின் பொருள் என்னவென்றால் “தங்கள் இல்லங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே அவரவர்க்கு உயர்நிலை என்று அறியவேண்டும்”. தினமும் தீபாராதனை செய்து, அமுது பிரசாதங்களை எம்பெருமானுக்கு படைத்த பின்னரே, நாம் அதை உண்ண வேண்டும். நாம் பெற்ற குழந்தையைப்போல பாவித்து அவனே உயிர் என்று நினைக்குமாறு கூறியருளினார்.

மஹா ஞானியான திருப்பாணாழ்வாரே தினமும் வணங்கத் தகுந்தவர். அவர் அருளிய ப்ரபந்தம் 10 பாசுரங்கள் கொண்ட ‘அமலனாதிபிரான்’ என்பதாகும். இந்தப் பத்து பாசுரங்களிலேயே ப்ரணவத்தின் அர்த்தத்தையும், அடைய வேண்டிய உயர்நிலையையும், பொருளையும் கடைசியில் சரணாகதி செய்வதே பாகவதனின் குறிக்கோள் என்றும் அருளியது மிகமிக வியப்பானது. அதனால் பெரிய பெருமாள் விரும்பி அவரை தம் திருவடிகளிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார். இவர் திருமேனியை தினமும் வணங்கி தரிசனம் செய்து, சிறப்பு பெறும்படி ஸ்ரீஆளவந்தார் கூறியருளினார்.

இதற்கு உதாரணமாக அவர் காட்டியது நால்வர் ஆவார்கள். அவர்கள் முறையே பெரிய திருமலை நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், திருப்பாணாழ்வார் மற்றும் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆவார். அதாவது, பெரிய திருமலை நம்பிகளுக்கு, திருவேங்கடமுடையானுக்கு தொண்டுகள் செய்யக் கூடியவர். திருமலையில் அப்பேற்பட்ட தொண்டைச் செய்தார்.

திருக்கச்சி நம்பிகளோ காஞ்சி வரதராஜன் (தேவப்பெருமாள்) உள்ளம் அறிந்து தொண்டு செய்யக் கூடியவர், திருப்பாணாழ்வார் பெரிய பெருமாள் விரும்பும்படி பாடல்களைப் பாடி தொண்டு செய்தவர் (பகவான் புகழ்பாடுதலையே காரியமாக உடையவர்) இப்பொழுது ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான திருவரங்கப் பெருமாளரையரோ! அந்த திருப்பாணாழ்வார் உள்ளம் விரும்பும்படி தொண்டு செய்யக் கூடியவர். ஆதலால், பெரிய நம்பிகளுக்கும், திருக்கோட்டியூர் நம்பிகளுக்கும், இந்த நால்வரையும் உதாரணமாகக் காட்டி, இப்படியே அவரவர் வாழ்வில் அடைக்கலமாக இருங்கள் என ஆளவந்தார் அருளினார்.

பிறகு, திருவரங்கப் பெருமாள் அரையர், தம் குருவாகிய ஆளவந்தாரை நோக்கி, நீவீர், பரமபதம் செல்ல ஆயத்தமாகின்றீரோ! என்று அழுத கண்ணீர் மழை சேர தோஷம் தளர்ந்து இவ்வார்த்தையைக் கேட்டார். அங்கு பரமபதத்தில் கண் இமைக்காமல் பகவானை அனுபவிக்க திருவுள்ளம் கொண்டீரோ! என்று கேட்க, உடனே ஆளவந்தாரும் புன்னகையுடன் நீங்கள் அனைவரும் “எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தேயிருக்கின்றாரே” என்கிறபடி என்மனத்துள்ளான், உம்மனத்திலும் உளன். ஆதலால் அவனே கதி, தஞ்சம் என பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார் ஆளவந்தார்.

திருவரங்கப் பெருமாளரையர், பெரிய நம்பிகள், திருக்கோஷ்டியூர் நம்பிகள் அழுது கொண்டிருந்தனர். அவர்களை சிறிது நேரம் தேற்றினார், ஆளவந்தார். உங்களுக்கு, திருமந்த்ரார்த்தம் என்பது (நம் நமோ நாராயணாய என்பதன் தேறியாபொருள்) போக மண்டபமாகும், சரம ச்லோகார்த்தம் (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய... என்ற கீதையின் தேறிய பொருள்) புஷ்ப மண்டபமாகும். மந்த்ர ரத்னார்த்தம் (த்வயம் என்பதன் தேறியபொருள்) த்யாக மண்டபமாகும். உங்களுக்கு இவற்றை ப்ரமாணமாக காட்டிக் கொடுப்பவர்கள், திருப்பாணாழ்வார் போன்றவர்கள் ஆவார்கள். ஆகையால், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

இப்படியிருக்கும்போது, ஆளவந்தார் நம்மைவிட்டுப் பிரிந்தால் நாம் இருவரும் உயிர் தியாகம் செய்வோம் என்று திருக்கோட்டியூர் நம்பியும், பெரிய நம்பியும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இவ்விஷயம், பெரிய பெருமாள் திருலோகத்திலே (சந்நதியிலே) தெரியவர, பெரிய பெருமாளும் கோபம் கொண்டவராக பின்வருமாறு அருளினார்.

 “ஆளவந்தார் பிராணனை விடும்போது, நீங்கள் இருவரும் விவேகமற்று நடந்து கொள்ளக் கூடாது. இது எம் ஆணை. நீங்களும் உணர்ச்சி மேலீட்டால் எதுவும் செய்யக் கூடாது” என்று கூறியபடியே திருவரங்கப் பெருமாள் அரையரின் கையைப் பிடித்தபடி, நீங்கள் இருவரும் இவரே கதி என்று நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று ஆணையிட்டார்.

இவ்விஷயம், ஆளவந்தார் காதுக்கும் எட்டியது. இதைக் கேள்வியுற்ற ஆளவந்தாரும், இப்படி நான் வியோகம் ஆகும்போது (காலகதியாகும்போது) உமதுயிரை மாய்த்துக் கொண்டால் பூர்வாசார்யர்களின் அனுக்கிரகம் கிட்டாது.

பரமபதமும் உங்களுக்கு இல்லை. இருகாவிரி நடுவில் உள்ள திருவரங்கனுக்கு திருவாராதானம் கண்டருள்வதை யாராவது விரும்பாமல் இருப்பார்களா? அதாவது, பரமபதம் கிடைக்கும்படியான பேற்றை சகிக்காதவர்கள் திருவரங்கனின் திருவாராதனத்தையும் சகிக்காதவர்கள்தான். நீங்கள் இருவரும் அப்படி இருக்கலாகாது என்று ஆணையிட்டார்.

அதன்பிறகு ஆளவந்தார், தன் சிஷ்யர்களில் ஒருவரான மாறநேர் நம்பியை அழைத்தார். அவரிடம்,  ''நாம் ராஜ வ்ரணத்தால் (கேன்சர்) பீடித்திருந்தபோது நம்பெருமாள் பக்கமாகச் சென்று சரணாகதி செய்தேன். அந்த நோய் எமக்கு சரியானது. தற்சமயம் நம் பேற்றுக்கு அதாவது வைகுண்டமாகிய வீடு கிடைப்பதற்கு நீர் சென்று பெரிய பெருமாளின் பக்கமாகச் சென்று அடியேனுக்காக சரணாகதி செய்து பிரார்த்திக்க வேண்டும். அந்த பேறு எமக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று ஆளவந்தார் கூற, மாறநேர்நம்பியும் பெரிய பெருமாளின் பக்கமாகச் சென்று அவ்வண்ணமே பிரார்த்தனை செய்தார். நடந்ததோ வேறுவிதம்.

பெரிய பெருமாள் தற்சமயம் மாறநேர் நம்பிக்கே அந்த பரமபதத்தை அருளினான். தீர்த்த பிரசாதங்களையும் கொடுத்துனுப்பினான். உடனே மாறநேர்நம்பி திரும்ப வந்து ஆளவந்தாரிடம்  நடந்தவற்றை விண்ணப்பித்தார்.

ஆளவந்தார், நம் சிஷ்யன் நம்மை விட்டுப் பிரியப் போகிறானே என்று கவலையுற்றார். மற்றொரு சிஷ்யராகிய பெரிய நம்பிகளை அழைத்து, இந்த மாறநேர்நம்பி பரமபதம் பதித்த பின்பு, இவருக்கு கடைசியாக செய்யக் கூடிய கர்மாக்களை நீர் செய்யக்கடவீர் என்று ஆணையிட்டார்.

மேற்கூறியபடியே மாறநேர்நம்பி காலகதியாகிவிட பெரிய நம்பிகளே எல்லா விஷயத்தையும் கவனித்துக் கொண்டார். ஆளவந்தார் தம்முடைய எல்லா சீடர்களையும் தம் பக்கத்தில் அழைத்து இருத்திக் கொண்டார். பல்வேறு உபதேசங்களை வழங்கினார். இதன்பிறகு அதிசயிக்கத்தக்க வண்ணம் பல நிகழ்வுகள் நடந்தேறின.

 ஆளவந்தாரை நன்கு தீர்த்தமாட்டிவிட்டார்கள். அவருக்கு கடைசி காலம் வந்துவிட்டதை சீடர்கள் அனைவரும் குறிப்பால் அறிந்தார்கள். உடனே பெரிய பெருமாள் சந்நதி முன்பு நிற்க வைத்தனர். அப்பொழுதுதான் பெரிய பெருமாள் திருமஞ்சன அபிஷேகம் நடந்தேறியது. அதன்பிறகு பெரிய பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்து, ஸ்ரீரங்க மாமறையோர் வேதகோஷங்கள் செய்து திரை நீக்கி ஆளவந்தாருக்கு தரிசனம் கொடுத்தருளினார்.

பெரிய பெருமாளான அரங்கனும் உகந்து ஆளவந்தாரை கடாட்சம் செய்து, திருவரங்கப் பெருமாள் அரையரை நோக்கி இங்கே வாரும், “சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின” என்கிற நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பாசுரத்தை பாடச் செய்தார். தன் திருநெற்றியிலிருந்து மாலை நழுவி விழவே, அனைவரும் ஆச்சர்யம் கொண்டனர். மாலை பிரசாதத்தையும், தீர்த்த பிரசாதத்தையும் ஆளவந்தாருக்கு உகந்து அருளினார். மெல்ல அவர் நகர்ந்து போகும்போது அர்ச்சா திருமேனியில் தாமும் அழுதபடியிருந்தார்.

ஆளவந்தாரும் தம் மடத்திற்கு வந்து தன்னுடைய ஆசார்யனான மணக்கால் நம்பிகளையும் அவர்க்கு மேலுள்ள ஆசார்யர்களையும் ஆழ்வார்களையும் நினைத்து தியானத்தில் அமர்ந்தார். என்ன தோணிற்றோ சிறிது நேரம் கழித்து கண்கள் மலர தம் சீடர்களை மீண்டும் தம் பக்கத்தில் அழைத்தார்.திருவரங்கப் பெருமாள் அரையரை நோக்கி, யாம், இதுவரை ஏதாவது அபசாரப்பட்டிருந்தால், மன்னித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

கண் கலங்கிய பெருமாள் அரையரும், பெரிய பெருமாளுக்கு ஏதேனும் அபசாரம் உண்டாக்கினால் அன்றோ உமக்கு அபசாரம் நேருவது. பெரிய பெருமாளுக்கு, எப்போதுமே அபசாரமே கிடையாதது போலவே, உமக்கும் எப்போதுமே அபசாரம் கிடையாது என்று  விளக்கினார்.

இதன் நடுவே, ஆளவந்தார் நோய் சாற்றிக் கொண்ட விஷயம் கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்திலிருந்து திருக்கச்சி நம்பிகளின் இரு அடியார்கள் ஆளவந்தாரைக் காண திருவரங்கம் வந்திருந்தனர். அந்த இரு அடியார்களையும் ஆளவந்தாருக்கு தெரியுமாதலால் அவர்களை நோக்கி, “ராமானுஜர் எப்படி இருக்கிறார்” என வினவினார். அவர்களும் ராமானுஜரின் நிலையை விளக்கிக் கூறத் தொடங்கினார்கள்.

(வைபவம் தொடரும்)

கோமடம் மாதவாச்சாரியார்