வேண்டிய வரமெலாம் தந்தருளும் கலியுக தெய்வம்



சிறுவாபுரி


உலகில் துன்பங்களை நீக்கி, இன்பங்களை அள்ளித் தந்து காத்தருள்பவர், தனது பக்தர்கள் குரல்கேட்டு, உடனே அபயமளிப்பவர், எண்ணற்ற பக்தர்களின் மனதில் நிலைத்து நிற்கும் தமிழ்க்கடவுள், முருகப் பெருமானே.அத்தகைய போற்றலுக்குரிய பாலசுப்ரமணியப் பெருமான் கோயில், சென்னைக்கு வடமேற்கே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரியில் (சின்னம்பேடு) அமைந்துள்ளது.நுழைவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கிச் செல்லும்போது சாலையின் இரு புறங்களிலும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலை தள்ளிக் குலுங்கி நிற்கும் வாழைத் தோப்புகள் நம்மை ரம்யமாக வரவேற்கின்றன.

கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோயில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோயில் என்று கோயில்களே ஊராக நிறைந்திருக்கின்றன.வனவாசம் முடித்த ராமன், அயோத்தியில் பட்டாபிஷேகம்  செய்துகொண்டு நல்லாட்சி செய்துவரும் வேளையில் சீதையைப் பற்றி மீண்டும் ஊர் மக்கள் தவறாக பேசுகிறார்கள்.

 இதனால் ஊர் மக்களின் வாயடைக்கவும் ரகுவம்சத்தின் மானம் காக்கவும் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறார், ராமர். காட்டில் உள்ள வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதை வாசம் செய்யும்போது லவன், குசன் என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார் சீதா பிராட்டியார். முன்பு ஒருமுறை ராமனை தவறாக நினைத்துவிட்ட சம்பவத்துக்கு, இப்போது பரிகாரம் தேட விரும்புகிறார்.

அதற்காக கடும் விரதமொன்றை மேற்கொள்கிறார். அந்த விரதம் எந்த இடையூறுமில்லாமல் நிறைவேற, மகன்கள் இருவரும் காவல் புரிகின்றனர், அந்த நேரம் ராமனால் அனுப்பப்பட்ட அசுவமேத யாக குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அருகில் வந்து மேய்கிறது. அதனால் சீதையின் விரதம் கலைந்து விடுகிறது. ஆத்திரம் அடைந்த ராமனின் பிள்ளைகளான லவனும், குசனும் குதிரையைக் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

தன் பராக்கிரமத்தை நிலைநிறுத்த, தான் அஸ்வமேத யாகம் இயற்றியது, அதை உலகுக்கே தெரிவிக்க யாக குதிரையை பார்வலம் செய்ய வைத்தது எல்லாம் ஒரு சக்கரவர்த்தி மேற்கொள்ளும் சம்பிரதாயங்கள்தான். ஆனால், அப்படி அனுப்பப் படும் குதிரை யாராலாவது தடுத்து நிறுத்தப்பட்டால், இந்தச் செயலானது தன் பராக்கிரமத்துக்கு விடப்படும் சவாலாகும். ஆகவே இச்செய்தியை அறிந்த ராமன், கோபம் கொண்டு லட்சுமணனை அனுப்பி, குதிரையை மீட்குமாறு ஆணையிடுகிறார்.

ஆனால், லட்சுமணனால் குதிரையை சிறுவர்களிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இதைக் கேட்டு மேலும் கோபமடைந்த ராமன் லவ-குசனை போரில் சந்திக்க புறப்படுகிறார். ராமனே நேரில் வந்து சிறுவர்களை எதிர்கொள்ள, அம்புகள் எதிரெதிரே பாய்ந்து போரின் உக்கிரத்தை அதிகப்படுத்திய தருணத்தில், அவர்கள் தன்னுடைய மகன்களே என்ற உண்மை அவருக்குத் தெரிய வருகிறது.

இவ்வாறு ராமனிடம் லவனும் குசனும் போரிட்ட இடமே இச்சிறுவாபுரி என்பது வரலாறு.கோயிலின் தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியனார் ஒளிவீசித் திகழ்கிறார். நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதக் கல் வடிவில் கம்பீரமான ராஜகணபதியை தரிசிக்கிறோம், பின் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதி மூலவர் நாகர், பைரவர், நவகிரகம் என பரிவார தேவதைகளுக்கு தனித் தனிச் சந்நதிகள் உண்டு.

அனைவருக்கும் நடு நாயகமாக சிறுவாபுரி பாலசுப்ரமணியர் காட்சி தருகிறார். நவக்கிரகம் ஒன்பதும், அவரவர் வாகனத்துடன் இருப்பது குறிப் பிடத்தக்கது. சந்ததமும் அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான், சிந்தையைக் கவர்கிறார். இந்தக் கலியுகத்தில் பேசும் கடவுளான பாலசுப்ரமணியப் பெருமானின் அருட்பாவை நம்மை நோக்கிப் பாய்ந்து வர, ‘சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமான்’ நாம் வேண்டும் வரங்களை அள்ளி அள்ளித்தர, உடலும் உள்ளமும் லேசாகி மிதந்து வர, நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணடைகிறோம்.

இங்கு கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி திருவிழா, சித்திரை திருவிழா என்று நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.திருப்புகழில் அருணகிரிநாதர் திருவண்ணா மலைக்கு ‘மயிலுமாடி நீயுமாடி வரவேணும்’ என்று பாடியதற்கு இணையாக, இங்கு ‘மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்,’ எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மையும் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். அருணகிரிநாதர், 8 தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். அவற்றில் ஒன்று சிறுவாபுரி.

நான்கு திருப்புகழ்களில் இந்த ஸ்தலத்தைப் பற்றி பாடியுள்ளார் அவர். சிறுவாபுரியில் குடிகொண்டுள்ள சிறுவை முருகன் ‘வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன்,’ எனப் பாடியிருக்கிறார், திருப்புகழில். ‘இறப்பு, பிறப்பு என்ற நியதிகளுக்கு உட்பட்ட வாழ்க்கையில், தீய வழிகளில் நடந்து, நோய்களினால் வேதனைப்பட்டு, மனம் நொந்து, ஒவ்வொரு பிறப்பின் போதும் அடையும் துயரங்கள் எண்ணி மாளாது. இப்பிறப்பில் அழிந்து போகாமல் எப்போதும் உன் பாதம் சரணடைந்தே இருக்க வேண்டும் என்ற நினைவை மனதில் பதிய செய்வாய், உனது அழகிய தரிசனத்தை மனிதர்களுக்கும், இந்திரனுக்கும் அளித்து அருள்புரிவாய், முருகா’ என்று பாடியிருக்கிறார்.

சிறுவாபுரி கோயிலின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திரப்பட்டணம் கிடைக்கப் பெற்றது, இந்திரனுக்கு இந்திரப் பதவி கிடைத்தது, லவன், குசன் ராமனின் அசுவத்தைக் கட்டிய இடம், ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம், லவன்-குசனுடன் ராமன் போரிட்டு சிறுவையை வென்று ஜெயநகராக் கியது, அர்ச்சனைத் திருப்புகழ் பாடப்பெற்றது, சிறப்புத் திருப்புகழ் பாடிய இடம், ஒரே திருப்புகழ் மூலம் ஐந்து பலன்களைத் தரும் கோயில், மரகதப் பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்தத் திருத்தலம், கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோயில் அமைந்த பெருமை என்றெல்லாம் பல அரிய சிறப்புகளைக் கொண்ட தலம் இது.

தான் கோயில் கொண்டிருக்கும் தலம் நாடி வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் எனக் குடும்பம் சிறக்க, கலியுகத்தில் உத்தரவு இடுவதோடு, தானே உத்தர
வாதமாகவும் இருந்து வரும் சிறுவைச் சிறுவன் சிங்காரவேலன், பல சித்து விளையாட்டுக்களையும் நடத்திவருகிறார். இவை நாம் கண்கூடாகக் கண்ட, காணும் காட்சிகளாகும். செவ்வாய் தோறும் ஆறு வாரங்களுக்கு இந்த சிறுவாபுரி முருகனை வணங்கி வந்தால் நினைத்த காரியம் ஈடேறுவது பக்தர்களின் பரவச அனுபவம்.

அண்ணாமலையார் வழிபாட்டுக் குழுவினர் இக்கோயிலைச் சார்ந்து பல ஆன்மிக-சமுதாய நற்பணிகளைச் செய்து வருகிறார்கள். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 11ம் நாள் இக்கோயிலில் குமரனுக்குக் கல்யாண வைபவம் நடைபெறும். அதை வந்து பார்த்து திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், அடுத்த வருடம் இதே வைபவத்திற்கு வந்து தம் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள உரிய வழிமுறை செய்து கொடுக்கிறார்கள். அதேபோல மாணவர்கள் கல்வியில் மேன்மையடையவும் சில வழிபாட்டு முறை களை மேற்கொள்ள வழிவகுத்துத் தருகிறார்கள்.

சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் செங்குன்றத்திலிருந்து 15.கி.மீ. தொலைவில் தச்சூர் கூட்டு சாலை சந்திப்பு உள்ளது. அங்கு முருகன் கோயில் தோரண வாயில் தென்படும். அங்கிருந்து 5 கி.மீ. தொலைவு சென்று சின்னம்பேடு கிராமத்திலுள்ள இந்தக் கோயிலை அடையலாம், பிரதான சாலையிலிருந்து செல்வதற்கு வாகன வசதிகள் உண்டு. ஆலயத் தொடர்புக்கு: 044-24712173; 9944309719