மிகப்பெரிய முருகன் சிலை



41 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட மிகப்பிரமாண்டமான முருகன் சிலை கோபிசெட்டிப்பாளையத்திற்கு அருகே உள்ள பச்சை மலை முருகன் கோயிலில் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய முருகன் சிலை இதுதான். 1600 அடி உயர மலை மீது இந்த முருகன் சிலை அமைக்க பக்தர்களே கல், மண், சிமென்ட் போன்றவற்றைச் சுமந்து உதவினார்கள்.

செல்வத்தை அள்ளி தருபவன் சுக்கிரன்

கும்பகோணத்தில் இருந்து பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது கஞ்சனூர் தலம். கேட்டதைத் தரும் கற்பக விருட்சமாக கற்பகாம்பாளும் அள்ளிக்கொடுக்கும் அக்னீஸ்வரரும் கோயில் கொண்டிருக்கும் அற்புத தலம் இது. நம்முடைய துன்பத்தை போக்கி சுகத்தை அருளும் சுக்கிர பகவானும் இவ்வாலயத்தில்தான் குடிகொண்டிருக்கிறார்.

ஆறாவது கிரகமான சுக்கிரனின் தலம் கஞ்சனூர். பிரம்ம தேவரின் புத்திரன் பிருகு முனிவர் இவரின் குமாரன் சுக்கிரன். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், நல்ல இடத்தில் திருமணம், வாகன வசதியுடன் கூடிய வாழ்க்கை, இலக்கியம் மற்றும் கவிதை எழுதும் ஆற்றல் ஆகியவற்றை அருளும் அருளாளர் சுக்கிரன்தான்.

திருமணத்தடை நீக்கும் மணமேல்குடி அம்மன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் மணமேல்குடி இருக்கிறது. 63 நாயன்மார்களின் 22வது நாயன்மாரான "குலச்சிறையார்" பிறந்து சிவனை வழிபட்ட தலம் இது. ஒட்டக்கூத்தர் பிறந்த மண்ணும் இதுதான். திருஞானசம்பந்தர் சிவனை வழிபட்ட பெருமை மிக்கது.  கருவறையில் மூலவர் ஜெகதீஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கூடவே அன்னையும் குடிகொண்டிருக்கிறாள். அன்னை ஜெகத்ரட்சகி என அழைக்கப்படுகிறாள்.

இக்கோயிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் சீக்கிரமே வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத்தடை நீங்கும், குழந்தை வரம் கிட்டும் என்பர். இக்கோயிலின் தலவிருட்சம் மகிழம்பூ மரம் மேலும் வில்வ மரமும் அரச மரமும் உள்ளன. மணமேல்குடி ஊரின் மத்தியில் கோயில் உள்ளது. குழந்தை பாக்கியம் பெற இங்கு ‘‘சிவ பிரதோஷம்’’ நடைபெறும். சக்தி வாய்ந்த ஜெகதீஸ்வரர், ஜெகத்ரட்சகியை தரிசனம் செய்து பலன் பெறுகிறார்கள் பக்தர்கள்.

ராஜ கணபதி

சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேஸ்வரர் கோயிலின் இணைக் கோயிலாக ராஜகணபதி ஆலயம் உள்ளது. ஔவையார், பூத உடலோடு திருக்கைலாயத்துக்குச் செல்லும்போது இத்தலத்து ராஜ கணபதியைத்தான் வணங்கிச் சென்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

யோக தட்சிணாமூர்த்தி

சுசீந்திரம் கோயிலின் கொன்றைமரத்தின் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயில் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. அனைத்து கோயில்களிலும் விநாயகக் கடவுளையே முதலில் வழிபடு வோம். ஆனால், இங்கு தட்சிணாமூர்த்தியே முதலில் வழிபடப்படுகிறார்.

 இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்ரகம் பேரழகு வாய்ந்தது. மிகவும் சக்தி வாய்ந்த குருவான இவருக்கு வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இவர் யோக தட்சிணா மூர்த்தி என்று வணங்கப்படுகிறார்.