இன்னும் சில குறிப்புகள்...
கவர் ஸ்டோரி
குழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்...
பால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேவையான நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது பழரசமோ அல்லது சூப்போ அது உங்கள் விருப்பம். அதிக எண்ணெய், அதிக அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் நிறைய பேர் குழந்தையைப் பார்க்க வருவார்கள். அதனால் பெற்றோருக்கு குழந்தை உடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் குழந்தையுடன் நேரம் ஒதுக்கி அதனுடைய கண்களைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்தால் அது பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் வயிற்றில் இருக்கும் போதில் இருந்தே அது தாயின் குரலை கேட்டு பழகி இருப்பதால், சீக்கிரத்தில் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும்.
பொதுவாக பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாளுக்கு 2200 லிருந்து 2400 கலோரி வரை உட்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொண்டாலும் பால் கொடுப்பதால் மாதத்திற்கு 4 பவுண்டு அளவிற்கு கூட தாய்மார்களுக்கு எடை குறைப்பு நிகழும்.
தூக்கத்தில் பசிக்கும்போது பால் குடிக்கவும் எளிதாக இருக்கும் அத்துடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவு நெருக்கமும் கூடாது.
குழந்தையை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல வேண்டி இருந்தால் க்ளைடர், பேபி ராக்கிங் சேர் அல்லது குஷி சேர் எடுத்துச் செல்லலாம். குழந்தையின் முதுகுப்புறத்திற்கு சப்போர்ட் கொடுக்க சில மிருதுவான சிறிய அளவிலான தலையணைகளையும் எடுத்துச் செல்லலாம். உங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் திண்பண்டங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வெளியே செல்லும் நேரங்களில் குழந்தைக்கு ஆடம்பரமான ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் கம்ஃபோர்ட் (வசதி) என்பது முக்கியமில்லையா? குளிரினாலோ, வெப்பத்தால் புழுங்கினாலோ எதையும் குழந்தையால் வாய்விட்டு சொல்ல முடியாது. பல அடுக்கு துணிகளை அணிவிக்கும்போது உடல் வியர்த்து குளிர்ந்து போகலாம். ஜிகு ஜிகு என ஆடம்பரமான ஆடை அணிவித்துச் செல்லும் போது கசகசவென, சில ஆடைகள் உறுத்தலாக இருக்கலாம்.
குழந்தையை வெளியே தூக்கிச் செல்லும் நேரங்களில் ஆடம்பரமான ஆடை அணிவிக்க வேண்டியதில்லை. குழந்தையின் வசதியும், ஆரோக்கியமுமே முக்கியம்!
குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய டாஸ்க் என்பது இரவில் தூங்காமல் அழும் குழந்தையை சமாளிப்பதுதான். ‘கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்... அடங்காத பிள்ளை அழுகைக்கு அஞ்சும்’ என்ற பாடல் நூறு சதவிகிதம் உண்மை என்பது இரவில் குழந்தை தூங்காமல் அழும்போது புரியும். இரவில் தூங்கும்போது குழந்தையைத் தாய் தன் அருகில் படுக்க வைக்க வேண்டும். தாயின் அரவணைப்பு, தாயின் உடல் சூடு போன்றவை இதமான சூழலை கொடுப்பதால் பாதுகாப்பான மனநிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கும். அதன் ஸ்ட்ரெஸ் லெவலும் கட்டுக்குள் இருக்கும்.
இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அதற்கு முன் சில தினசரி செயல்பாடுகளை ஒரே வரிசையில் செய்ய வேண்டும். அதுதான் குழந்தைக்கு பழகும். அதாவது இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது, பாலூட்டுவது, தாலாட்டு பாடுவது என ஒரு குறிப்பிட்ட வரிசையில் இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்யும்போது அது பழகி குழந்தை அந்த நேரத்தில் தினமும் தூங்க ஆரம்பிக்கும்.
குழந்தைகள் அசைத்தலை அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். அல்லது நல்ல துணியில் அதன் பிஞ்சு கைகளும் உள்ளடங்கும் படி சுற்றி பெற்றோர் தம் கைகளில் வைத்து ஆட்டலாம். இந்த ஒரே மாதிரியான அசைவினால் குழந்தைகள் மெல்ல மெல்ல உறங்கும்.
குழந்தை தூங்காமல் அழுதுகொண்டு இருந்தால் குழந்தைக்கு ஏதாவது உடல்நலமில்லையா என பரிசோதிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நம்மைப் போல் சொல்லவா தெரியும்? எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா? பூச்சிக்கடி ஏதாவது இருக–்கிறதா? சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்படுகிறதா? இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா? என்பதை எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பிஞ்சு குழந்தைகளின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பராமரிக்க வேண்டும்.
தொகுப்பு: சக்தி
|