ஆகஸ்ட் மாத பிரசாதம்




மோர் சீடை (கோகுலாஷ்டமி)


என்னென்ன தேவை?

புளித்த மோர் - 1 கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 

பதப்படுத்திய ஈர அரிசி மாவை ஃபேன் அடியில் காயவைத்து பின் வறுத்து இரண்டு முறை சலித்து அதனுடன் பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, உப்பு, புளித்த மோர், விட்டு கலந்து வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். பின் சின்னச் சின்ன சீடைகளாக உருட்டி ஒரு துணியில் காயப் போட்டு ஈரம் சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மொறு மொறுப்பாக இருக்கும் இந்த சீடை. குறிப்பு : சீடை மாவை ஒரு முறைக்கு இரண்டு முறை சலித்துக்கொண்டால் சீடை வெடிக்காது.

அதிரசம் (வரலட்சுமி விரதம்)

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - 1 கப்(பாகு வெல்லம்), ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 

அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து, களைந்து வடித்து லேசான ஈரத்துடன் இருக்கும்போது மாவாக அரைக்கவும். பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை வடிகட்டி திரும்பவும் அதே பாத்திரத்தில் போட்டு காய்ச்சவும். உருட்டும் பதத்திற்கு பாகு வந்ததும் அரிசி மாவை கொஞ்ச கொஞ்சமாக தூவிக் கிளற வும். கூடவே ஏலக்காய் தூள் சேர்த்து கட்டி தட்டா மல் கிளறவும். இறுகி வந்ததும் மாவினை(விருப்பமான வடிவத்தில்) கெட்டியாகவும், பெரியதாகவும் தட்டி போட்டு எண்ணெயில் போடவும். இருபுறமும் வெந்ததும் ஒரு கரண்டியால் எடுத்து மற்றொரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய் வடிந்ததும் தாம்பாளத்தில் அடுக்கி பரிமாறவும். 
குறிப்பு: எண்ணெய்க்கு பதிலாக நெய்யாலும் தயாரிக்கலாம்.

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்

பலாச்சுளை கொழுக்கட்டை (விநாயகர் சதுர்த்திக்காக)


 என்னென்ன தேவை?

பச்சரிசி - ஒரு பெரிய கப், பால் - 1/2 கப்.
பூரணத்திற்கு: தேங்காய் - 1 சிறியது, வெல்லம் - 150 கிராம், பலாச்சுளை - 10 பொடியாக நறுக்கியது, ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின் சலித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை வெந்நீரில் கரையவிட்டு வடிகட்டவும். வடிகட்டின வெல்லத்தை பாகு காய்ச்சி, பொடியாக நறுக்கிய பலாச்சுளை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் போட்டு கை விடாமல் கிளறுங்கள்.

இந்த கலவை சுருளாக வரும்போது இறக்கி ஆறவிடவும். பின் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பின் அதன் மேல் காய்ச்சிய பால், கொதிக்க வைத்த தண்ணீர் 1 கப்,  நெய் சேர்த்து ஊற்றி கைவிடாமல் கிளறி மூடிவைத்து, பின் மாவில் இருந்து சிறு சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.குறிப்பு : விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை செய்யலாம். பால் சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும். வேறு வேறு பூரணம் கொண்டும் செய்யலாம்.
(முந்திரி- சர்க்கரை, கடலைப்பருப்பு-வெல்லம், எள்ளு-வெல்லம்)