தமிழர் எடுக்கும் ஹாலிவுட் படம்!



திருச்சிக்காரரான டெல் கே.கணேசன், ஹாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் தயாரித்து அசத்தி வருகிறார். நடிகர் நெப்போலியனின் நண்பரான அவர் பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.

“உங்க பின்னணி என்ன?”

“பச்சைத்தமிழன் நான் . திருச்சி சொந்த ஊர். அரசுப்பள்ளியில தான் படிச்சேன். மிடில் க்ளாஸ் குடும்பம். அண்ணா பல்கலைக்கழகத்துலே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சுட்டு, முப்பது வருஷத்துக்கு முன்னாடி மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டேன். அமெரிக்காவுலே ஐடி துறையில் வேலை கிடைச்சது. படிச்சிக்கிட்டே வேலை பார்த்தேன். தனியா நிறுவனம் ஆரம்பிக்கற அளவுக்கு திறமையை வளர்த்துக்கிட்டேன். இப்போ ஒரு ஐடி கம்பெனியை நடத்திட்டு வர்றேன்...’’

“ஐடி கம்பெனி முதலாளி ஏன் படமெடுக்க வந்தார்?”

‘‘அமெரிக்காவுல ஹாலிவுட் ஏரியாவுக்கு அடிக்கடி தொழில் நிமித்தமா போவேன். ஒருநாள் திடீர்னு ஒரு படம் தயாரிச்சா என்னன்னு தோணிச்சு. ‘உன் பொழப்பு நல்லாதானே போகுது... ஏன் இந்த வேண்டாத வேலை’னு நண்பர்கள் சொன்னாங்க. அதோட என்னால முடியாது என்பது மாதிரியும் கிண்டல் செய்தாங்க.

இந்த கிண்டலே என்னை உற்சாகமாக்குச்சு. இறங்கிப் பார்த்தா என்னன்னு முடிவு பண்ண வைச்சது. எல்லா நுணுக்கங்களையும் கத்துகிட்டு இறங்கினேன். இப்போ வெற்றிகரமா படமும் தயாரிச்சு முடிச்சுட்டேன்.நண்பர்கள் எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க. ஏன்னா, அவங்க தமிழ்ப் படம் தயாரிப்பேன்னுதான் நினைச்சாங்க. ஹாலிவுட்டுலே படம் தயாரிப்பேன்னு யாருமே எதிர்பார்க்கலை. ஹாலிவுட்டுலே எல்லாத் தொழிலையும் போல சினிமாவும் ஒரு பணி. இப்போ நண்பர்கள் எல்லாரும் பெருமையா பாக்குறாங்க.”“நீங்க தயாரித்திருக்கும் படத்தைப் பத்திச் சொல்லுங்க...”

“இது ஒரு ஹார்ரர் திரில்லர். ‘டெவில்ஸ் நைட்’ என்பது தலைப்பு. அமெரிக்காவில் செவ்விந்தியப் பேய்கள் பற்றி நிறைய மூடநம்பிக்கை உண்டு. நம்ம படத்தோட கதை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். சாம் லோகன் என்கிற ஹாலிவுட் டைரக்டர் இயக்கியிருக்கிறார். கைபா பிலிம்ஸ் சார்பில் நான் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இப்படம் உலகமெங்கும் விரைவில் ரிலீஸ் ஆகுது. தமிழ் நம்ம தாய்மொழி ஆச்சே? அதனாலே தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும்கூட டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணப்போறேன்.”

“இருந்தாலும் ரிஸ்க்தானே சார்?”

“சொன்னா நம்ப மாட்டீங்க. தமிழில் படம் எடுக்குறதைவிட இது ரொம்ப சேஃப். இங்கே உச்ச நட்சத்திரங்களை வைச்சு பிரம்மாண்டமா படம் எடுக்குற செலவுலே தரமான ஒரு ஹாலிவுட் படத்தையே எடுக்க முடியும் . தவிர உலகம் முழுக்க விநியோகிப்பதும் சுலபம். லாபம் பார்க்கவும் நூறு சதவிகிதம் வாய்ப்பிருக்கு. கண்டிப்பா நஷ்டம் ஏற்படாது. குறைந்த செலவுல தரமான படங்களா எடுத்து முக்கியமான நிறுவனமா கூட ஹாலிவுட்டுலே காலூன்ற முடியும். இதையெல்லாம் யோசிச்சுதான் ஹாலிவுட்லே படம் தயாரிக்க முற்பட்டேன்.

‘டெவில்ஸ் நைட்’ படத்தை தயாரிச்சு முடிச்சுட்டு இப்ப ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’னு அடுத்த ஆங்கிலப் படத்தை தயாரிக்கவும் தொடங்கிட்டேன். தமிழ்த் தயாரிப்பாளர்கள், ஹாலிவுட்டில் இருக்கிற அவென்யூஸை பயன்படுத்திக்கணும். அதுக்கு நானே ஒரு நல்ல முன்னுதாரணமா இருப்பேன்னு நினைக்கிறேன்.”

“சார், நீங்க தமிழ்ப் படங்கள் எல்லாம் பார்ப்பீங்களா?”

“சினிமாவுக்கு ஏதுங்க மொழி? சென்னையில் இருந்தப்போ நிறைய படம் பார்த்தேன். ஹாலிவுட் படங்கள் எல்லாம் எனக்கு அப்போதான் அறிமுகம். அப்போ தொழில்நுட்பத்தை எல்லாம் கவனிச்சதில்லை. பொழுதுபோக்குக்குதான் அப்போ சினிமா. எண்பதுகளோட இறுதில சென்னைல காலேஜ் படிச்சப்ப வார்டனுக்கு தெரியாம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து படம் பார்ப்போம்.

சஃபையர், அண்ணா, அலங்கார், சாந்தி தியேட்டர்களில் படம் பார்த்துட்டு, கொத்தவால்சாவடிலே இருந்து ரிட்டர்ன் ஆகற லாரில ஏறி ஹாஸ்டலுக்கு வருவோம். கமுக்கமா ரூம்லே படுத்துடுவோம். அதேநேரம் படிப்பையும் விடல. அந்த காலேஜ் காலம்தான் இப்போதைய என் தயாரிப்பு முகத்துக்கு காரணம்னு நினைக்கறேன். ஏன்னா என் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் துளிகூட சம்பந்தமில்லே...’’

“ஹாலிவுட்டில் படம் எடுக்குறது அவ்வளவு ஈஸியா?”

“ஏற்கனவே சொன்னமாதிரி சினிமா அங்கே சின்சியரான தொழில். ஐடி கம்பெனி நடத்துற மாதிரி சினிமா கம்பெனியும் நடத்தலாம். ஹீரோ, டைரக்டரையெல்லாம் விட ஸ்க்ரிப்ட்தான் அங்கே ஸ்டார். கதாசிரியர் செட்டுக்கு வர்றப்ப இயக்குநர், நடிகர்னு எல்லாருமே அச்சப்படுவாங்க. பரபரப்பாகிடுவாங்க. திரைக்கதை ஆசிரியர்தான் ஹீரோ. தியேட்டருக்கு வர்ற மக்களும் கதை ஆசிரியர் பெயர் பார்த்து வருவாங்க.

இங்கே ஹீரோவுக்கு ரசிகர் இருப்பது போல அங்கே கதாசிரியருக்கு ரசிகர்கள் அதிகம். கதையையும் ஸ்கிரிப்ட்டையும் ஓகே பண்ணின பிறகுதான் நடிகர்கள், இயக்குநர்கள்னு செலக்ட் பண்ணுவாங்க. எங்க ‘டெவில்ஸ் நைட்’ படத்தோட இயக்குநர் சாம் லோகனேதான் ஸ்கிரிப்ட்டும் எழுதியிருக்கார். உங்க கிட்டே நல்ல கதை இருந்தா, சினிமா எடுக்குறது ஈஸிதான். முன்பு தமிழிலும் அப்படிதான் நிலைமை இருந்திருக்கு...

வெளியிட ப்ரொஃபஷனலான பல நிறுவனங்கள் இங்கே இருக்கு. சாதாரண ஒரு சோப்புக்கு எப்படி தயாரிப்பு, சேல்ஸ், மார்க்கெட்டிங், விளம்பரங்கள்னு பல துறைகள் இருக்கோ அப்படி சினிமாவையும் அணுகறாங்க. ஆங்கிலப் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இருக்கு. ஹாலிவுட் படத்தை பல மொழி களில் டப் செஞ்சு வெளியிட முடியும். இதுக்காகவே பல நாட்டு நிறுவனங்கள் இருக்கு.”
“படத்துலே நெப்போலியன் இருக்காரே?”

“எங்க ஊர்க்காரர் ஆச்சே? தமிழ் நடிகர், இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர்னு அவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. இப்போ அமெரிக்காவிலேயே செட்டில் ஆயிட்டார். முதல் சந்திப்பிலேயே நாங்க நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். படம் தயாரிக்கணும்னு முடிவு பண்ணதுமே நம்ம நண்பர் நெப்போலியன் அதுலே இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

அருங்காட்சியக பாதுகாவலரா நடிச்சிருக்கார். ஆக்சுவலா, ‘இந்த ரோலை இந்தியர்தான் செய்யணும்’னு கதாசிரியர் ஸ்கிரிப்ட்டுலேயே குறிப்பிட்டிருந்தார். இந்தியான்னு நினைச்சுத்தானே கொலம்பஸ் அமெரிக்க மண்ணுலே காலடி வைச்சார். அதுக்கான குறியீடா இந்த கேரக்டர் வருது.

செவ்விந்தியர்களுக்கு சொந்தமான கத்தி ஒண்ணு அருங்காட்சியகத்துல இருந்து காணாமப் போகும். அதைக் கண்டுபிடிக்க பெண் போலீஸ் வருவாங்க. அவங்களுக்குத் துணையா நெப்போலியன் சாரும் இன்வெஸ்டிகேஷன்ஸ்ல ஈடுபடுவார்...’’“நம்ம ஊர் சினிமாவைப் பற்றி அங்கே என்ன நினைக்கிறாங்க?”

“உலகத்துலயே காலைக்காட்சி சினிமா பார்க்கும் பழக்கம் இந்தியர்களிடம் தான் உள்ளது. அதிலும் குறிப்பா தமிழ்நாட்டில் அதிகாலையிலேயே சினிமா பார்ப்பவர்கள் ஏராளம். இதை ஹாலிவுட்டில் ஆச்சரியமா பார்க்குறாங்க. சினிமாவை உங்களை மாதிரி யாரும் கொண்டாட முடியாதுன்னு சொல்லுவாங்க. தென்னிந்தியப் படங்களைவிட இந்திப் படங்கள்தான் ஹாலிவுட்லே பிரபலம்.

இருந்தாலும் தென்னிந்தியர்கள்தான் புத்திசாலின்னு அமெரிக்கர்களுக்கு ஓர் எண்ணம். ‘கூகிள்’ சுந்தர் பிச்சை, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மேலெல்லாம் அவங்க பெரிய மதிப்பு வைச்சிருக்காங்க.”

“தமிழிலும் படம் எடுப்பீங்களா?”

“இப்போ ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ புரொடக்‌ஷன் போயிக்கிட்டிருக்கு. இதோட இன்னும் மூணு படமும் தயாரிப்பு நிலையில் இருக்கு. ஒரு படத்துலே நம்ம ஊரு ஜி.வி.பிரகாஷ்குமார் கூட நடிக்கிறார். இதையெல்லாம் முடிச்சிட்டு தமிழிலும் செய்யலாம்னு இருக்கேன்.”