உலா வராத நந்தவனத் தேரு!



மின்னுவதெல்லாம் பொன்தான்-59

மின்னல் மாதிரி சில கீற்றுகள் பளிச்சென்று தெரியும். அதோடு சரி. அந்தத் தொடக்கத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளாவிட்டால், அதன் பிறகு அவர்கள் விட்ட இடத்தை பிடிக்க முடியாமலே போய்விடும் அதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீநிதி.கேரளாவில் பிறந்தவர்தான். என்றாலும் கூட அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில்.

இயற்பெயர் அபோலி பட்டேல். 1995ல் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ‘நந்தவனத் தேரு’ படத்தில் அபோலி பட்டேலை, ஸ்ரீநிதி என்று தமிழ் நிலத்துக்கு தகுந்த நாமகரணம் சூட்டி அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்.

முதல் படமே நவரச நாயகனுக்கு ஜோடி என்கிற வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?

எளிமையான அழகு. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம். பாந்தமான நடிப்பு. இதுதான் ஸ்ரீநிதி. ‘நந்தவனத் தேரு’ கதைப்படி பெரிய ராஜகுமாரியாக வாழ்ந்திருக்க வேண்டிய ஜமீன் குடும்பத்துப் பொண்ணு. எனினும் சூழ்நிலை காரணமாக வறுமையில் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறவர். ராஜவம்சத்து பெண்ணுக்குரிய அழகும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் எளிமையும் தெரிய வேண்டும் என்கிற சிக்கலான தோற்றம்.

ஆர்.வி.உதயகுமார் ஏறக்குறைய பெண்கள் வரை ஆடிசன் செய்தார். அப்போது இருந்த சில முன்னணி நடிகைகளையே வேண்டாம் என்று நிராகரித்தார். கடைசியாகத்தான் ஸ்ரீநிதியை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்ரீநிதியிடம் ஒரு சிக்கல் இருந்தது. அப்போது அவருக்கு நடிக்கவும் தெரியாது, தமிழும் தெரியாது. இந்த இரண்டு சவால்களையும் சமாளித்துதான் ‘நந்தவனத் தேரு’ படத்தில் நடித்தார்.

வறுமையில் வாடும் ராஜகுமாரியை ஒரு திருடன் பெரிய பாடகியாக்கி ஜெயிக்க வைக்கிற சென்டிமென்டலான கதை. அன்றைக்கு கார்த்திக் மோஸ்ட் வாண்டட் ஹீரோ. காதல் சப்ஜெக்ட். அறிமுக ஜோடி படம் ஓரளவுக்கு ஹிட்டாச்சு.“யாருப்பா இந்த பொண்ணு அழகா இருக்கே.. . நல்லா நடிச்சிருக்கே…” என்று சொன்னார்கள். ஆனால் அடுத்த படத்தில் நடிக்க யாரும் வாய்ப்பு தரவில்லை.

வாய்ப்புக்காக காத்திருந்து பார்த்தவர், அதன்பிறகு மும்பைக்கே திரும்பி விட்டார்.‘நந்தவனத் தேரு’ பார்த்த மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர், அவரை  சில வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்பு கொண்டார். அதனால் தனது சொந்த மொழியான மலையாளத்தில் ‘மார்ழி’ என்ற படத்தில் நடித்தார். ஏனோ, அந்தப் படமும் அவருக்கு சரியாக அமையவில்லை.

அதன்பிறகு சில ஆண்டுகள் அவரைக் காணவில்லை. எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது. பிறகு மீண்டும் மலையாள சின்னத் திரையில் நடிக்க ஆரம்பித்தார். அப்புறம் அப்படியே தமிழ் சின்னத்திரை சீரியல்களில் காணப்பட்டார். அப்படியே கடந்து விட்டது அவர் காலம்.

2014அம் ஆண்டு ‘தில்ரங்கிலி’ என்ற கன்னடப் படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு சரியாக வரவில்லை.  இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
ஹீரோயினுக்கு உரிய வயது கடந்து விட்ட நிலையில் நடிப்பு முயற்சியை ஓரம் கட்டிவிட்டு ஒரு கன்னடப் படத்திற்கு கதை , திரைக்கதை, வசனம் எழுதினார். அதுவும் பெரிதாக பேசப்படவில்லை. நந்தவனத் தேரில் பவனி வந்த ஸ்ரீநிதி அந்தத் தேரை விட்டு இறங்கிய பிறகு மற்றொரு தேரில் ஏறவே இல்லை.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்