அப்பூச்சி காட்டி விளையாடும் ஆயன்



பக்தித் தமிழ் 31

யமுனை நதிக்கரை. இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சொலி எங்கும் கேட்கிறது. பக்கத்தில் சிறுவர்களின் விளையாட்டு ஓசை. திடீரென்று, அங்கே ஒரு பெரிய சத்தம். யாரோ சுருண்டு விழுகிறார்கள்.

 ஓடிச் சென்று பார்த்தால், நதியில் நீர் அருந்திய ஒருவர் மயங்கி விழுந்திருக்கிறார். அவரைக் கவனித்து முதலுதவி செய்வதற்குள், சுற்றிலும் பலர் அதேபோல் விழுகிறார்கள். என்ன நடந்திருக்கும் என்று அவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது. தண்ணீரைக் குடித்த எல்லாரும் சுருண்டு விழுகிறார்கள்.

அப்படியென்றால், யமுனை நதி நீரில் விஷம் கலந்திருக்கிறதா?


மக்கள் அதிர்ந்து போகிறார்கள். குடிநீரில் விஷம் கலந்தது யார் என்று புரியாமல் தவிக்கிறார்கள். அப்போதுதான், அவர்களுக்கு அந்த நதியில் காளிங்கன் என்ற காளியன் பாம்பு மறைந்து வாழ்வது தெரிகிறது. அந்த நாகத்தின் விஷம்தான் நீரில் கலந்துவிட்டிருக்கிறது! இப்போது, என்ன செய்வது? காளிங்கனை அங்கிருந்து வெளியேறச் சொல்ல முடியுமா? ஆயர்களுக்கு ஒரு குறை என்றால் தீர்க்க வேறு யார்? அந்தக் கண்ணனைதான் தஞ்சமடைய வேண்டும்!

கண்ணன் வருகிறான். அங்கிருந்த ஒரு கடம்ப மரத்தின் மீது ஏறுகிறான். நீருக்குள் பாய்கிறான். இதைக் கண்ட காளிங்கனுக்குக் கோபம். தன்னுடைய பல தலைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணனைக் கொத்த வருகிறான். படமெடுத்து ஆடும் அவனுடைய தலைமீது நாட்டியம் ஆடுகிறான் கண்ணன். அவனை வெல்கிறான். கண்ணன் நினைத்தால், காளிங்கனை அப்படியே அழித்திருப்பான். காளிங்கனின் மனைவிகள் வேண்டிக்கொண்டதால், அவனை உயிரோடு விடுகிறான்.

‘காளிங்க நர்த்தனம்’ என்ற பெயரில் மிகவும் பிரபலமான கண்ணன் கதை இது. படமெடுத்து சீறும் நாகத்தின் மீது கண்ணன் ஆடும் அந்த அழகிய நடனத்தைப் பல ஓவியர்கள் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள், நடனக் கலைஞர்கள் பலர் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். நடனத்தை வரையலாம், ஆடலாம், எழுத இயலுமா? கண்டிப்பாக இயலும். அற்புதமான பல பாடல்களின் மூலம் கண்ணனின் காளிங்க நடனத்தை ஆழ்வார்களும் மற்ற தமிழ்ப் புலவர்களும் விதவிதமாக வர்ணித்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்!

முதலில், பெரியாழ்வார். கண்ணனைக் குழந்தை யாகப் பார்த்துப் பல அழகழகான பாடல்களைப் பாடியவர். தெய்வத்துக்கே பல்லாண்டு கூறி வாழ்த்தி யவர். அவரது ‘பல்லாண்டு’ பாடல்களில் ஒன்று:எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுதப்பட்டஅந்நாளே அடியோம்கள் அடிக் குடில்வீடு பெற்று உய்ந்தது காண்!

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து, ஐந்தலையப்
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே!
 எம்பெருமானே, கண்ணா,
உன்னுடைய அடியவர்களாக நாங்கள்
எங்களை ஒப்படைத்த அந்த நாள்தான், எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. நாங்கள் மட்டுமில்லை, மீஎங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும் குடும்பத்தினரும்கூட அதனால் மோட்சப் பதவியை அடைந்துவிட்டோம்.
செம்மையான கோகுலாஷ்டமியின்போது பிறந்தவனே, வடமதுரையில் வில்லை வளைத்து உடைத்தவனே, ஐந்து தலைகளைக் கொண்ட காளிங்கன் என்ற நாகத்தின் மீது பாய்ந்தவனே, உனக்குப் பல்லாண்டு கூறி நான் வாழ்த்துவேன்!

வில்லை வளைத்து உடைத்தவனா? அது சீதை சுயம்வரத்தின்போது ராமர் செய்தது அல்லவா? கிருஷ்ணர் பெருமையைச் சொல்லும் பாடலின் இடையே ராமாவதாரம் ஏன் வரவேண்டும்?
சீதைக்காக ராமர் ஒரு வில்லை முறித்தது
உண்மைதான். கண்ணனும் அதேபோல் இன்னொரு வில்லை முறிக்கிறான். மதுராபுரியில் கம்சனின் யாகத்துக்காக வைக்கப்பட்டிருந்த வில் அது! இந்த நிகழ்வைதான் பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்!
கண்ணனின் காளிங்க நர்த்தனத்து அழகைப் பெரியாழ்வார் வர்ணிக்கும்

இன்னொரு பாடல்: காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு,
அவன் நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற,
தூ மணி வண்ணனைப் பாடிப் பற!
இந்தப் பாடலில் இரு பெண்கள் ‘உந்தி பறத்தல்’ என்ற ஆட்டத்தை விளையாடுகிறார்கள். ஒருத்தி ராமன் பெருமைகளைச் சொல்ல, இன்
னொருத்தி கண்ணன் பெருமைகளைச் சொல்
கிறாள். அதில் ஒரு பாடல்தான் இது.

காளிங்கன் என்கிற பாம்பு ஒரு பொய்கையில் வசித்தது. அந்தப் பாம்பு கலங்கும்படி பாய்ந்து,
அதன் நீளமான ஐந்து தலைகளிலும் நின்று நடனம் செய்து,
பின்னர் அந்தப் பாம்புக்கு அருள் செய்த வித்தகன் கண்ணன். அவனுடைய தோள்களின் வலிமையை,
அந்தத் தூய்மையான மணி போன்ற வண்ணம் கொண்டவனின் சிறப்பை நாம் பாடுவோம்!
இந்தக் காட்சியை இன்னும் கொஞ்சம் நுட்பமாக வேறொரு பாடலில் பெரியாழ்வார் காட்டுகிறார்:

காயும் நீர் புக்கு, கடம்பு ஏறி, காளியன்
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து, ஆடி,
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்,
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்!

குழந்தைகளை மகிழ்விப்பதற்காகப் பெரிய
வர்கள் ஒளிந்து நின்று சட்டென்று தோன்றுவார்கள். அது மகிழ்ந்து சிரிக்கும். சில நேரங்களில்
குழந்தையே ஒளிந்து கொண்டு விளையாடுவதும் உண்டு. இவற்றை ‘அப்பூச்சி’ என்பார்கள்.
அப்படிக் கண்ணன் அப்பூச்சி காட்டுவதாகப் பாடிய ஒரு பாடலில், பெரியாழ்வார் காளிங்க
நர்த்தனக் காட்சியை விவரிக்கிறார். இப்படி:

கண்ணன் விஷம் கலந்திருந்த நீருக்குள் செல்ல விரும்பினான், அதற்காகக் கடம்ப மரத்தில்
ஏறினான், அங்கிருந்து நீரில் குதித்து, காளிங்கனின் கொடுமையான படங்களின் மீது பாய்ந்து ஆடினான். அப்போது அவனுடைய சிலம்புகள் சத்தமிட்டன.
அதன் பிறகு, கண்ணன் அந்தப் பாம்பின்
மீது நின்றபடி புல்லாங்குழல் ஊதிக்கொண்டு
வித்தகனாக நின்றான். அந்த ஆயன்தான் இப்போது
அப்பூச்சி காட்டி விளையாடுகிறான்!

அதே குழந்தைக் கண்ணன், செங்கீரைப்
பருவம் என்று சொல்லப்படுகிற ஒரு வயதில், கீரைச் செடிபோல் தலையை அழகாக ஆட்டி மகிழ்ந்தான். அந்தக் காட்சியிலும் காளிங்க நர்த்தனத்தை
வர்ணித்துப் பாடுகிறார் பெரியாழ்வார்:
காய மலர் நிறவா! கரு முகில் போல் உருவா!
கானக மா மடுவில், காளியன் உச்சியிலே
தூய நடம் புரியும் சுந்தர! என் சிறுவா!

துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே,
ஆயம் அறிந்து பொருவான் எதிர் வந்தமல்லை
அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணை யாய்,
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை,
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே!

 கண்ணா, காயாம்பூ போன்ற நிறத்தை உடைய வனே, கருத்த மேகம் போன்ற உருவம் கொண்டவனே, அன்றைக்கு அந்தக் காட்டுக்குள் இருந்த மடுவில், காளிங்கன் என்கிற பாம்பின் உச்சியில் அருமையான நடனம் ஆடினாயே, அழகனே, என் சிறுவனே! உன்னைக் கொல்ல நினைத்த யானையின் கொம்பைப் பறித்தவனே, உன்னோடு சண்டையிட வந்த மல்லர்களை அழித்து ஆடியவனே, உன்னுடைய இரு பாதங்களின் புகழை எப்படி வர்ணிப்பது? ஆயனே, ஆயர்களின் போர்க் காளையே, எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயா?
இந்தக் காட்சியை ஆழ்வார் இத்தனைவிதமாக வர்ணிக்க, அதைக் கேட்ட தேவகியின் மனம் வாடுகிறது!

தேவகிதான் கண்ணனைப் பெற்ற தாய். ஆனால், அவள் சிறைவயப்பட்டிருந்ததாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் அவளால் கண்ணனை வளர்க்க இயலவில்லை. ஆகவே, இந்த லீலை
களையெல்லாம் அவள் நேரில் பார்க்கவில்லை.

இதையெல்லாம் எண்ணி தேவகி வருந்திப் பாடுவதுபோல் குலசேகராழ்வார் பல அருமையான பாடல்களைத் தந்துள்ளார். அவற்றில் காளிங்க நர்த்தனக் காட்சி இடம்பெறும் ஒரு பாடல்:
குன்றினால் குடை கவித்ததும், கோலக்
குரவை கோத்ததுவும், குடம் ஆட்டும்,

கன்றினால் விளவு எறிந்ததும், காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்,
காணுமாறு இனி உண்டு எனில் அருளே!

கண்ணா, நீ மழையில் சிக்கிய ஆயர்களைக் காப்பதற்காக ஒரு குன்றைக் குடையாகப் பிடித்தாயாமே! பின்னர் ஒரு கன்றைப் பிடித்து எறிந்து விளாங்காய்களை உதிர்த்தாயாமே!
எல்லாருடனும் மகிழ்ச்சியாகக் குரவையாட்டம் ஆடினாயாமே, குடக் கூத்து ஆடினாயாமே! காளிங்கன் என்கிற பாம்பின் தலையைக் காலால் மிதித்து நடனம் ஆடினாயாமே!
இப்படி நீ செய்த பிள்ளைக் குறும்புகளையெல்லாம் பலர் சொல்கிறார்கள்.

ஆனால், அவற்றை நான் என்னுடைய உள்ளம் குளிரும்படி பார்க்கவில்லை. கண்ணா, எனக்காக அவற்றை
இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவாயா?
காளிங்கன் மீது கூத்தாடிய கண்ணனைச் செல்ல மாகக் ‘கூத்தனார்’
என்று அழைக்கிறாள் ஆண்டாள், ‘நாச்சியார் திருமொழி’யிலிருந்து ஒரு பாடல்:
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட,
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன்மேல் நடனம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
அப்போதெல்லாம், ஏதாவது ஒரு விஷயம்

நடக்குமா நடக்காதா என்று தெரிந்துகொள்ள, கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுப்பார்கள். அவற்றை இரண்டிரண்டாக வைத்து எண்ணு
வார்கள். இரட்டைப் படையாக வந்தால், அவர்கள்
எண்ணியது நிறைவேறும் என்று அர்த்தம். இதற்குக் ‘கூடல் இழைத்தல்’ என்று பெயர்.

கண்ணன் மீது காதல் வயப்பட்ட ஒரு பெண், கூடல் இழைக்கிறாள். தன் நேசம் நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் பாடும் வரிகள் இவை:
காளிங்கன் என்ற பாம்பைப் பார்த்து ஆயர்களும் ஆய்ச்சியர்களும் அஞ்சினார்கள். அதைக் கண்ட கண்ணன் பூத்துக் குலுங்கும் நீண்ட கடம்ப மரம் ஒன்றில் ஏறினான், நீரில் குதித்தான், காளிங்கன்மீது நடனம் ஆடினான்! அந்தக் ‘கூத்தனார்’ என்னை ஏற்றுக்கொள்ள வருவாரா? ஆம் எனில், கூடலே, நீ கூடிவிடு!

திருமங்கையாழ்வாரும் காளிங்க நர்த்தனத்தை அருமையாகப் பாடியிருக்கிறார். உதாரணமாக:
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி, அக்
காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடனம் செய்த
உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெம் தழல் மூன்று, நால் வேதம்,
வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
வண் புருடோத்தமமே!

தளிர்கள் நிறைந்த கடம்ப மரம். அதில் ஏறி நின்று, அங்கிருந்து காளிங்கனின் படங்களாகிய அரங்கத்தில் பாய்ந்து அரிய நடனத்தைச் செய்த வன், தேவர்களின் தலைவன் எழுந்தருளியிருக்கும் கோயில், மூன்று வகையான நல்ல தழல்கள்,நான்கு வேதங்கள், ஐந்து வகை வேள்விகள், அவற்றின் ஆறு அங்கங்கள் என எல்லாவற்றையும் நன்றாக உணர்ந்த அந்தணர்கள் அதிகம் வாழும்
திருநாங்கூர்!

திருமங்கையாழ்வாரின் இன்னோர் அற்புதமான பாசுரம் இந்தக் காட்சியை இன்னும் விரிவாகப் பேசுகிறது: வளைக் கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப,
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று, அது வாடத்
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்    துள்ளானே!
திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளியிருக்கும் இந்தப் பெருமான் யார் தெரியுமா?

முன்பு ஒருநாள், நதியில் காளிங்கனைப் பார்த்த ஆய்ச்சியர்கள் பயந்து அலறினார்கள். கையில் வளையலை அணிந்த, நீண்ட கண்களைக் கொண்ட அந்தப் பெண்களின் குரலைக் கேட்டு இவன் வந்தான். மலர்கள் நிறைந்த அந்தப் பொய்கையில் புகுந்தான், விஷமுள்ள பற்களைக் கொண்ட நாகத்தின் உச்சியில் பாய்ந்து, அது வாடும்படி ஆனந்தமாக நடனம் ஆடிப் போர் செய்தான்.என்னது? நடனம் ஆடிப் போர் செய்வதா? அது எப்படி சாத்தியம்? கண்ணன் நினைத்தால் எல்லாம் நடக்கும். நம்ப இயலாவிட்டால், ஆண்டாளைக் கேளுங்கள்: ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது,அம்மனைமீர், துழதிப்படாதே

கார்க் கடல் வண்ணன் என்பான் ஒருவன் கை கண்ட யோகம் தடவத் தீரும்,
 நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்!

தாய்மார்களே, நான் கொண்ட நோய் எப்படிப்பட்டது என்று அறிய நினைக்கிறீர்களா? அது யாராலும் இயலாது! குழம்பாதீர்கள், என்னுடைய நோய் தீர என்ன வழி என்று நானே சொல்கிறேன். தண்ணீர்க் கரையில் நின்ற ஒரு கடம்ப மரத்தின் மீது ஏறி, காளியன் என்ற நாகத்தின் உச்சியில் பாய்ந்து,

போர்க்களம்போல் அங்கே நடனம் செய்த அந்தக் கண்ணன் இருக்கிறானே, அவனுடைய பொய்கைக் கரையில் என்னைக் கொண்டு சென்று விட்டுவிடுங்கள். கருத்த கடலின் வண்ணத்தைக் கொண்ட அவன் என்னைத் தொட்டால் போதும், என் துன்பம் தீரும்! ஆக, திருமங்கையாழ்வார் கண்ணனின் நடனத்தை ‘அமர்’ (போர்) என்கிறார், ஆண்டாள் அதைப் ‘போர்க்களம்’ என்றே தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறாள்.

போர் போல ஒரு நடனம் என்றால், அதற்குத் தாளம் எப்படி இருக்கும்?

‘காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்தி’ என்றும், ‘காளியன் தலமிசை இருந்து தாண்டவம் ஆடிய பதம்’ என்றும் கண்ணனைப் பாடும் ஊத்துக்காடு வேங்கடகவி ஒரு பாடலில் கண்ணனின் காளிங்க நர்த்தனத்துக்கு ஜதி சொல்கிறார், இப்படி: தாம் தீம் தரண தாம் தீன தகிட... தாம் தீம் தரண தாம் தித் தகிட திமிர்தகிட திமிர்தகிட ததிங்கிணதோம்!

‘பொறி வரி அரவின் ஆடும் புனிதன்’ என்று கண்ணனை வர்ணிக்கிறார் கம்பர். ‘விடத்தை உடைத்த படத்தினில் நட நவில்‘ என்கிறார் அருணகிரிநாதர்! திருவேங்கடமாலை என்ற நூலை எழுதியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அவர் ஒரு பாடலில் காளிங்க நர்த்தனக் காட்சியை வர்ணிக்கும்போது, ‘பாதமாம் போதைப் படத்து வைத்தார்’ என்கிறார். மலர் போன்ற பாதத்தைப் பாம்பின் படத்தில் வைத்தாராம். இதை ஏன் அவர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

காளிங்கன் இந்த நதியில் வந்து ஒளிந்துகொண்டிருக்கக் காரணம், அவனுக்குக் கருடனை எண்ணி பயம். தான் இப்போது இந்த நதியிலிருந்து வெளியேறிவிட்டால் கருடன் தன்னை என்ன செய்வானோ என்று அச்சப்படுகிறான். ஆகவே, கண்ணன் அவனது தலைமீது தன் காலை முத்திரையாகப் பதிக்கிறார்.

 ‘இந்தத் திருவடியைப் பார்த்தால் அந்தக் கருடன் உன்னை எதுவும் செய்யமாட்டான்’ என்று அருள் செய்கிறார்! இதன் அர்த்தம், கண்ணன் அந்தக் காளிங்கனை துன்புறுத்துவதற்காக அவன் மேல் ஏறி நடனமாடவில்லை, அவனுக்கு உதவுவதற்காகத்தான் ஆடியிருக்கிறார்! திருமுருக கிருபானந்த வாரியார் இந்தக் காட்சியை சுவையாக விளக்குவார்: ‘காளிங்கன் என்பது வெறும் பாம்பு அல்ல, அது நம் மனம்.’

அந்தக் காளிங்கனுக்கு ஐந்து தலைகள், நமக்கு ஐந்து புலன்கள்! அது தலைகளின் வழியே நஞ்சைக் கக்குகிறது. நாம் புலன்களால் பிழைகளைச் செய்கிறோம். கண்ணன் அந்த ஐந்து தலைகளின் மீது குதித்து அவற்றைக் கட்டுப்படுத்தி நடனமாடுகிறான். அதுபோல, அறிவின் துணையோடு நாம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த இயலும். அன்றைக்கு நதிக்கரையில் காளிங்கனைப் பார்த்து அலறிய ஆயர்கள்போல, நமக்குள் இருக்கும் காளிங்கனைப் பார்த்து அலறுவோம், அதன் மீது நடனம் செய்யக் கண்ணனை  அழைப்போம், அவன் அருள்வான்!

ஓவியங்கள்: வேதகணபதி
(தொடரும்)