காலாவதி தேதி இனி கட்டாயம்....
செய்திகள் வாசிப்பது டாக்டர்
பாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, தங்களது உணவு பொருள் பாக்கெட்டுகளின் கவர்களில் காலாவதி தேதி, எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்களுடன் எவ்வளவு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் சாப்பிட்டால் நல்லது என்று குறிப்பிட்டுள்ள அந்த தேதிக்குப் பின்னர் விற்கப்பட்டால் எவ்வளவு தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். உணவுப்பொருள் சில்லறை விற்பனையை ஒழுங்குபடுத்தவும், தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்யவும் மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளவும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பயன்படுத்தினால் நல்லது என்கிற அந்த தேதிக்கு பின்னர் விற்கப்படும் பொருட்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் பேரம் பேசி வாங்குவதற்கு வசதியாகவும் அதேவேளையில், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தினால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த தேதிக்கு பின்னர் விற்கப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க சில்லறை விற்பனையாளர்கள் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து விற்கத்தான் முயற்சி செய்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், நுகர்வோர் தாங்கள் என்ன வாங்குகிறோம் அதனை எவ்வளவு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பன போன்ற விவரங்களை அறியும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் பேரம் பேசி அந்தப் பொருளை வாங்கலாம். இதற்கான வாய்ப்புகளை நுகர்வோருக்கு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- க.கதிரவன்
|