கொளுத்தவனுக்கு கொள்ளு...இளைத்தவனுக்கு எள்ளு...



முன்னோர் அறிவியல்

பழமொழிகளால் நிறைந்தது நம் வாழ்வு. வெறும் வார்த்தை அலங்காரங்களாகவும், சொலவடையாக மட்டுமே இல்லாமல் அவற்றுள் ஆழமான பொருளும் உண்டு. ஒற்றைப் பழமொழியில் நம் முன்னோர்கள் வாழ்வின் சாரத்தையே அடக்கியிருக்கிறார்கள் என்று சிலாகிப்பவர்கள் உண்டு.

இந்த பழமொழிகளில் மருத்துவம் தொடர்பாகவும் நிறைய கேள்விப்படுகிறோம். அந்த வகையில் ‘கொளுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு...’ என்ற பழமொழியும் அடிக்கடி கூறப்படுகிறது. நிஜமாகவே இந்த பழமொழிக்கு  மருத்துவ முக்கியத்துவம் உண்டா? கொள்ளு மற்றும் எள்ளுவின் பயன்கள் என்னவென்று ஆயுர்வேத மருத்துவர் அழகர்சாமியிடம் கேட்டோம்...

‘‘கொளுத்தவர்களுக்குக் கொள்ளைக் கொடுக்கும்போது அவர்களின் எடை குறைப்புக்கு உதவும். அதேபோல் எள்ளானது இளைத்தவர்களின் உடலைத் தேற்றும் திறன் கொண்டது. அதனால், இந்த பழமொழி மருத்துவம் முக்கியத்துவம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை’’ என்கிற மருத்துவர் அழகர்சாமி, அவற்றின் பலன்களை விரிவாக விளக்குகிறார்.

‘‘கொள்ளு ஆங்கிலத்தில் Horse gram என்று அழைக்கப்படுகிறது. குதிரைகளுக்கு உணவாக வழங்கப்படுவதால் இப்படி அழைக்கிறார்கள். Macrotyloma uniflorum என்பது இதன் தாவரவியல் பெயர்.  Fabaceae குடும்பத்தைச் சார்ந்தது. உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கக்கூடிய இயற்கை உணவுதான் இந்த கொள்ளு.

கொள்ளு உஷ்ணம், வறட்சி என்ற குணம் உள்ளதால் உடலை இளைக்கச் செய்கிறது. கொள்ளுவில் உஷ்ணத் (சூடு) தன்மை அதிகமாக இருப்பதால் சிறிய ரத்தக் குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டாலும் அகற்றக்கூடிய சக்தி இந்த கொள்ளுக்கு இருக்கிறது. கொள்ளுவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. உடல் அதிக பருமன் உள்ளவர்களுக்கு கோலகுலத்தாதி, சூரணம் பொட்டலமாக கட்டி உடம்பில் ஒத்தடமாகக் கொடுப்பர். அப்போது உடம்பில் உள்ள கொழுப்பு சத்து கரைகிறது. கரையும் கொழுப்புகள் சிறுநீரகம் மூலமாகவோ அல்லது மலத்தின்
வழியாகவோ வெளியேறும்.

உஷ்ணம் (சூடு), சீதம் (குளிர்ச்சி) இவைதான் ஆயுர்வேதத்தில் சொல்லும் தாரக மந்திரம். அதாவது கொழுப்பு சீதம்  (குளிர்ச்சி), ஸ்னிக்தம் (எண்ணெய் பசை) குணம் கொண்டது. இந்த கொழுப்புக்கு எதிரான குணத்தைத்தான் கொள்ளு (உஷ்ணம், வறட்சி) கொண்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் இந்தக் கொழுப்பை கரைக்க கொள்ளு பயன்படுத்தப்படுகிறதுஉஷ்ணமான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

குளிர்ச்சியாக இருப்பவர்கள் உஷ்ணமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. அப்படி எடுத்துக்கொள்ளும்போது நோய் தாக்காது. இயல்பாக உஷ்ணம் இருக்கும்போது கொள்ளு உணவாக எடுத்துக்கொள்ளும்போது கொழுப்பைக் கரைத்து நல்ல நிவாரணம் உடல் பெறுகிறது.

கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு என்று கொழுப்பில் இரண்டு வகை உள்ளது. High-Density lipoprotein(HDL) நல்ல கொழுப்பு வகையை சேர்ந்ததாகும். HDL 35-க்கு குறைவாகவோ அதற்கு மேலாகவோ இருந்தாலும் பயப்பட வேண்டாம். ஆனால், Triglycerides மற்றும் LDL என்பது கெட்ட கொழுப்பு வகை. இதற்குதான் பயப்பட வேண்டும்.

இதுதான் இதய நோய் மற்றும் மூளைக்கு அடைப்பை ஏற்படுத்தி பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. குறிப்பாக  Triglycerides 200 கிராமுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கெட்ட கொழுப்பு குறைய கொள்ளு, பூண்டு, மோர் எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி, யோகா செய்வதாலும் கெட்ட கொழுப்பு அதிகமாகாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும். அசைவ உணவு, சிப்ஸ், வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்டுப்பாட்டை மீறினால் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சரியான நேரத்தில், அளவான சாப்பாடு சாப்பிடுவதை
கவனத்தில் கொள்ள வேண்டும். சினைப்பை கட்டி உள்ள பெண்களுக்கும், மாதவிலக்கு தள்ளிப்போகும் பிரச்னைக்கும், பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையை சுத்தம் செய்யவும் கொள்ளு சிறந்தது.’’கொள்ளு யார், எவ்வளவு சாப்பிடலாம்?

‘‘கொள்ளு ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிராம் வரை இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 3 வயதுக்கு ேமற்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; அதுவும் குறைவான அளவே கொடுக்க வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள் 20 கிராம் வரை சாப்பிடலாம். அதேவேளையில் பருமன் உள்ளவர்கள் அல்சர் நோயாளிகளாகவும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்து, அதன் பிறகு கொள்ளு பயன்படுத்தலாம். பயறாக, சுண்டலாக அவித்து சாப்பிடுவதாக இருந்தால் 20-30 கிராம் வரை சாப்பிடலாம், சிறியவர்களாக இருந்தால் அதில் பாதியாக கொடுக்க வேண்டும்.’’

எடை குறைப்பு தவிர கொள்ளுவின் வேறு பயன்கள் என்ன?

‘‘சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்களைக் கரைக்கும். உடலின் மிக மோசமான கெட்ட கொழுப்பைக் கரைக்கும். சைனஸ் தலைவலியைக் குறைக்கும். பசியைத் தூண்டும். உடலின் சளி இளகச் செய்யும்.

கொள்ளு, பார்லி, காய்ந்த கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து அரைத்துக்கொண்டு காலையும் இரவும் ஒன்றரை டீஸ்பூன் சம அளவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். சுண்டல், ரசம், துவையல் செய்தும் பயன்படுத்தலாம்.
கொள்ளு உடலின் வியர்வையை அதிகரிக்கச் செய்யும். பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கொள்ளை கஷாயம் செய்து குடிக்கலாம். அதேவேளையில் குடல் புண், வயிற்று புண் உள்ளவர்கள் கொள்ளு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.’’

கொள்ளை எப்போது பயன்படுத்தக் கூடாது?மாதவிலக்கு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள கூடாது. வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், வயிற்றுப்புண், குடல் புண் உள்ளவர்கள், ஆசனவாய் எரிச்சல் உள்ளவர்கள், தூக்கம் இல்லாதவர்கள், சரியான நேரத்தில் சாப்பாடு எடுத்துக் கொள்ளாதவர்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், தலை, கண், கால் உடம்பு எரிச்சல் உள்ளவர்கள், மயக்கம், படபடப்பு, தலைச்சுற்று உள்ளவர்கள், மஞ்சள் காமாலை உள்ளவர்கள், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் கொள்ளு பயன்படுத்தக் கூடாது.’’
எள் பற்றி சொல்லுங்கள்?

‘‘Sesamum indicum என்று தாவரவியலில் எள் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் ‘திலம்’ என்பர். எள் உஷ்ணத்தன்மை  மற்றும் எண்ெணய்த் தன்ைம கொண்டுள்ளதால் உடலை பெருக்கச் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.கருப்பு, வெள்ளை என இரண்டு எள் வகைகள் உள்ளது. இதில் கருப்பு எள்ளுக்கு அதிகமான மருத்துவ குணம் உண்டு.

இரும்புச்சத்து எள்ளில் அதிகம் உள்ளது. உடலில் இரும்புச்சத்து இல்லாதவர்கள் எள்ளை மிட்டாயாக எடுக்கும்போது இரும்புச்சத்து கூடுகிறது. எள்ளில் அதிகமாக நார்ச்சத்தும் இருக்கிறது. ரத்தசோகை(Anemia) அதிகம் உள்ளவர்கள் எள்ளை பனங்கருப்பட்டி கலந்து காலையும் இரவும் 15 நாள் அல்லது 1 மாதம் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் கூடும்.

எள்ளை எண்ணெயாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் எடை கூடும். அதிலும் குறிப்பாக வயதுக்கு வந்த பெண்களுக்கு உளுந்த மாவு, முட்டை கலந்து ெகாடுப்பது வழக்கம். அதற்கு காரணம் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காகத்தான்.

மாதவிலக்கு தள்ளிப் போகும்போது எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து, காலையில் ஒரு உருண்டையும் மாலையில் ஒரு உருண்டையும் சாப்பிட்டால் ஒவ்வொரு மாதமும் சீரான ரத்தப்போக்குக்கு வழி வகுக்கும். கர்ப்பப்பை கட்டி உள்ளவர்கள் எள் சாப்பிடும்போது கட்டி கரையும், வேதனை குறையும், சீரான ரத்தப்போக்கிற்கும் வழி வகுக்கும்.’’

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

‘‘எள்ளுவினை மிட்டாயாகவோ அல்லது எள்ளை நன்கு வறுத்துப் பொடியாக்கி இட்லி ெபாடியாகவோ தொட்டு சாப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் உணவில் ரசாயனம், பேக்கரி உணவில் ரசாயனம் என சாப்பிடுகிற உணவில் நச்சுத்தன்மையுள்ள ஜங் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் இளைய சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

PCOD போன்ற நோய்களுக்குப் பெண்களில் 60 முதல் 70 % பேர் ஆளாகின்றனர். இதற்கு எள் எடுத்துக் கொண்டால் நல்ல  பலன் கிடைக்கும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மையை ெவளியேற்றும். மாதவிலக்கு இல்லாமைக்கும் எள் நல்ல உணவாக இருக்கிறது.

’’எள்ளின் பயன்கள்‘‘தாய்ப்பாலை அதிகமாக சுரக்க செய்யும், மாதவிடாய் பிரச்னையை சரி செய்யும், சிறுநீரை பெருக்கும், மலச்சிக்கலை நீக்கும், உடலில் பலம் உண்டாக்கும். எள்ளில் எண்ணெய்த் தன்மை உள்ளதால் உடலை பெருக்கச் செய்யும், மூட்டு வலிகளை போக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கும், மூட்டுகளுக்கு இடையே எண்ணெய் பசையை அதிகரித்து ேதய்மானத்தை தடுக்கும்.

 எள்ளையும் பனை ெவல்லத்தையும் இடித்து உருண்டை செய்து சாப்பிடலாம், எள்ளை துவையல் செய்தும் சாப்பிடலாம், எள்ளை அரிசியுடன் சேர்த்து சாதம் செய்தும் சாப்பிடலாம், நல்லெண்ணெயை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம், இதய நோயாளிகளுக்கு உகந்த எண்ணெய் நல்லெண்ெணய் ஆகும்.’’எள்ளை எப்போது, யார் பயன்படுத்தக் கூடாது?

‘‘அதிகமான ரத்தப்போக்கு இருப்பவர்கள், வேறு மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், உடல் எடை அதிகம் கொண்டவர்கள், அதிகமான தூக்கம் கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், அஜீரணம் உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் எள்ளை உட்கொள்ளக் கூடாது.’’

- அ.வின்சென்ட்