செல்லப் பிராணிகளுக்கும் தேவை உடற்பயிற்சி!
தகவல்
உடல் பருமன் பிரச்னை மனிதனுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. எனவே, வீட்டில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் உடற்பயிற்சி தேவை என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள்.
உங்களின் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ புசு புசுவென்று, குண்டாக இருந்தால் பார்க்க க்யூட்டாக இருக்கும்தான். ஆனால், அதிகப்படியான உடல் எடை செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கும். அவை, ஒவ்வொருமுறை நம்மை கொஞ்சி மகிழ்விக்கும்போதும், கண்டிப்பா நாமும் அவற்றுக்கு ட்ரீட் கொடுத்து சந்தோஷப்படுத்துவோம்.
உண்மையில் அந்தச்செயல் செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கொடுக்கும் உணவுக்குத் தகுந்த உடல் உழைப்பு இல்லாததால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பூனை, நாய்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இதற்கு, ஒவ்வொருமுறை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போதும் உங்கள் செல்லப்பிராணியின் எடையை பரிசோதித்தால் தெரிந்துகொள்ளலாம். அதிகப்படியாக வெயிட் போட்டிருந்தால், அதற்குக் கொடுக்கும் உணவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதோடு, வாக்கிங் கூட்டிச் செல்லும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் தூங்கவிடாமல், பந்தை தூக்கிப்போட்டு ஓட வைப்பது, ஜம்ப் செய்து பிடிக்க வைப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.
- என்.ஹரிஹரன்
|