சந்தோஷம் எல்லாம் அருளும் ஷோடஸ விநாயகர்கள்



29.8.2014 விநாயகர் சதுர்த்தி


காஞ்சி மகாசுவாமிகள், விநாயகப் பெருமானின் 16 திருநாமங்களைப் பற்றி ‘தெய்வத்தின் குரலி’ல் அருளியிருக்கிறார். அந்த தெய்வீக விளக்கங்கள் இங்கே: விநாயகரின் பதினாறு (ஷோடஸ) நாமங்கள் எவை? ஸுமுகச்ச ஏக தைந்தைச்ச கபிலோ கஜகர்ணக: லம்போதரச்ச விகட விக்னராஜோ விநாயக:தூமகேது கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன: வக்ரதுண்ட சூர்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ: இந்த ஸ்லோகப் பட்டியலில் உள்ள நாமங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஸுமுகர்

விநாயகருக்கு விசேஷமான ஷோடஸ நாமங்கள் உண்டு. அந்த பதினாறில் முதலில், முகப்பில் வருகிற பேர் ஸுமுகர். வரவேற்கும்போது ஸுமுகமாக  முகமன் கூறுவது என்பார்கள். அப்படி அழைக்கிற மாதிரி முதல் பேர் அமைந்திருக்கிறது. சமூகத்தில் எல்லா ஜனங்களும் ஸுமுகமாக, அதாவது, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று சொல்கிறோம். ஸுமூகம் என்றால் நல்ல முகம். அன்பும் ஆனந்தமும் பொங்கிக் கொண்டிருப்பதுதான் நல்ல முகம். தமிழில் இன்முகம் என்று சொல்லுவது.

ஹ்ருதயத்தில் உள்ள அன்பும் ஆனந்தமும் முகத்திலே வெளிப்படுவது ஸுமுகம். அப்படி உலகத்திலுள்ள ப்ரேமையை வெளியில் காட்டும் ஸுமுகத்தை உடையவராக விக்நேச்வரர் இருக்கிறார். நல்ல மனசைக் காட்டும் நல்ல முகம் ஸுமுகம். அப்படிப்பட்ட முகம் படைத்தவர் விக்நேச்வரர்.

சுக்லாம்பரதரம் ஸ்லோகத்தில் ப்ரஸன்ன வதனம் என்று வருகிறதல்லவா?அதுவேதான் ஸுமுகம். அன்பிலேயும், அன்பாக இருந்தால் ஏற்படும் ஆனந்தத்திலேயும் உள்ளம் அப்படியே மலர்ந்து அது மலர்ச்சியாக வெளியே தெரிவதுதான் ப்ரஸன்ன வதனம். தெளிவு, ப்ரகாசம் ஆகியவைதான் ப்ரஸன்னம். ஸுமுகத்தில் வருகிற ஸுவும் அந்த ப்ரஸன்னத்தைக் குறிப்பதுதான்.

ஏகதந்தர்

இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு. முதலிலே இவருக்கும் இரண்டு (கொம்பு) இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள். வியாஸர் பாரதம் சொல்லுகிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருக்கிறதென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஓடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை.

 அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய அழகான அங்கத்தை, யானையின் அங்கங்களிலேயே ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை  உயிரோடு இருக்கும் போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை. இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் ப்ரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக என்பும் உரியர் பிறர்க்கு என்று காட்டிய கதை.

கபிலர்

மூன்றாவது நாமா கபிலர். பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம். பல ரூப பேதங்களில் வெவ்வேறு நிறங்களாக விக்நேச்வரர் இருக்கிறார். சுக்லாம்பரதரம் ஸ்லோகத்தில் சசிவர்ணம் என்று நிலா மாதிரி வெளுப்பாகச் சொல்லியிருக்கிறது. கும்பகோணத்திற்கு கிட்டே இடும்பாவனத் திலும் வெள்ளைப் பிள்ளையார், ச்வேத விநாயகர் இருக்கிறார். ஔவையார், அகவலிலோ அவரை நீலமேனி என்று சொல்லியிருக்கிறாள். அவளே வாக்குண்டாம் பாட்டில் துப்பார் திருமேனி என்று பவள வர்ணமாகவும் பாடியிருக்கிறாள். பல ரூபங்களிலும் குழந்தை ஸ்வாமி அந்தக் கிழப்பாட்டிக்கு தரிசனம் தந்திருப்பார். வடக்கேயெல்லாம் விக்நேச்வரர் என்றாலே ஒரே சிவப்பாக ஸிந்தூரத்தைப் பூசித்தான் வைத்திருப்பார்கள்.

நம் சோழ தேசத்தில் கணபதீசுவரம் என்றே பேர் பெற்றிருக்கிற கோயில் இருக்கிற ஊருக்கு செங்காடு முன்னே திருவும் பின்னே குடியும் சேர்த்துக்கொண்டு திருச்செங்காட்டாங்குடி என்று பேர். ‘டா’வைக் குறிலாக்கித் திருச்செங்கட்டன்குடி என்று தமிழ் நூல்களில் இருக்கும். அது செங்காடு ஆனதற்குக் காரணம் விக்நேச்வரர் கஜமுகாஸுரனை ஸம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் அந்தக் காடு முழுதும் பாய்ந்ததுதான். அப்போது பிள்ளையாரும் செக்கச் செவேலென்று ஆகிவிட்டார். இல்லை. செக்கச் செவேல் இல்லாமல் கறுப்பான ஆனை உடம்பில் ரத்த வர்ணம் தோய்ந்து கபில நிறமாகி விட்டாரென்று வைத்துக் கொள்ளலாம்.

கஜகர்ணகர்

அடுத்த பேர் கஜகர்ணகர். அப்படியென்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறார்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது. யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்?

மற்ற ஸ்வாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிசாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரஹங்கள் பண்ணியிருக்கும். இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த ஸ்வாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டு பிடிக்கும்படியே இருக்கும். அநேகமாக, பெரிசாகத் தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு.

அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு சம அளவாக இரண்டு பக்கமும் விரிந்து விசாலமாக ப்ரகாசிக்கிறது. நாம் பண்ணும் பிரார்த்தனையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது ஸ்வாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்ததும் தெரியாமலும் இருந்தால் என்னவோபோல்தானே இருக்கிறது? கஜகர்ணகராக விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக் கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு  நம் ப்ரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார் என்ற உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறார்.

லம்போதரர்

அடுத்த பேர் லம்போதரர். தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர். தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது.

அண்டாண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா(வு) மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே, அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான். ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர்.

மா என்றால் யானை என்று அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா(வு)ச் சொப்பு இருக்கிற மாதிரி ப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற மாவின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக் கொண்டிருக்கிறார். உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராக வைத்துக் கொண்டிருக்கிறார்.

உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் (உருவகம்). அதைக் காட்ட உருண்டையான தொப்பை வயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார். புரந்தரதாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும்போது பிள்ளையார் கீதத்தை லம்போதர லகுமிகரா என்றே ஆரம்பித்திருக்கிறார். லகுமிகரா என்றால் ‘லக்ஷ்மிகரா’ ஸௌபாக்கியங்களை உண்டாக்குபவர் என்று அர்த்தம்.

விகடர்

அடுத்த பேர் விகடர்.  பரிஹாசம், கேலி, சிரிக்கச் சிரிக்கப் பண்ணுவதற்கு விகடம் என்று சொல்கிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதூர்யமும் இருக்கும். விகடகவி என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டுப் பண்ணுபவரைச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திரும்பப் பார்த்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுப் பண்ணுவதை அகடவிகடம் என்பார்கள். விக்நேச்வரர் நிறைய விகடம் பண்ணுபவர்.

அப்பா, அம்மா ஸாக்ஷாத் பார்வதீ பரமேச்வராள் ஊடல் பண்ணிக் கொண்டு கோபமும் தாபமுமாக இருக்கும்போது அவர் ஏதாவது வேடிக்கை குறும்பு பண்ணி அவர்களை ஒன்று சேர்த்து விடுவார். காக்காயாகப் போய் அகஸ்தியரை விகடமாக ஏமாற்றி நமக்குக் காவேரி கிடைக்கும்படிப் பண்ணுவார்.

பிரம்மச்சாரியாகப் போய் விபீஷணரை ஏமாற்றி காவேரி தீரத்தில் ஸ்ரீரங்கநாதர் ப்ரதிஷ்டையாகும்படி லீலை பண்ணுவார். கோகர்ண க்ஷேத்திரத்திலே அவனுடைய அண்ணாவான ராவணனையும் இதே மாதிரி அவர் ஏமாற்றி விளையாட்டுப் பண்ணித்தான் சிவலிங்கம் பிரதிஷ்டையாகும்படிச் செய்திருக்கிறார். இதெல்லாம் விநாயகர் விளையாட்டாகப் பண்ணினதே.

விநாயகர்


விநாயகர் என்பது அடுத்த பேர். ‘பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. பிள்ளை யார் சதுர்த்தி என்று பேச்சில் சொல்வதையே விநாயகர் சதுர்த்தி என்றுதான் நாம் குறிப்பிடுவோம். வடக்கே கணேஷ் சதுர்த்தி என்பார்கள். ஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோயில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். விநாயகர் அகவல் என்ற ஔவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்துக்குப் பெயர் இருக்கிறது. நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.

தூமகேது

தூமகேது என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே (உற்பாதம் விளைவிப்பதாகவே) எடுத்துக் கொள்கிறோம்.

காரணம், தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்திரம் லோகத்துக்கு அமங்கலத்தைக் குறிப்பது. லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருக்கிறது. கணபதி என்பது இன்னொரு அவதாரம்.

ஷோடஸ நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜானனர் என்பவை அதிலே வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தான் இந்தப் பேர் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று புரிந்தது. தூமஸுரன் எனும் அஸுரனை விஷப் புகை கொண்டு விநாயகர் அழித்ததால் தூமகேது என்று அவருக்குப் பெயர் நிலைத்த தாம். தூமம் என்பதை தூம்ரம் என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.

கணாத்யக்ஷர்

அத்யக்ஷர் என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர். தலைவர். ஸமீப காலம்வரை வைஸ் சான்ஸ்லர்களை உப அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம். கணபதி, கணேசர் (கணஈசர்) , கணாதிபதி (கணஅதிபதி), கணநாதர் என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தமோ அதுதான் கணாத்ய க்ஷர் என்பதற்கும் அர்த்தம். பரமேச்வரன் தம்முடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விக்நேச்வரரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக இளைய பிள்ளை ஸுப்ரமண்யரையும் வைத்தார்.

‘கஜாநநம், பூதகணாதி ஸேவிதம்’ என்கிறோம். இளைய பிள்ளையை தேவஸேநாதிபதி என்கிறோம். அவர் இரண்டு விதத்தில் அப்படி இருக்கிறார். தேவர்களின் ஸேனைக்கு அதிபதி; தேவேந்திரனின் குமாரியான தேவஸேனைக்குப் பதி! தேவர்களுக்கு ஆதிபத்யம் தாங்குவதைவிட, பூதங்களைக் கட்டி மேய்த்து அடக்கியாளுவதுதான் கஷ்டம்.

மூத்த பிள்ளை இந்தக் கஷ்டமான பொறுப்பை ‘ஈஸி’யாக ஆற்றிக் கொண்டு ஆனந்தமாயிருக்கிறார்.தேவ கணம், மநுஷ்ய கணம் ஆகியவையும் அவருடைய மஹாசக்தியையும் அருள் உள்ளத்தையும் தெரிந்து கொண்டு அவருக்கு அடங்கி பூஜை பண்ணத்தான் செய்கின்றன. ஆனபடியால் அவர் கணாத்யக்ஷர் என்கிறபோது சகலவிதமான ஜீவகணங்களுக்குமே அத்யக்ஷர் என்று சொல்லலாம்.

பாலசந்திரர்

அடுத்த பேர் ‘பாலசந்திரர்’. உச்சரிப்பை கவனிக்க வேண்டும். இள வயஸுச் சந்திரனின் பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ? பாலக்ருஷ்ணன், பால ஸுப்ரமண்யன் மாதிரி பாலசந்திரன் என்ற எண்ணமாயிருக்கலாம். பால்ய லீலா விசேஷங்கள் அந்த இரண்டு மூர்த்திகளுக்கும் நிறைய உண்டாதலால் அந்த இரண்டு பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வால்மீகி ராமாயணத்தில் ராமருடைய பால லீலா வர்ணனையே இல்லை. அவதாரத்தைச் சொல்கிற அத்யாயத்திலேயே சட்டென்று ‘தசரதர் நாலு பிள்ளைகளுக்கும் கல்யாணத்தைப் பற்றி யோஜிக்க ஆரம்பித்தார். அப்போது விச்வாமித்ரர் வந்தார்’ என்று ஒரே ஓட்டமாக ஓட்டி விடுகிறார். அதனால்தான் பாலக்ருஷ்ணன் மாதிரி பாலராமன் என்று பேர் எதுவுமில்லை.

சந்திரனுக்கும் பால்ய லீலை விசேஷம் எதுவுமில்லை. பிறையை பாலசந்திரன் என்பதுண்டு. அது தேய்ந்து மூளியான ரூபம். அதனால் அந்தப் பெயர் வைத்துக் கொள்வது மங்களமில்லை. சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவர் என்றால் பரமசிவன் என்றே நமக்குச் சட்டென்று தெரிகிறது. ஆனால், இன்னும் இரண்டு பேருக்கும் அந்தப் பெருமை உண்டு. ஒன்று அம்பாள். ‘சந்த்ரகலாவதம்ஸே’ என்று காளிதாசன் (ச்யாமளா தண்டகத்தில்) சொல்கிறார்.

ஆசார்யாளும் அவள் பதியுடைய இடது பக்கத்தை மட்டுமில்லாமல் ரூபம் முழுதையும் தானே அபகரித்து கொண்டுவிட்டாற் போலிருக்கிறது என்று வேடிக்கை பண்ணி ஸ்துதிக்கிற இடத்தில் அவளுடைய மகுடத்தில் சந்திரன் இருப்பதை ‘சசி சூடால மகுடம்’ என்கிறார். (லலிதா) ஸஹஸ்ர நாமத்திலும் ‘சாரு சந்த்ர கலாதரா’ என்று இருக்கிறது. பரமேச்வரனின் பத்தினி மட்டுமின்றி மூத்த புத்திரரும் சந்திரனை சிரஸில் வைத்துக் கொண்டிருப்பவர்.       

கஜானனர்

கஜானனர் என்பது அடுத்த பெயர். யானைமுகர் என்று அர்த்தம். ‘கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே’ என்று ஔவையார் கூப்பிட்ட கரிமுகர். ஆனைக்கு ஏகப்பட்ட சிறப்புகள். சரீர பலம், புத்தி பலம், தன்னுடைய பெரிய பலத்தினால் ஒரு தொகை தொகைத்தால் (துவை துவைத்தால்) சட்டினியாகப் போகிற மனிதனிடம் எளிமையாக அடங்கி அவன் பழக்குகிறபடி லோகோபகாரமாக பெரிய பெரிய மரங்களைத் தூக்கி வருவது, யுத்தத்தில் எதிரிப் படையை அழிப்பது, கோட்டை வாசலை மோதி உடைப்பது என்றிப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற பண்பு, ஸத்வ ஆஹாரமாகத் தாவரங்களைத்தான் புஜிக்கிறது.

கையின் ஸ்தானத்தில் தும்பிக்கை என்ற விசேஷ அங்கத்தைப் பெற்றுள்ள மிருகம் அது ஒன்றுதான். வேற எந்த மிருகமாவது ஸ்வாமிக்கு யானை சாமரம் போடுகிற மாதிரிப் போட முடியுமா? தும்பிக்கையைத் தூக்கி சலாம்தான் போட முடியுமா? ஆச்சரியமாக ஒரு விஷயம் ஒருத்தர் எழுதியிருக்கிறார். இத்தனூண்டு ஊசியையும் கொந்தி எடுக்கக் கூடியதாகவும் எத்தனாம் பெரிய தேக்கு மரத்தையும் வளைத்துச் சுருட்டித் தூக்கக் கூடியதாகவும் இருக்கும் ஒரே கருவி உண்டா என்றால் இல்லை. பகவான் ஸ்ருஷ்டித்த யானையின் தும்பிக்கைதான் அந்த இரண்டையும் பண்ணுகிறது.

வக்ரதுண்டர்

அடுத்தாற்போல வருகிற பேர் ‘வக்ரதுண்டர்’. முகத்துக்கு உள்ள பல பெயர்களை ‘அமரம்’ சொல்லும்போது ‘துண்டம்’ என்பதையும் பார்த்தோம். பொதுவாகத் துண்டம் என்றால் முகமானாலும், மூக்கு விசேஷமுள்ள வராஹம், கஜம் ஆகியவற்றின் விஷயத்தில் துண்டம் என்பது மூக்கையே குறிக்கும். வராஹத்தின் மூக்கு போக போகச் சின்னதாகிக்கொண்டு வந்து முடிகிறது. வராஹத்திற்கு முதலில் அதே மாதிரி சூம்பிக் கொண்டு வந்தாலும் முடிகிற இடத்தில் மூக்கு பெருத்து ஒரு விளிம்பு கட்டிக் கொண்டு முடிகிறது.

யானைக்கோ மூக்கே தும்பிக்கையாகத் தொங்குகிறது. அந்தத் தும்பிக்கையைத்தான் துண்டம் என்பது. பக்ஷிகளுக்கு நீளமாகக் கூராகப் போய்ப் புள்ளியாக மூக்கு முடிகிறது. அலகு என்று அதற்கு தமிழில் தனிப் பெயர். ஸம்ஸ்க்ருதத்தில் அதையும் துண்டம் என்றுதான் சொல்வது. ‘வக்ரதுண்டம்’ என்கிற இடத்தில் ‘வக்ர’த்துக்குக் கெட்ட அர்த்தம் எதுவுமில்லை. ‘வளைந்துள்ள தும்பிக்கை’ என்றுதான் அர்த்தம். பிள்ளையார் தும்பிக்கையை பக்கவாட்டாக வளைத்துக் கொண்டிருப்பதால் வக்ரதுண்டர்.

வக்ரதுண்ட மஹாகாய என்று ஸ்தோத்ரம் சொல்கிறோம். ‘ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்’ என்று தீக்ஷிதர் பாடியிருக்கிறார். வலம்புரியாகத் தும்பிக்கையை வளைத்தால் அதுவே ப்ரணவ ஸ்வரூபம்; ஓம் என்ற அக்ஷரரூபம் அப்போதுதான் வரும். ஆகக்கூடி அவர் தும்பிக்கையை நேராகத் தொங்கவிடாமல் பக்கவாட்டாக வக்ர துண்டமாகக் கொண்டு போயிருப்பதால்தான் ப்ரணவ ஸ்வரூபம் கிடைக்கிறது. ‘வக்ரதுண்டர்’ என்று நாமம் கொடுத்திருப்பதன் விசேஷம் அதுதான்.

கிருஷ்ணன் பண்ணிய திருட்டுகளை ஸ்மரித்தால் நமக்குத் திருட்டுப் புத்தி போகும்; அவன் ராஸகேளி பண்ணினதை ஸ்மரித்தால் நமக்குக் காமம் நசித்துப் போகும் என்று சொல்வார்கள். அப்படி, விக்நேச்வருடைய வக்ர துண்டத்தை ஸ்மரித்தால் நம்முடைய வக்ர குணங்கள் போய்விடும்.

சூர்ப்பகர்ணர்

சூர்ப்பகர்ணர் என்றால் முறம் போன்ற காதுகளை உடையவர். சூர்ப்பம் என்பது முறம். சூர்ப்பணகை என்றால் முறம் போன்ற நகம் உடையவள். ‘சூர்ப்பநகா’ என்பது ஸம்ஸ்க்ருதப் புணர்ச்சி விதிகளின்படி ‘சூர்ப்பணகா’ என்று ஆகும். நகமே முறத்தளவு என்றால் எவ்வளவு பெரிய ரூபமாக இருந்திருப்பாள் என்று ஊஹிக்கலாம். ‘கஜகர்ண கர்’ என்று காதை வைத்து முன்னேயே ஒரு பேர் சொன்ன அப்புறம் ‘சூர்ப்பகர்ணர்’ என்று இன்னொரு பேர் வேறு சொல்வானேன்? ‘கூறியது கூறல்’ என்ற தோஷமாகாதா என்றால், ஆகாது.

மடங்காத, குவியாத ஆனைக் காதை நன்றாக விரித்துக் கொண்டு ப்ரார்த்தனைகளையெல்லாம் விட்டுப் போகாமல் முழுக்கக் கேட்கிறார் என்பதால் கஜகர்ணகர் என்ற பெயர் ஏற்பட்டதாகப் பார்த்தோம். ஆனால், அவர் நம் ப்ரார்த்தனையை மட்டுந்தான் கேட்கிறாரா? எப்போதும் எங்கேயும் உள்ள அவர் நாம் பேசுகிற இதரப் பேச்சுகள் எல்லாவற்றையுங்கூடத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதிலே முக்கால்வாசிக்கு அசட்டுப் பேச்சாகத்தான் இருக்கும். வேண்டாத வியவஹாரமாகத்தான் இருக்கும்.

 ஏன், நம்முடைய பிரார்த் தனையிலேயே அநேகம் அசட்டு வேண்டுதலாகத்தான் இருக்கும்! அதெல்லாவற்றுக்கும் அவர் காது கொடுப்பது, செவிசாய்ப்பது என்றால் எப்படி யிருக்கும்? ஆகையால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாலும் கேட்கும்போதே அவற்றில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியதை மட்டும் காதில் தங்க வைத்துக் கொள்வார். அதைக் காட்டத்தான் அவருக்கு சூர்ப்பகர்ணர், முறக்காதர் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருப்பது.      

ஹேரம்பர்

ஹேரம்பர் என்றால் சைவ தந்த்ர ப்ரவர்த்தகர் (சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர்) என்றும், அபரிதமான சௌர்யம் (சூரத்தன்மை) படைத்தவர் என்றும் பாஸ்கரராயரின் கணேச ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் அர்த்தம் பண்ணியிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களானால், தமிழ் ‘எருமை’தான் ‘ஹேரம்பம்’ஆயிற்று என்கிறார்கள்!பஞ்ச பாண்டவர்கள் வனவாஸத்திற்கு முந்தி இந்த்ர ப்ரஸ்தத்திலிருந்து ஆட்சி நடத்தினபோது தர்மபுத்ரர் ராஜஸூய யாகம் பண்ண ஆசைப்பட்டு, அதற்கு முன்னால் நாலு திசை ராஜாக்களையும் ஜயித்துக் கொண்டு வருவதற்காகத் தம்பிகளை அனுப்பினார். அப்போது தக்ஷிணத்திற்குப் போய் அங்கே இருந்த ராஜ்யங்களை ஜயித்தவன் ஸஹாதேவன்.

அவன் ஜயித்த அந்த ராஜ்யங்களில் ஒன்றுக்கு ஹேரம்பம் என்று பாரதத்தில் பேர் கொடுத்திருக்கிறது. ஒருவேளை அதுதான் பிற்கால மைஸூரோ என்னவோ? மைஸூர் என்பது மஹிஷூர், மஹிஷ ஊர் என்பதன் திரிபுதான். மஹிஷம் என்றால் எருமை. ‘ஹேரம்ப’த்திற்கு எருமை ஸம்பந்தம் சொல்கிறார்களே!

அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஸஹாதேவனிடம் தோற்றுப் போனார்கள். ஆனாலும், அவர்கள் தங்களைப் பற்றி ரொம்பவும் தற்பெருமை அடித்துக் கொள்கிறவர்களென்று தெரிகிறது. அதனால் பெருமை பீற்றிக் கொள்பவர்களை ஹேரம்பர் என்று சொல்வதுண்டு என்று தெரிகிறது. அந்த தேசத்திலே விக்நேச்வரருடைய எந்த ரூபபேதம் ரொம்பவும் பூஜிக்கப்பட்டதோ அதற்கே ஹேரம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.


ஸ்கந்த பூர்வஜர்


ஸ்கந்த பூர்வஜர் என்பது ஷோடஸ நாமாவில் கடைசி. ஸுப்ரமண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, ‘முருகனுக்கு முன்னவர்’ என்றால் அழகாக இருக்கிறது. ‘பூர்வஜர்’ என்றால் முன்னால் பிறந்தவர். ‘அக்ரஜர்’ என்றும் சொல்வதுண்டு.‘உடன்பிறப்பு’ என்று தமிழில் சொல்வதுபோல் ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸஹோதரர்’. ‘ஸஹ’ என்றால் ‘உடன்’.

ஸஹோதரர் என்றோ உடன்பிறப்பு என்றோ சொன்னால் அண்ணாவா, தம்பியா என்று கண்டுபிடிக்க முடியாது. அண்ணா என்று குறிப்பிட்டுக் காட்டும் வார்த்தை ‘பூர்வஜர்’. இதேமாதிரி தம்பிக்கு ‘அநுஜ’. ராமானுஜர் என்றால் ராமனுக்குத் தம்பியான லட்சுமணர். ‘கஜமுகாநுஜர்’ என்று ஸுப்ர மண்யருக்கு ‘அமர’த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. பிள்ளையாருக்குத் தம்பி என்றே முருகனுக்கு ஒரு பேர்; அவருக்கு அண்ணா என்றே இவருக்கும் ஒரு பேர்! அப்படிப்பட்ட ஸஹோதர பாந்தவ்யம்!