கனிவாக இருப்பதே கடவுள் வழிபாடுதான்



திருமூலர் மந்திர ரகசியம்


‘அந்தக் கோயிலில் சாமி கண்ணில் இருந்து ரத்தம் வழிகிறது...’
‘இந்தக் கோயிலில் சாமி சிலை அசைகிறது...’
‘அந்த ஊர் அம்பாள் கழுத்தில் இருந்த ‘திருமாங்கல்யம் கீழே விழுந்து விட்டது.
 அதனால் கணவன்மார்களுக்கு எல்லாம் ஆபத்து...’
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்த தகவல்கள்.
இவற்றையெல்லாம் படித்ததும், பார்த்ததும், நமக்கு ஆச்சரியம் வருகிறது.

 அந்த இடங்களையெல்லாம் தேடிப்பிடித்து ஓடி ஓடி இறைவனைத் தரிசிக்கிறோம். என்ன பலன்?ஒரு சில விநாடிகளில் தோன்றி மறையும் இப்படிப்பட்ட ஆச்சரியங்களில் எல்லாமா இறைவன் இருக்கிறான்?
திருமூலர் என்ன சொல்கிறார்?
காலினுள் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே.
- (திருமந்திரம் 2639)

கருத்து: காற்று நம்மைத் தழுவிச் செல்லும்போது உண்டாகும் இனிய உணர்வாகவும், கரும்பி னில் இனிப்புச் சுவையாகவும், பாலுக்குள்ளே மறைந்திருக்கும் நெய்யாகவும், பழத்திற்குள் இனிப்புச் சுவையான சாறாகவும், பூவை விட்டு விலகாமல் அதனோடு இரண்டறக் கலந்திருக்கும் நறுமணம் போலவும், எல்லாவற்றிலும் உயிரோடும் உணர்வோடும் ஒன்றாகக் கலந்திருக்கும் இறைவன் அந்த எல்லா உயிர்களுக்கும் காவலனாக விளங்குகிறான். இந்த உண்மை, ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரிந்திருக்கும்.

இப்பாடலில் சொல்லப்பட்ட காற்று, கரும்பு, பால், பழம், பூ என்பவற்றில் முதலாவதான காற்றைத் தவிர, மற்ற நான்கும் பார்க்கக்கூடியவை. அந்த நான்கிலும் கரும்பு- பால்-பழம் எனும் மூன்றில், கரும்பின் இனிப்பைச் சாறாகவும், பாலிலிருந்து நெய்யைத் தனியாகவும், பழத்தின் இனிப்பைச் சாறாகவும் தனியாகப் பிரித்து எடுத்து விடலாம். ஆனால், பூவில் இருந்து அதன் வாசத்தைத் தனியே பிரிக்க முடியாது.முதலில் சொல்லப்பட்ட காற்று, பார்வையில் படாவிட்டாலும், எல்லா இடங்களிலும் பரவியிருப்பது. காற்று இல்லாவிட்டால் எந்த ஜீவராசியும் வாழ முடியாது. அதுபோல, எல்லா இடங்களிலும் பரவியும், அனைத்திற்கும் ஆதாரமாகவும் இருப்பவர் இறைவன். அனைத்திலும் பிரிந்தும் பிரியாமலும் இருப்பவர் இறைவன்.

இவ்வாறு சொன்ன திருமூலர் மேலும் தொடர்கிறார். அந்த இறைவனே அனைத்திற்கும் காவலனா கவும் இருக்கிறார். இறைவனின் மேற்பார்வைல் தான் காலத்தில் மழை பெய்வதும், பயிர் பச்சைகள் தழைத்துப் பூத்துக் குலுங்குவதும், உயிர்க்குலங்கள் வாழ்வதும் நடக்கின்றன என்கிறார். ஆகவே, கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்ததைப்போல, ஏதோ ஓர் இடத்தில் தோன்றி மறைந்து போகும் ஆச்சரியத்தில் இறைவனைக் காண முயலாமல், இறைவன் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார் என்பதை உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும்.
இப்பாடலில் திருமூலர் கூறியிருக்கும்
ஓர் அபூர்வமான சொற்பிரயோகம் - ‘நாற்றம்’.
இது தூய்மையான தமிழ்ச்சொல்.

ஆனால், இன்றோ, ‘ஒரே நாற்றமாக இருக்கிறதே!’ என்று சொல்லி மூக்கைப் பிடித்துக் கொள்கிறோம். மூக்கைப் பிடிக்கும்படியாக இருந்தால், அதை ‘துர்நாற்றம்’  எனக் கூறவேண்டுமே தவிர, நாற்றம் என்று சொல்லக் கூடாது. நாற்றம் என்பது நல்
வாசனை; துர்நாற்றம் என்பது கெட்ட வாசனை.

தூய்மையான தமிழ்ச் சொல்லை வைத்து காற்றில் தொடங்கிப் பூவில் முடித்து நம் வாழ்வில் நறுமணம் வீச வழிகாட்டுகிறார் திருமூலர்.
இவ்வாறு இறைவனின் இருப்பைப் பற்றிச் சொன்ன திருமூலர், கூப்பிட்ட குரலுக்கு இறைவன்  ஓடி வருவார் என அடுத்த பாடலில் கூறுகிறார்.
ஆன் கன்று தேடி அழைக்குமது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என்நாதனை
வான் கன்றுக்குப் பாலாய் நின்ற மறைப் பொருள்
ஊன் கன்றால் நாடிவந்து உள் புகுந்ததானே.
- (திருமந்திரம் - 2627)

கருத்து: தாய்ப் பசுவைப் பிரிந்த இளங்கன்று தாயைத் தேடும். தாய் இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதற்காக குரல் கொடுத்துக் கதறி அழைக்கும். அதுபோல நானும், தாய்ப் பசுவும் பிரிந்த கன்றைப்போல, என் இறைவனை நாடி வருந்தி அழைத்தேன். தேவர்களின் உலகத்திற்கு அப்பாலாய் நின்றவரும், வேதப்பொருளுமாகிய சிவபெருமான் என்னைத் தேடி வந்தார். என் ஊன் உடம்பு வாடி வருத்தாமல் என் உள்ளத்தில் புகுந்து கொண்டார். இப்பாடலில், தாய்ப் பசுவைக் கன்று அழைப்பது போல் அழைத்ததும் இறைவன் ஓடி வருகிறார். அடியாரின் உடம்பு வாழ வருந்தாமல், உள்ளத்தில் புகுந்தார் என்பதில் விசேஷம் இருக்கிறது.

தாய்ப் பசுவிடம் கன்று, பாலை மட்டும் எதிர்பார்ப்பதைப்போல, இறைவனிடம் அவர் அருளை மட்டுமே வேண்ட வேண்டும். ஆத்மார்த்தமாக, அதாவது, “தெய்வமே! என்னை விட்டுவிட்டு எங்கே போய்விட்டாய்! வா! அருள் செய்!’’ எனக் கூப்பிட வேண்டும். கன்றின் குரல் கேட்டுத் தாய்ப் பசு ஓடிவருவதைப்போல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான இறைவனும் ஓடி வருவார்.

அது எப்படி? இறைவன் கூப்பிடு தூரத்தில் நம் கைக்கெட்டும் தூரத்திலா இருக்கிறார்? அதுதான் உண்மை. கஜேந்திரன் என்ற யானை ‘ஆதிமூலமே’ என அழைத்த குரல் கேட்டு, பரவாசுதேவன் ஓடி வந்தார் என்றால், இறைவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்பதுதானே பொருள்! மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தான். யமன் வந்து பாசக்கயிற்றை வீசினான். சிவலிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டு யமனை சம்காரம் செய்து மார்க்கண்டேயனைக் காப்பாற்றினார் என்றால், இறைவன் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறார் என்பதுதானே பொருள்!
இவ்வாறு இறைவனின் அன்புக்கு வசப்படும் தன்மையையும் எளிமையையும் கதைகள் மூலமாகவே கருத்தில் பதிய வைத்தார்கள் நமது முன்னோர்கள்.

அன்போடு கூப்பிட்டால் ஆண்டவன் ஓடிவருவார் எனச் சொன்ன திருமூலர், இப்பாடலில் மேலும் ஒரு கருத்தைச் சொல்கிறார். அடியார்களின் உடம்பு வாடாமல், இறைவன் வந்து உள்ளத்தில் புகுந்து கொள்கிறாராம். மிகவும் முக்கியமான தகவல் இது. வெறும் கைகளில் கற்பூரத்தை ஏற்றிக்கொள்வது; கூரான ஆணிகள் பதித்த மிதியடியைக் கால்களில் மாட்டிக் கொண்டு நடப்பது போன்ற குரூரமான, கொடுமையான, உடம்பை வருத்தும் எந்தவொரு வழிபாட்டையும் இறைவன் கேட்பதில்லை; ஏற்பதில்லை. அன்பு மயமான உள்ளத்தில் ஆண்டவன் புகுந்து கொள்கிறார்.

கூவி அழைத்தால் இறைவன் நாடி வருவார் என்று வழிகாட்டிய திருமூலர், ஒரு மென்மையான எச்சரிக்கையும் செய்கிறார். அவர் மென்மையாக எச்சரித்தாலும் நம் மனசு என்னவோ அவர் சொல்வதை ஏற்க மறுப்பதுடன் அவர் பக்கம் திரும்பக்கூட மறுக்கிறது. என்ன செய்வது? அதுதான் உலக இயல்பு.
திருமூலரும் உலக இயல்பைத்தான் சொல்கிறார்:
வாழும் மனைவியும் மக்கள் உடன் பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவு செய்வார்கட்கு
கூவும் துணையொன்று கூடலுமாமே.
- (திருமந்திரம் - 174)

கருத்து: ஒத்து வாழ்கின்ற மனைவி, மக்கள், உடன்பிறந்தார் என்பவர்கள், “இந்த ஆளால் எவ்வளவு பொருள் கிடைக்கும் நமக்கு?’’ என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அவர்கள் விரும்பும் பொருளை சம்பாதிப்பதிலேயே வாழ்நாளைப் போக்கியவர்கள். கடைசி காலத்தில், “என்னைக் காப்பாற்ற என்னுடன் வாருங்கள்.’’ என்று சொல்லி, அவர்களில் ஒருவரையாவது துணையாகப் பெற முடியுமா?

வாழும் காலத்தில் நம்முடன் ஒத்து வாழும் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் ஆகியோர்நம்மிடம் இருந்து பொருளைத்தான் எதிர்பார்ப்பார்கள். ‘அங்கங்கு நகையும் நட்டும், காரும் பங்களாவுமாகக் கொழிக்கிறார்கள்...’ எனத் தூண்டுவார்கள். ஏதோ முடிந்த அளவிற்காவது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக, கடுமையாக உழைப்போம். கை வறண்டுபோய், நம்மால் கொடுக்க முடியாமல் போய்விட்டால், விலகிப்போய் விடுவார்கள். ‘பிச்சைக்காரன் வேஷம் போடுகிறான் பார்!’ என்று பேசுவார்கள்.

ஒருவேளை, அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் கூட, நம்முடைய கடைசி காலத்தில் மனைவி, மக்கள், உடன்பிறந்தார் என அனைவரும் சுற்றி நின்று, “எங்கெங்கு வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்? அதில் எங்களுக்கு எவ்வளவு? கொடுப்பதை சீக்கிரம் கொடுங்கள்!’’என்பார்கள்.அந்தக் கடைசி காலத்திலும் ஓரளவிற்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு, நினைவுபடுத்திப் பார்த்து, “இன்னாருக்கு இவ்வளவு இவ்வளவு’’ என்று சொல்லி முடித்து, “என்னைக் காப்பாற்ற, என்னுடன் யாராவது ஒருவராவது வாருங்கள்!’’ என்று கூப்பிட்டால்...

ஒருவராவது வருவாரா? வரத்தான் முடியுமா? அதாவது, யாரையெல்லாம் காப்பாற்றுவதற்காக நாம் பற்பல தவறுகள் செய்து பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்தோமோ அவர்கள் யாரும் நமக்கு உதவ முடியாது; துணையாக வரமுடியாது. எந்த நேரத்திலும் உதவியும் துணையுமாக இருப்பவர் இறைவன் மட்டுமே என்று சொல்லி எச்சரிக்கிறார் திருமூலர். ஆகவே துணையாக வரக்கூடியவர் இறைவன் மட்டுமே என்ற எண்ணம் கொண்டு, உள்ளம் கனிய வேண்டும் என்று சொல்லத் தொடங்கும் திருமூலர், அதைத் தொடர்ந்து சில விளைவுகளையும் கூறுகிறார்.

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த இனத்தினுள் வீழ்ந்து ஒழிந்தாரே!
- (திருமந்திரம் - 266)

கருத்து: அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு மகிழ்பவர்கள், இறைவனின் திருவடி நிழலைக் காணும் பாக்கியத்தை அடைவார்கள். அவர்களுக்கு இறையருள் கிட்டும். உலக இன்பங்களைத் துறந்துவிடத் துணிந்து துறவு மேற்கொண்டு தவம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள். இந்த இரண்டிலும் சேராமல் உலக சுகங்களிலேயே ஆழ்ந்து, நிலையில் தாழ்ந்து இருப்பவர்கள், துணை என்று சொல்ல யாருமில்லாமல் அநாதையாக, கோபத்தீயில் வீழ்ந்து முடிந்து போவார்கள்.இப்பாடலில் மூன்று தகவல்கள் உள்ளன:

1.அடியார்கள், ஆன்மிகவாதிகள், பக்தர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் மட்டுமின்றி, அனைவரும் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.2. இறை உண்மையை அறிந்து உலக சுகங்களைத் துறந்து, தவம் செய்ய வேண்டும்.3. அந்த இரண்டிலும் ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்யாவிட்டால், கண்டவற்றில் மூழ்கிக் காணாமல் போக நேரிடும். அந்த நிலை நமக்கு ஏற்படலாமா?போன பிறவியில் நாம் யார்? அடுத்த பிறவிதான் என்ன பிறவி? யாருக்கும் தெரியாது.

நமக்குத் தெரிவது இந்த ஒரே ஒரு பிறவி, விலங்காகவோ மற்ற எதுவாகவோ இல்லாமல் கிடைத்த மனிதப்பிறவி. அப்படிப்பட்ட மிகவும் உயர்ந்ததான இந்த மனிதப் பிறவியில், மற்றவர்களிடம் கொஞ்சமாவது கனிவோடு நடக்கலாமே! அதை விட்டு கோபம், பொறாமை எல்லாம் தேவையா?

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட  துறவு நிலை. ஓரளவிற்கு அப்புறமாவது நாம் ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நாம் தேடும் நிம்மதி கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் விரும்பியவையே சுமைகளாகி, நம்மை மூச்சுத் திணற வைத்துவிடும்.இந்த இரண்டு வழிகளிலும் நடக்காமல், மூன்றாவதாகப் புதுப்பாதையில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.

அதாவது, வாகனத்தில் செல்லும்போது இடது அல்லது வலது என எந்த அறிவிப்பும் செய்யாமல், கண்ட பக்கம் திரும்புவதைப் போல, கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனக் கண்டபடி வாழ்க்கைப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம்.நமக்கும் துன்பம். நம்மை நம்பி இருக்கும் மற்றவர்களுக்கும் துன்பம்.

அனைவரும் நம்மை விட்டு விலகி தூரப்போய் விடுவார்கள். கோபம் பொங்கும், கதை முடிந்துவிடும். என்ன பயன்?கனிவாக இருப்பதே கடவுள் வழிபாடு எனத் திருமூலர் சொல்வதை உணர்ந்து கனிவாக இருக்க முயல்வோம்! இல்லையேல் காலம் நம்மை வெம்ப வைத்துவிடும்.

(மந்திரம் ஒலிக்கும்)