தம்பி வெற்றிவேல் ராஜாடைட்டில்ஸ் டாக்-145

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். அதுபோன்று என் வாழ்க்கையில் ஏராளமான தம்பிமார்கள் இருப்பதால் என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. சொந்த ஊர் திண்டுக்கல் அருகே கோவிலூர். இரண்டு அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம். சின்ன  வயதில் எத்தனையோ பேர் என்னை தம்பியாக நினைத்து பாசம் காண்பித்ததுண்டு.

நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது என் பெற்றோர் ஒரு காதல் விவகாரத்துக்காக கோர்ட் படி ஏறும்படி ஆகிவிட்டது. அப்போது நான் பால் குடிக்கும் குழந்தை. அப்போது அக்கா மட்டுமல்லாமல் ஊரில் இருக்கும் சில நல்ல உள்ளங்களும் என்னை அம்மாவிடம் பால் குடிக்க அழைத்துச் சென்றார்களாம்.

படிக்கும் காலத்தில் என்னையும் அறியாமல் சினிமா மோகம் ஆக்கிரமித்தது. ஒருவர் புதியவராக இருந்தாலும் அவர்களைப் போலவே இமிட்டேட் பண்ணுவேன். என் பெற்றோரும் ஊரில் இருப்பவர்களை அப்படியே இமிட்டேட் பண்ணுவார்கள். அவர்களின் இரத்தம் என்பதால் நானும் அந்தக் கலையில் தேர்ந்தவனாக இருந்தேன்.

ஒருமுறை நானும் என் நண்பன் நாகராஜும் சேர்ந்து ‘தீ’ படம் பார்த்தோம். அந்தப் படம் பார்த்துவிட்டு ரஜினி சார் மாதிரி இமிட்டேட் பண்ணினேன். உடனே நண்பன் ‘நீ சென்னைக்கு போனால் பெரிய ஆளாக வருவாய்’ என்று ஏத்திவிட்டான். அத்துடன் ஒரு சென்னை முகவரியும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

சென்னை வந்தேன். நாகராஜ் கொடுத்த முகவரி தவறான முகவரி. பணமும் இல்லை. மீண்டும் ஊருக்குப் போகும் ஐடியாவில் கையிலிருந்த ஆடைகளை விற்றேன். ஐம்பது ரூபாய் தேறியது. வித் அவுட்டில் தாம்பரம் வரை மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து ஊருக்குச் செல்வதுதான் திட்டம். ஆனால் ரயில் பரிசோதகர் தாம்பரத்தில் ஃபைன்  போட்டு ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டார். பிறகு லாரி பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தேன்.

அடுத்த முறை அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு செலவுக்கு பணமும் வாங்கிக் கொண்டு சென்னை வந்தேன்.  சென்னையில் கே.பி.பிலிம்ஸ் கம்பெனியில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தேன். அது ‘பிக்பாக்கெட்’, ‘சின்னத்தம்பி’ படங்கள் எடுத்த நிறுவனம். அச்சமயத்தில் தபால் வழியில் டிகிரி முடித்தேன். தயாரிப்பாளர் இந்த தம்பி மீது காண்பித்த பாசம் அதிகம்.

கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் ‘முத்துக் குளிக்க வாரீயளா’ படத்தில் மேனேஜராக பணி புரிய ஆரம்பித்தேன். என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தவர் இயக்குநர் சந்திரகுமார். ரவிக்குமார் சார் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு நான்தான் தயாரிப்பு நிர்வாகி. என்னுடைய கடின உழைப்பு ரவிக்குமார் சாருக்கு பிடித்திருந்ததால் அவருடன் வேலை செய்ய முடிந்தது. ரஜினி , கமல், விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி ஹீரோக்கள் படங்களில் வேலை செய்ய முடிந்தது.  நான் வேலையில் சின்சியராக இருப்பேன். அந்தவகையில் என்னை ஒரு நிர்வாகியாக பார்க்காமல் சகோதரனாகவும் அன்பு காண்பித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘மன்மதன் அம்பு’ படத்துக்கு நான்தான் தயாரிப்பு நிர்வாகி. என்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு ‘ஏழாம் அறிவு’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார் உதயநிதி. ‘ஏழாம் அறிவு’ லொகேஷனில் நண்பர்களுடன் லந்து பண்ணிக் கொண்டிருந்தேன். பின்னால் யாரோ வந்து நின்ற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தால் சூர்யா சாரும், முருகதாஸ் சாரும். நான் எல்லோரையும் இமிட்டேட் பண்ணியதை ரசித்துச் சிரித்தார்கள்.

 அதுவரை நான் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ‘ஏழாம் அறிவு’ படத்தில் முருகதாஸ் சார் நடிக்க வைத்தார். அப்படிதான் நான் நடிகனானேன். தொடர்ந்து ‘கும்கி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘நெடுஞ்சாலை’, ‘தூங்கா நகரம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘நீர்ப்பறவை’, ஆண்டவன் கட்டளை’ போன்ற ஏராளமான பட வாய்ப்பு கிடைத்தது. ஏழு வருடங்களில் அறுபது படங்களை நெருங்கிவிட்டேன்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பற்றிச் சொல்லவேண்டும். எனக்கு சொந்த தம்பிகள் இருந்தாலும் அப்படி இருந்திருக்கமாட்டார்கள். என் மீது பாசம் அதிகம் உள்ளவர். தயாரிப்பு நிர்வாகியாக இருந்தபோது நிறைய உதவியிருக்கிறார். இப்போது அவர் விக்ரம் சாரை வைத்து ‘கோப்ரா‘ படத்தை இயக்கி வருகிறார். அதிலும் நானிருக்கிறேன்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நான் எதிர்பார்க்காமலேயே இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஒரு நடிகனாக என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அதற்குக் காரணம் என்னுடைய இயக்குநர்கள்தான். அவர்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்.

இப்போதும் தம்பி ஸ்தானத்தில் நிறைய இயக்குநர்கள் உதவி வருகிறார்கள். ‘தம்பி’ படத்தில் முருகேஷ் என்ற வருங்கால இயக்குநர் என் பெயரை சிபாரிசு செய்ததால்தான் நடிக்க முடிந்தது. கார்த்தி தம்பியும் அவருடைய அண்ணன் சூர்யா சாரும் என் மீது பாசம் காண்பிப்பதுண்டு.

சினிமாவில் எனக்கு தம்பிகள் கிடைக்க காரணம் என்னுடைய உண்மை, நேர்மை, உழைப்பு மட்டுமே. நான் இயல்பாகவே கொஞ்சம் கோபக்காரன். நடிகனான பிறகு தம்பிகள் சிலர் என்னை சாந்தமாக்கியுள்ளார்கள்.அன்புத் தம்பிகள் அனைவருக்கும் நன்றி!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)