புற்றுமண் சரும நோய் தீர்க்குமா?!



டாக்டர் எனக்கொரு டவுட்டு

சென்னையில் தற்போது புற்று மண்ணை பாக்கெட் போட்டு சில இடங்களில் விற்று வருகிறார்கள். சராசரியாக 200 கிராம் அளவு உள்ள பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடல் சூடு தணியும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், சரும நோய்கள் குணமாகும் என்று அதன்மீது வாசகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.  புற்றுமண் சரும நோய் தீர்க்குமா என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவரான இந்திராதேவியிடம் கேட்டோம்...

‘‘மண் என்பது மருத்துவ குணம்மிக்கது. அதனால்தான் மண் குளியல் இயற்கை மருத்துவத்தில் முக்கிய சிகிச்சையாக இருக்கிறது. பொதுமக்களுக்கு மாற்று மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதன் எதிரொலிதான் இந்த பாக்கெட் மண் விற்பனை.

பெரும்பாலும் ஏசி வசதி செய்யப்பட்ட அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு உடலில் யூரியா அளவு அதிகமாகும். ஒரு குறிப்பிட்ட தட்ப வெப்பத்திலேயே இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வரும். மாறுபட்ட தட்ப வெப்ப நிலையில் வசிக்கப் பழக வேண்டும்.

லட்சக்கணக்கான வேர்வை சுரப்பிகள் உடலில் உள்ள நச்சு கழிவுகளை வியர்வை சுரப்பிகள் மூலமாக வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. முதல் மூன்று அடுக்குகளில் தோலில் உட்பகுதியில் உப்பு படிமங்கள் படிந்து இருக்கும். இதனால் ரத்தத்தில் யூரியா அளவு அதிகமாகும். இதனை புற்று மண் சரி செய்யும். இதனை மாதம் ஒருமுறை செய்தால் தோலில் அடைபட்டு இருக்கும் நுண்ணிய துவாரங்கள் சரியாகும்.

கரையான் புற்று கட்டும்போது தன் வாயில் வரும் உமிழ்நீர் சுரந்து சேர்ந்து கட்டுவதால் மருத்துவ குணம் ஏற்படுகிறது. இதனால்தான் அடை மழை பெய்தாலும் புற்று கரைவதில்லை. கரையானில் உள்ள அமினோ அமிலங்கள் உள்ளதால்தான் இதுபோல் விற்கிறார்கள்.

கரையான் புற்று கிராமங்களில் வயல் வெளிகள், புதர் மண்டி கிடக்கும் இடங்கள், மலைகளில் இருக்கும் புற்றுகள் நாள்பட தானாக உடைந்து விழும். அப்போது அந்த மண்ணை எடுத்து வந்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட வேண்டும்.

காலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை கண்களை தவிர்த்து உடல் முழுவதும் பூசி இளம் வெயிலில் காய்ந்த பின் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்’’ என்று புற்றுமண்ணின் மகத்துவம் சொல்லும் இந்திராதேவி, ‘சந்தையில் இதுபோல் பாக்கெட் மண் விற்கப்பட்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும்’ என்றும் எச்சரிக்கிறார்.

- ஜி.சிவக்குமார்