சீடனின் மேன்மை,குருவின் பொறாமை!



எங்கும் சோலைகள் சூழ்ந்து, விருந்தாக இருந்தது ஸ்ரீபெரும்புதூர். திருவரங்கத்தை எப்படி ‘வண்டினம் முரலும் சோலை’ என்று ஆழ்வார் பாடிக் களித்தாரோ, அதற்கு இணையாக ஸ்ரீபெரும்புதூர் திகழ்ந்தது. எங்கு நோக்கினும் வண்டுகள் ‘ஹரீ...’ என்று ஐங்காரத்வனியில் ரீங்காரமிட்டபடி பறந்து கொண்டிருந்தன.

மலருக்கு மலர் அவை தாவுவதைப் பார்த்தால், ஒரு கோபிகையின் கையிலிருந்து மற்றொரு கோபிகையின் கைக்கு மாறிய கண்ணபிரானைப்போல இருந்தது. மலரிலுள்ள தேனைக் குடித்ததால் மதம் பிடித்து அப்படி ஒரு மயக்க ரீங்காரத்தை அவை எழுப்பின. எல்லா இடங்களிலும் விதவிதமான வாசனைப் பூக்கள் கொல்லென்று மலர்ந்திருந்தன.

இத்தகைய இயற்கையோடு இயைந்த இறைத் தன்மை சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரிலே அவதரித்தவர்தான் ஸ்வாமி ராமானுஜர். இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே ‘திரு’ புகழைக் கொண்டிருக்கின்றன. ஒன்று திருவாதிரை. மற்றொன்று திருவோணம். திருவாதிரையில் அவதரித்தவர் ஸ்வாமி ராமானுஜர். திருவோணத்தில் பகவத் அவதாரம். ஆதிரை ஓணம் என்று சொல்லாது திரு சேர்த்து திருவாதிரை, திருவோணம் என்றானது, இதனால்தானோ!குழந்தையின் தாய்மாமனாகிய பெரிய திருமலை நம்பிகள் தனது தங்கை ஸ்ரீதேவிக்கு (காந்தியம்மாள்) ஆண்மகவு பிறந்ததை அறிந்து ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார்.

இந்தக் குழந்தை சர்வ லட்சணமும் பொருந்தியிருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.பிற்காலத்தில் சர்வ சாஸ்திரங்களையும் கற்று பெரிய மகானாகத் திகழும் என்று திடமாக நம்பினார். ராமாவதாரத்தில் லட்சுமணனைப்போல, இக்குழந்தையும் லட்சுமி கடாட்சத்தோடு இருந்ததைக் கண்டு லட்சுமணன் என்றே திருநாமம் சூட்டினார். ராமாவதாரத்தில் இளைய பெருமாளைப்போல இந்த கலிகாலத்தில் ஒரு இளையாழ்வார் ஜனித்தார் என்று மிகவும் சந்தோஷப்பட்டார்.

பெரிய திருமலை நம்பிகளின் மற்றுமொரு இளைய சகோதரியான பெரிய பிராட்டியும் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு கோவிந்தன் என்று திருநாமமிட்டு இந்தக்
குழந்தையும் பெரிய ஞானஸ்தனாக விளங்குவான் என்று அனுக்கிரகம் செய்தார். இவர் அவதரித்த இடம், மேலை மங்கலம் எனப்படும் மழலைமங்கலம். தற்போது மதுர மங்கலம் என்று வழங்கிவருகிறது. காஞ்சிபுரத்திற்கு அருகே சுங்குவார் சத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 

ஸ்ரீராமானுஜருக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பெற்று 12 வயதுக்குள் வேதங்களை அத்யயனம் செய்விக்கப்பட்டார். இவருக்கு ஈடாக, ஒன்றுவிட்ட சகோதரரான கோவிந்தனும் வேதவேதாந்தங்களில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்தார். இருவரும் ஒன்று சேர்ந்து காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் திவ்ய தேசத்தில் யாதவப் பிரகாசர் என்கிற பண்டிதரிடம் வேதாந்தம் பயிலத் தொடங்கினர்.

யாதவப் பிரகாசர், ஒரு சமயம் வேதத்திலிருந்து ‘‘ஸத்யம், ஞானம், அனந்தம் ப்ரஹ்ம’’, என்ற ஒரு வாக்கியத்திற்கு அர்த்தம் சொன்னார். இவர் சொன்ன விளக்கம் அனர்த்தமாகப் பட்டது ராமானுஜருக்கு. காரணம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற ஒன்றிலும் கூறப்படாத, ஏற்றுக்கொள்ள முடியாத, வேறு எந்த குருவினாலும் சொல்லப்படாத வக்கிர விளக்கமாக, தன் சொந்த அபிப்ராயம் கலந்து சொன்னார்.

 இதைக்கேட்டு பொறுக்க மாட்டாத ஸ்வாமி ராமானுஜர், இப்படி ஒரு பொருந்தாத வியாக்யானம் சொல்லலாகுமா என்று குருவிடமே பவ்யமாகக் கேட்டார். உடனே கோபம் கொப்புளித்தது யாதவப் பிரகாசருக்கு. ‘‘அப்படியாயின் நீரே விளக்கம் கூறும்,’’ என்று எரிச்சலுடன் சொன்னார். உடனே வேத அர்த்தங்களை உகந்து அருளினார் ராமானுஜர். அந்த வியாக்யானங்களைப் பின்னால்  மஹான்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

 என்ன விளக்கங்கள் அவை?1.ஸத்யம் என்றதால் உலகமே நிலையில்லாதது. பரப்பிரம்மம் என்பது அழியாத சாசுவதமான ஸத்யம் ஆகும். ஸத்யம் என்கிற குணத்தை உடையது என்று சொல்லும்போது பகவானின் குணத்தை வர்ணிப்பதாகவும் உள்ளது. ஸத்யமே ஸ்வரூபமாக உள்ளான் என்று சொல்லும்போது பகவானின் சொரூப லட்சணம் வர்ணிக்கப்படுகிறது.

2.ஞானம் என்றதால் பகவானான பரப்பிரம்மத்தை சாதாரண ஜீவனிடமிருந்து பிரித்துக் காட்டி, ஜீவன் அஞ்ஞானி, ஆனால், பரமாத்மாவோ ஸர்வக்ஞானி, அதாவது, ஞானமே வடிவாக உடையவன் என்கிற குண பூர்த்தியையும் சொரூப லட்சணத்தையும் சேர்த்துச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.அனந்தம் என்றதால் மற்ற ஜீவராசிகள் எல்லாமே சுகம், துக்கம் என்கிற இரட்டையிலே மாட்டிக்கொண்டு தவிக்கிறது என்றும், அப்படியில்லாமல், பரமாத்மா என்பது சதாசர்வ காலமும் ஆனந்த மூர்த்தியாகவே திகழ்கிறான் என்றும் காட்டப்படுகிறது. ஆனந்த மூர்த்தி என்றால் ஆனந்தத்தையே சொரூபமாகவே உடையவனாக இருக்கிறான் என்று பொருள்.

இங்கு குருவை மிஞ்சி, சிஷ்யன் பேசுகிறான் என்று கொள்ளக் கூடாது. சிஷ்யனுக்கு கர்வம் என்றும் நினைக்கக் கூடாது. ஒருவர், குருவாகவே இருந்தாலும், வேதத்திற்கு தவறான அர்த்தம் கற்பிக்கும்போது மகான்களுக்கு பொறுக்காது.

 பிறகு ஏன் இவரை குருவாக ராமானுஜர் ஏற்க வேண்டும் என்று கேட்கலாம். பொதுவாகவே அவதார புருஷர்கள், ஒரு குரு வேண்டும் என்பதற்காகத்தான் குருவை அடைகிறார்களே தவிர, இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்காக அல்ல! பிற்காலத்தில், இப்பேர்ப்பட்ட மகான் என்னுடைய சிஷ்யனாக இருந்தார் என்ற அந்த குரு பெருமையுடன் சொல்லிக்கொள்வதற்காக, இப்படி மஹான்கள் ஒரு குருவை அடைகிறார்கள்!

வேறொரு சந்தர்ப்பத்தில் சாம வேதத்திலுள்ள ஒரு வாக்கியத்தை எடுத்து தவறான அர்த்தத்தை போதித்துக் கொண்டிருந்தார் யாதவ பிரகாசர். இதிலும் ராமானுஜருக்கும் கருத்து வேற்றுமை உண்டானது. இருவருக்கும் வாதமாக வளர்ந்தது. யாதவப் பிரகாசருக்கு ராமானுஜர் தன்னை மிஞ்சி விடுவாரோ என்கிற அச்சம் தலைதூக்கியது. அதற்காக அவரை வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ராமானுஜரையும், கோவிந்தனையும் தவிர்த்துத் தன் பிற சிஷ்யர்களைத் தனியாக அழைத்தார்.

அவர்களின் மனதில் விஷவிதையை ஊன்றினார். ‘ராமானுஜனை எப்படியாவது கொன்று விட நினைக்கிறேன். அப்படி அவனை அழிக்காவிடில், நீங்களும் என்னிடத்தில் பாடங்களை படிக்க முடியாது. அதற்கு ஏதாவது உபாயம் கூறுங்கள்,’’ என்று கேட்டார்.

சிஷ்யர்களில் ஒருவனான ராமலிங்கபிள்ளை என்பவன் உடனே எழுந்து, ‘‘நாம் வெளியூருக்குச் சென்று அங்கு பாடம் நடக்கும் என்று அறிவிப்போம். அது காசி க்ஷேத்ரமாக இருக்கட்டும்.
அப்படி வெளியூர் தூரதேசமாக இருப்பதால் பல மாதங்கள் நடைபயணமாகச் செல்ல வேண்டி யிருக்கும். வழியிலே ஜன நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் வைத்து ராமானுஜரை கொன்று விடலாம் என்று ஆலோசனைக் கூற அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த விஷயத்தை ரகசியமாக பாதுகாத்தனர்.

மழைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பித்தது. இதுதான் சரியான தருணம் என்று எண்ணி யாதவ பிரகாசர் காசி க்ஷேத்ரத்திற்குபோய் மேற்படி பாடங்களைத் தொடரவேண்டும் என அறிவித்தார். ராமானுஜருக்கு உடனே செல்ல வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆனால், கூடவே துக்கமும் சூழ்ந்து கொண்டது. காரணம் காசிக்கு சென்று வர பல மாதங்களாகும்.

அதுவரை தனிமையில் தன் தாயாரை ஸ்ரீபெரும்பூதூரிலே விட்டுச் செல்ல வேண்டுமே என்று கவலைப்பட்டார். தனது தாயாரிடம் சென்று விண்ணப்பித்தார். தாயோ, எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார். ஆனால், ராமானுஜரோ துக்கம் மேலிட, ‘‘நீங்கள் எப்படி இங்கு தனியாக இருப்பீர்கள்?’’ என்று கேட்டார். இதற்கு சற்று இரண்டு வருடங்கள் முன்புதான் தன் தந்தை கேசவ ஸோமயாஜீ மறைந்திருந்தார். ‘‘அம்மா, நீங்கள் வேண்டுமானால் மேலமங்கலத்திற்கு (கோவிந்தனின் தாய் வீடு) செல்கிறீர்களா! அல்லது, உமது மூத்த சகோதரர் பெரிய திருமலை நம்பிகளை (இராமானு ஜனின் தாய் மாமன்) அழைத்து வந்து துணைக்கு வைத்து விட்டுச் செல்லவா?’’ 

ஆனால், எதற்குமே இசையாத தாயார், ‘‘ராமானுஜா, நீ காசிக்குச் சென்று மேற்படிப்பை தொடர்வாயாக. தொடர்ந்து படித்து வா. எனக்கு தனிமை யில் இருப்பதில் எந்தக் குறையும் இல்லை. இங்கு எனக்கு ஆதிகேசவப் பெருமாளே துணையாக இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறாய்? கோயிலுக்குச் சென்று கைங்கரியம் செய்வதே என் வேலை. அதை விட்டுவிட்டு வேறெங்கு நான் எங்கு செல்வது? மேலும், அவரவர் இடம் அவரவர்க்கு வைகுந்தம்.

இங்கு பெருமாளை சேவித்து அவருடைய பிரசாதத்தை உண்டு, அவருக்குப் பலவாறாக கைங்கரியம் செய்துகொண்டிருக்க விரும்புகிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே. உனக்குத் துணையாக, கோவிந்தனையும் அழைத்துக்கொண்டு செல்’’ என்று சொல்லி தாயார் அனுப்பிவைத்தார்.  ஒரு வியாழக்கிழமை நன்னாளில் யாத்திரைக்கு எல்லோரும் ஆயத்தமானார்கள். ராமானுஜரும் கண்ணீர் மல்க தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். ராமானுஜர், கோவிந்தன் உள்ளிட்ட பல சிஷ்யர்களுடன் யாதவப் பிரகாசர் சிவிகையில் புறப்பட்டார்.

(வைபவம் தொடரும்)