பஞ்ச துவாரகை



பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகாதீசன் என்றுதான் அழைப்பார்கள். இன்றும் துவார கையின் புராண மிச்சங்கள் கடலுக்கடியில் இருப்பதை ஆராய்ச்சி செய்துள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. இதை பஞ்ச துவாரகைகள் என்கின்றனர்.

பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. கிருஷ்ண ஜயந்தி நன்நாளில் இந்த ஐந்து துவாரகை களையும் தரிசிப்போம்.

மோட்ச துவாரகை

பஞ்ச துவாரகையில் முதலாவது மோட்ச துவார கையே. இதனை வைகுண்டம் செல்ல நுழைவாயில் என்கிறார்கள். குஜராத் மாநிலத்திலுள்ள ‘ஓசா’ துறைமுகத்திற்கு அருகே கோமதி புண்ணிய நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணரை துவாரகநாத்ஜி என்றும் கல்யாண நாராயணர் என்றும் போற்றுகிறார்கள். இங்குள்ள மூலவர் சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களோடு சேவை சாதிக்கிறார்.

காலையில் திருப்பள்ளியெழுச்சி முதல் சயனம் வரை இங்கு சகல நிகழ்ச்சிகளும் நடைபெறும். மணிக்கொருமுறை அலங்காரம் செய்வார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கும் சந்நதிகள் உண்டு. புராணத்தில் இத்தலத்தை சுதாமபுரி என்றழைத்தார்கள். இங்கு சுதாமா என்கிற குசேலருக்கும் தனிக் கோயில் உள்ளது. இது ஐந்து மாடிகளைக் கொண்டது. அறுபது அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இந்த மாடிகளைத் தாங்குகின்றன. இந்தியாவின் ஏழு தொன்மையான நகரங்களில் இதுவும் ஒன்று.

பேட் துவாரகை

துவாரகையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலுள்ளது. இது தனித் தீவாக அமைந்துள்ளது. ராமந்த்விப தீவு என்றழைக்கின்றனர். இங்கே கிருஷ்ணர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார் என்று சொல்கிறார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கு இங்கு தனித்தனியாக அறைகள் இருந்தன. கோபிதுலாப் என்கிற இடத்தில் புண்ணிய தீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கு கிருஷ்ணர் பல கோபிகைகளுக்கு மோட்சம் அளித்தார். இங்கு மண் கோபி சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் ருக்மிணி கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரும் துவாரகாநாத்ஜிதான். இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன், சதுர்புஜனாக கருமை நிறத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தைபோலவும், அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். ருக்மிணிதேவிதான் உற்சவர். இங்கு ஐந்து கோயில்களும், சங்க தீர்த்தம் என்ற புகழ்பெற்ற தீர்த்தமும் உள்ளன.  

ஸ்ரீநாத் துவாரகை

குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. பால கிருஷ்ணராக இங்கு கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இவர், ஸ்ரீவல்ல பாச்சார்யார் எனும் மகானின் பூஜைக்குரிய மூர்த்தியாவார். இங்கு தினமும் எட்டு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. கரும்புப் பளிங்குக் கல்லில் அர்ச்சாவதாரமாக அருள்கிறார். இந்திரனால் ஏவப்பட்ட மழையிலிருந்து காப்பதற்காக கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடித்தபடி நிற்கும் கோலம். ஸ்ரீநாத்ஜி என்றழைக்கின்றனர். இக்கோலத்தையே வல்லபர் எல்லோரையும் வணங்கச் செய்தார்.

கன்க்ரோலி துவாரகை

ராஜஸ்தானிலுள்ள இத்தலம் உதய்பூர் நகரத்தி லிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜஸ்மந்த் எனும் ஏரி அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர், துவாரகாதீஷ் என்று அழைக்கப்படுகிறார். வல்லபாச்சார்யாரை பின்பற்றுவோருக்கு இக்கோயில் மிக முக்கியமானதாகும். மதுராவிலிருந்து இந்த மூர்த்தி கொண்டு வரப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

மூலத் துவாரகை

குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள கொஷனார் எனும் ஊருக்கு அருகேயுள்ளது. இங்கு பகவான் கருடக் கொடி கோட்டை யில் பறக்க, அரசாண்டார். மேலும் ஸ்ரீகிருஷ்ணர், ஜரா எனும் வேடுவனால் அம்பு எய்யப்பட்டு வைகுண்டம் எய்தினார் என்றும் அதன் பிறகே கடலில் இத்தலம் மூழ்கியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

 கிருஷ்ணா