எலும்புகளில் இப்படியும் பிரச்னை வரும்...எலும்பே நலம்தானா?!

பழைய எலும்புகளுக்கு மாற்றாக நம் உடலானது புதிய எலும்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஆனால், பேஜெட்ஸ் டிசீஸ்(Paget’s disease) பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த செயலானது மிக வேகமாக நடக்கும். அதனால் எலும்புகள் அசாதாரணமான வடிவத்துக்கு மாறும். அவை வளைந்து, உடைந்து, பலவீனமாகி, மென்மையாகி அல்லது பெரியதாகி... இப்படி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

புதிதாக உருவாகும் எலும்புகள் சரியாக பொருந்தி போகாமலும் இருக்கலாம். பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பு பெரும்பாலும் இடுப்பெலும்பு, மண்டையோடு, முதுகெலும்பு மற்றும் கால்கள் ஆகிய பகுதிகளையே பெரிதும் பாதிக்கும். ஆனாலும் உடலின் எந்த இடத்தில் உள்ள எலும்பையும் தாக்கலாம். எலும்புகளை உடைய செய்து வேறு உடல் நலக்கோளாறுகளுக்கும் காரணமாகலாம். உதாரணத்துக்கு எலும்புகள் நரம்புகளை அழுத்தி ஆர்த்தரைட்டிஸ் பாதிப்புக்கு காரணம் ஆகலாம்.

பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பானது பெரும்பாலும் 40 வயதுக்கு மேலானவர்களையே பாதிக்கும். வயது ஆக ஆக இந்த பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும். பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்புக்கு இதுதான் காரணம் என்று இதுவரை எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எலும்புகளில் ஏற்படும் வைரஸ் தொற்று அல்லது சுற்றுச்சூழலில் ஏற்படும் ஏதோ பாதிப்பு இதற்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்தபோது அவர்களில் 15 முதல் 30 சதவிகிதத்தினருக்கு குடும்ப பின்னணியில் இந்த பிரச்னை இருந்தது தெரிய வந்திருக்கிறது. சில மரபணுக்கள் மூலம் இந்த நோய் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தை சார்ந்தவருக்கோ தொடர வைப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புகைப்பழக்கமும் இந்த பாதிப்புக்கு மிக முக்கியமான ஒரு காரணம்.

குடும்ப பின்னணியில் பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பு இருந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த 40 வயதுக்கு மேலானவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பின் அறிகுறிகள் மிக மெதுவாகவே தெரிய வரும். எலும்புகளில் ஏற்படும் வலியே பொதுவான அறிகுறி. சிலருக்கு பாதிக்கப்பட்ட எலும்பை ஒட்டிய  பகுதிகளில் வீக்கமும், வலியும் இருக்கலாம். தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும். மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அடிக்கடி தலைவலி, பார்வைக் கோளாறு, முக தசைகளில் வலி, காது கேட்காதது, மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

சில சமயங்களில் பாதிப்பு வெளிப்படையாகவே தெரியும். அதாவது எலும்பு மிகவும் பெருத்தது மாறி காட்சியளிக்கும். எலும்புகள் வளைந்து காணப்படலாம். நெற்றி பகுதியும் பெரிதானது போல காட்சியளிக்கும். பேஜெட்ஸ் டிசீஸ் மிக மிக தீவிரமான நிலையில் அது எலும்பு புற்றுநோய்க்கும், இதயம் செயலிழந்து போகவும் கூட காரணமாகலாம்.

எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடிவதில்லை. பல சமயங்களில் பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பானது ஆர்த்தரைட்டீஸ், ஆஸ்டியோபோரோசிஸ், Spinal stenosis மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் உடல்நல கோளாறுகள் உடன் குழப்பி கொள்ளப்படலாம்.

வேறு ஏதோ பிரச்னைகளுக்காக X-ray ரத்த பரிசோதனையை மேற்கொள்ளும்போதுதான் பலருக்கும் பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. பேஜெட்ஸ் டிசீஸ் பாதிப்பு இருக்கலாமோ என நீங்கள் சந்தேகப்படுகிற பட்சத்தில் எலும்பு மருத்துவரை அணுகவும். அவர் உங்களது பாதிப்பை முழுமையாக பரிசோதிப்பார். எலும்புகளின் படங்களை வைத்து அவற்றின் அளவுகளில் தெரியும் வித்தியாசத்தையும் ஆராய்வார்.
அதன் தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகள்....

போன் ஸ்கேன்(Bone Scan) இதில் ரேடியோ ஆக்டிவ் செய்யப்பட்ட Tracer மிகக் குறைந்த அளவில் கை நரம்புகளின் வழியே செலுத்தப்படும். இது ரத்தத்தின் வழியே எலும்புகளை சென்றடையும். ஸ்பெஷல் கேமரா எலும்புகளை படம் பிடிக்கும். எந்த பகுதியில் Tracer மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ உட்கிரகிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.

இது தவிர எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் போன்றவையும் தேவைப்பட்டால் பரிந்துரைக்கப்படலாம். ரத்தத்தில் உள்ள Alkaline phosphatase அளவை கண்டறிய ரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யவும் பரிந்துரைக்கப்படும். பேஜெட்ஸ் டிசீஸ் உள்ளவர்களுக்கு Alkaline phosphatase அளவு மிக அதிகமாக இருக்கலாம். எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதன் தீவிரம் எவ்வளவு என்பதைப் பொருத்து மேலும் சில மருத்துவ நிபுணர்களை சந்திக்க உங்கள் எலும்பு மருத்துவர் பரிந்துரைப்பார்.

சிகிச்சைகள்

எலும்புகளின் வடிவம் மாறி போயிருந்தாலோ, காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டு இருந்தாலோ அதை எல்லாம் முழுமையாக குணப்படுத்துவது சாத்தியம் இல்லாதது. ஆனால், பாதிப்பு களின் தீவிரத்தை சமாளிக்க சில வாழ்வியல் மாற்றங்கள் ஓரளவு உதவலாம்.

உதாரணத்துக்கு நடையில் சிரமம் இருப்பவர்களுக்கு காலணிகளில் பிரத்தியேக வடிவமைப்பு செய்வது அல்லது நடப்பதற்கு சப்போர்ட் தரும் கருவிகளை உபயோகிப்பது போன்றவை ஓரளவு உதவலாம். எலும்பு இழப்பு மற்றும் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய மருந்துகள் உதவும். வலியை குறைத்து வாழ்க்கையை சுலபமாக வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். மிகமிக அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சைகளும் தேவைப்படலாம்.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி