நட்பே துணை!
ஆராய்ச்சி
நட்பின் பெருமை சொல்லும் எத்தனையோ வசனங்களைக் கேட்டிருப்போம். பல திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் சரி... அறிவியல்பூர்வமாக இதில் ஆராய்ச்சிகள் ஏதேனும் பண்ணியிருக்கிறார்களா என்று தேடினால் ஆச்சரியமான பதில் கிடைக்கிறது. நட்பு விஷயத்தில் மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்களே சிறந்தவர்கள் என்பது இதில் கூடுதல் ஸ்பெஷல்.
‘நட்பைப் பொறுத்தவரையில், ஒருவர் மூன்று தனித்துவமான வகைகளில் நட்பு வட்டத்தை உருவாக்க முனைகிறார். முதலாவது இறுக்கமான வலைப்பின்னலுடைய நூல் பந்தைப் போன்றது. அதில் ஒரு அடர்த்தியாக நெய்யப்பட்ட நட்புக்குழு உள்ளது. இந்த வகை நட்பில் கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் ஒருவருக்கொருவர் நட்பு வலையில் பின்னப்பட்டவர்கள்.
2-வது வகையில் ஒரு நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், தொடர்பில் இருக்க மாட்டார்கள். 3-வது வகை முகநூல் நட்பைப் போன்றது. வெவ்வேறு நாடு, மாநிலம், ஊர்களைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். ஒருவரையொருவர் எந்தவிதத்திலும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் இது பெரிதாக ஏற்படுத்தாது’ என்கிறார் அமெரிக்காவின் Dart-mouth கல்லூரியின் சமூகவியல் இணை பேராசிரியரான ஜானிஸ் மெக்கேப்.
‘நட்பில் இதயத்திற்கு முக்கியப் பங்கு இருந்தாலும் ஒரு நரம்பியல் பார்வையில் நண்பர்களை உருவாக்குவது மூளையே. மனிதனுக்கு இருக்கும் முக உணர்ச்சிகளை அடையாளம் காணும் திறன், மற்றவர்களை நாம் எவ்வாறு உணர்கிறோம் மற்றும் தொடர்புகொள்கிறோம் என்பதற்கான ஒரு பெரிய தீர்மானமாகிறது.
நட்பானது பச்சதாபம் மற்றும் பிறரின் உணர்ச்சிகளை உணரும் திறன் ஆகியவற்றிற்கு பொறுப்பாவதோடு, ஒருவரின் முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கிறது. எனவே, சமூகத்தோடு தொடர்புகொண்டு சிறந்த நண்பர்களை உருவாக்குங்கள். நட்பே எப்போதும் நல்லது’ என்றும் அறிவுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் 2018-ம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், நெருங்கிய நண்பர்களின் மூளைகள் ஒத்த வழிகளில் பதிலளிப்பதையும் கண்டறிந்துள்ளது. அதாவது, நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதுபோல, நெருக்கமான நண்பர்களுக்குள் ஒரேவிதமான சிந்தனை ஓட்டம் இருக்கிறது என்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் இந்தியர்களின் நட்பு பற்றிய தகவல். ‘ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கர்களைவிட மூன்று மடங்கு அதிக நண்பர்களை வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்தான். சராசரியாக ஒரு இந்தியர் ஆறு நெருக்கமான நட்பு வட்டத்தைக் கொண்டுள்ளனர். சிறந்த நட்புக்கான உதாரணம் என்று மேற்கோள் காட்டும் விதத்தில் இந்தியர்களின் நட்பு ஒரு மிகப்பெரிய சமூக வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. மற்ற நாட்டினரின் நட்பினைவிட 4 மடங்கு நேர்மையான நட்பாக இந்தியர்களின் நட்பு இருப்பதையும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நட்பறிக்கை விவரிக்கிறது.
- என்.ஹரிஹரன்
|