டியர் டாக்டர்



*முதுமை அடைந்தவர்களுக்கும் சரி... இனி முதுமை அடையப் போகிறவர்களுக்கும் சரி... முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய பொக்கிஷம் இந்த இதழ் ‘கவர் ஸ்டோரி’. காலைச் சிற்றுண்டியின் அவசியத்தை ப்ளஸ்- மைனஸ் பாயின்ட்டுகளுடன் வலியுறுத்தி இருந்தீர்கள்.

அதேபோல் வெளியில் சாப்பிடுவது பற்றி அபாய சங்கு ஊதியதும் நல்லதாகப் போயிற்று. மனநல நிபுணர்களும் சராசரி மனிதர்கள்தான், அவர்களும் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்ற செய்தி ஒரு ‘அதிர்ச்சி’தான் என்றாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. வரும் முன் காப்பது என்பது இதுதானோ!
- சுகந்தி நாராயணன், வியாசர் காலனி.

*‘சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல்’ பஞ்ச பூதங்களாக விளக்கியுள்ளவை அனைத்துமே முதியோர்கள் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள். முதியோர்களுக்கான டிப்ஸ்களும் பயனுள்ளவை. இனிது இனிது... சீனியர் சிட்டிசன் சிறப்பிதழ் இனிது என்று சொல்லத் தோன்றியது.
- சூரிய நாராயணன், அசோக் நகர்.

*ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்களைப் பற்றிய தகவல்கள் அருமை. அதன் விலை, பயன்படுத்தும் முறை என்று தெளிவாக விளக்கப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது. குறிப்பாக, முதியோருக்குப் பயன்படுபவற்றைப்பற்றி விலையோடு தகவல் அளித்திருந்தது வரவேற்கத்தக்கது.
- காசி, வள்ளியூர்.

*வெந்நீர் அருந்துவதில் இவ்ளோ விஷயமா என்று வியக்க வைத்தது வெந்நீர் பற்றிய குறிப்புகள். குளியலுக்கு மட்டுமில்லாமல், உடல் நலத்துக்குப் பலவகையிலும் அரிய பங்களிப்பைத் தருகிறது என்பதைப் பலரும் என்னைப் போலவே அறிந்துகொண்டிருப்பார்கள். எல்லோரின் சார்பாகவும் குங்குமம் டாக்டருக்கு நன்றி!
- கே.வளர்மதி, திருச்சி.   

*ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் அவர்கள் ‘மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியம்’ கட்டுரையில்,  முதியவர்கள் வார்த்தைகளில் முழுமையான உடல்நலம் அடங்கியுள்ளது என்பதைத் தெளிவாக விளக்கி இருந்தார்; பாராட்டுக்கள். இன்றைய தலைமுறையினர் முதியோரின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தாமல் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.
- கோபால், உத்திரமேரூர்.

*‘பிரேக் த ஃபாஸ்ட்’ தலைப்பிலேயே காலைச் சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என்ற தகவலை சொல்லியிருந்தது அருமை. உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் எந்த டிபனுக்கு எந்த சைட்டிஷ் முழுமையான ஊட்டச்சத்துகொண்டிருக்கிறது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
- ஜெ.ஜெயஸ்ரீ, சாலிகிராமம்.