சிறக்கட்டும் உங்கள் ஆன்மிகப் பணி!



தீரா வினை தீர்க்கும் வல்லமை கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயத்தினைச் சுற்றி அமைந்துள்ள மகிமை நிறைந்த புனித தீர்த்தங்கள் பற்றிய தொகுப்பு ஆனந்த தீர்த்தத்தில் மூழ்கடித்து விட்டது. தீரா குழப்பங்களைத் தீர்க்க வல்ல பெருமாளாய் திருவேங்கடவன் அருள்பாலித்து வருகிற திருப்பதியின் மகத்துவங்களை அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்
கட்டுரை, குழப்பமின்றி விவரித்து அசத்தி விட்டது.
- அயன்புரம் சத்யநாராயணன்.

ஏழு தல பேழை தரிசனம் கட்டுரை மெய் சிலிர்க்க வைத்தது. நேரில் தரிசனம் செய்தது போல் உணர்வு. மாதத்திற்கு ஏற்றவாறு மனம் அமைதியும், ஆனந்தமும் அடைய ஆனி திருமஞ்சன நாளில் அழகான அம்மன் படத்துடன் வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். அருமை. ஒரு நூற்றாண்டிற்கு முன் காஞ்சிக்கோயில்கள் என ஒன்பது படங்களை வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டீர்கள். கண்கொள்ளாக் காட்சி. சைவ, வைணவ ஒற்றுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. சிறக்கட்டும் உங்கள் ஆன்மிகப்பணி.
- ஏ.டி.சுந்தரம், ஈரோடு.

சந்தனத்தின் பயனையும், மகிமைகளையும் படிக்க படிக்க மணக்குதய்யா....! திருச்செந்தூர்
சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள
25 வகையான தீர்த்தங்களைப் பற்றியும், அவற்றில் நீராடினால் கிடைக்கும் நன்மைகளையும் அவற்றின் தோற்ற வரலாறு மகிமைகளையும் ‘‘தீரா வினைகள் தீர்க்கும் திருச்செந்தூர்’’ எனும் கட்டுரை அழகுபட விளக்கியது. 
- அ. கிருஷ்ணகுமார், பு.புளியம்பட்டி.

பேழையினுள் உறைந்தாலும் பக்தர்தம் நெஞ்சப் பேழையினுள் உறையும் அன்னை காளி பற்றி அறிந்த போது மெய் சிலிர்த்தது. திருமலைராயன் பட்டினத்தின் செங்குந்த மரபினரால்
சீருடனும் சிறப்புடனும் அன்னை காளியில் ஆலயம் பராமரிக்கப்படுவது பெருஞ்சிறப்பு. நிவேதனங்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றும் ஆயிரம் என்பதால் அதற்கே பாட வேண்டும் பாயிரம் ஆயிரம்.
- கே.ஏ.நமச்சிவாயம், பெங்களூரு.

ஆடி மாத சிறப்பிதழாக ஆன்மிக முருகர் பக்தி ஸ்பெஷலாக வந்த தங்கள் இதழ் முக்கனி போன்று இனித்தது. அட்டையில் வாராஹி கருணை உள்ளத்துடன் காட்சி தந்தது அருமை.
- ஏ.இளங்கோவன், வாழைப்பந்தல்.
திருமூலர் மந்திர ரகசியம், வாழ்வியலின்

ரகசியங்களை இனிமையாக வெளிப்படுத்தியது. ஞான, மோன, ஊன, மரங்களின் வகைகள் இக்காலத்தில் பலருக்கும் தெரியாத ஒன்று. நம் முன்னோர்கள் அதை அறிந்து, வகைப்படுத்தி, உபயோகித்து உள்ளதை உணர்ந்த போது சிலிர்க்கிறது மனசு. நாம் நிறைய அடிப்படையான விஷயங்களை தவற விட்டு போய்க் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை தான். நாம் வாழ்வது வெற்று வாழ்க்கைதான். - ஜெ.சி.ஜெரினாகாந்த், சென்னை.

அனுபூதி பாடி ஆனந்தம் அடைவோம் அபூர்வ ஸ்லோகம் ஐம்பத்தொன்றும் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்விற்கு வழிகோலும் என்றால் அது மிகையல்ல. ‘‘பரீட்சைக்குப் பின் பாடம்’’ ஆசிரியரின் தலையங்கமும் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான பாடம்தான். பாராட்டுகள்.
- மு.சுகாரா. ராமநாதபுரம்.

குறைவிலா வாழ்வளிக்கும் குகைக்குமரன் என்ற கட்டுரை படித்தேன். மலேசியாவில் குன்றின் குகையில் அருள்பாலிக்கும் பத்துமலை முருகன் படமும், கட்டுரையும், பசு
மரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது. தெளிவு பெறு ஓம் பகுதியில் இடம்பெறும் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
- பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி.

ஆலயங்களின் ஆடி மாத ஆனந்த கொண்டாட்டங்கள் கட்டுரை படித்தேன். வண்ணப்படங்கள் கண்களைக் கவர்ந்தன. நேரடியாக தரிசனம் செய்தது போன்ற ஒரு மெய்யுணர்வு ஏற்பட்டது.
- முத்தூஸ், தொண்டி.
கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சி

புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், ஒரு நூற்றாண்டிற்கு முன் எப்படியிருந்தன என்பதை பொருள்பட விளக்கியிருந்த ஆலயங்களின் பழமையான புகைப்படங்களின் அணிவகுப்பு அருமை. அதே சமயம், வாசகர்களை அன்றைய காலகட்டத்திற்கே இழுத்துச் சென்றிருந்தன கலை நயமிக்க புகைப்படங்கள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

குறைவிலா வாழ்வளிக்கும் குகைக்குமரன் கட்டுரையும் தீராவினைகள் தீர்க்கும் திருச்செந்தூர் கட்டுரையும் சென்ற இதழ் எனும் அழகு முகத்தின் இரண்டு நல் கண் முத்துகள்.
- ப. மூர்த்தி, பெங்களூரு.

கமகமக்கும் சந்தனம் பற்றி நிறைவான கட்டுரை படித்தேன். நல்ல அலசல். சந்தனம் மங்கலப் பொருள் மட்டுமல்ல. மருத்துவம் நிறைந்த மகத்தான பொருள் எனவும் உணர முடிந்தது. கேரள தேச மக்கள் போற்றும் சந்தனத்தின் குணாதி சயங்களை இதுவரை உணராதவர்களும் உணரும் வண்ணம் உணர்த்தியது பாராட்டுக்குரியது. பேழைக்குள் பராசக்தி, புதுத்தகவல். 
- ராஜி ராதா, பெங்களூரு.