வணக்கம், நலந்தானே!



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

அன்பை வலுப்படுத்தும் அருள்

மனிதருக்கிடையே பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படுவது அன்பு. அதாவது, ஒருவர் மீது அடுத்தவர் காட்டும் அக்கறையின் வெளிப்பாடு. எந்த வடிவிலாவது அன்பை வெளிப்படுத்துவதுதான் மனித இயல்பு. கீழே ஒருவர் விழுந்தால் அடுத்தவர் ஓடோடிப் போய்த் தூக்கி விடுவது;

ஒருவர் உடல்நலமின்றி இருந்தால், அடுத்தவர் போய் ஆறுதல் சொல்வது; ஒருவருக்கு நியாயமான பணத்தேவை ஏற்பட்டால், அடுத்தவர் தன்னால் இயன்றவரை கொடுத்து உதவுவது; ஒருவர் ஏதேனும் குழப்பத்தில் இருந்தால், ஏதேனும் பிரச்னையில் சிக்கியிருந்தால், அடுத்தவர் நல்ல யோசனை சொல்லி, நல்வழி காட்டுவது...

இந்த செயல்களால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும்; நட்பு வலுப்பெறும் அல்லது உறவு பலம் காணும். ஆனால், மனிதத்தின் இன்னொரு இயல்புப்படி இந்தப் பாலம் நிலைத்திருக்க வாய்ப்பில்லாமல் போகலாம். பிறர் தூண்டுதலால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் சந்தேகம், அவநம்பிக்கை என்று அன்புக்கும், நட்புக்கும், உறவுக்கும் பாதிப்புகள் உண்டாகலாம். ஆனால், இறைவன் நம் மீது காட்டும் அன்புக்கு - அருளுக்கு அப்படி எந்த பங்கமும் வராது, வரமுடியாது.

காரணம், தன்னை அலட்சியம் செய்தாலும், தன் பக்தனைத் தாங்கிப் பிடித்துக்கொள்வதுதான் இறைமையின் தனிச் சிறப்பு. தன்னைப் புறக்கணித்தாலும், பாதுகாப்பதுதான் இறைமை. ஆகவே ஆண்டவனுக்கு சேவை செய்து அவன் அருளைப் பெறுவது எளிதானது. இந்த அருளே பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு, நட்பு, உறவை வலுப்பெற வைக்கும். அதாவது, மனிதரிடையே பழகுவதைவிட மகேசனிடம் பழகுவது சுலபமானது!

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)