சென்னை கொண்டாட்டம்! பார்வையாளர்களைக் கவர்ந்த பிரா!17வது சென்னை உலகப் பட விழாவில் திரையிடப்பட்ட சில படங்களின் கதைச்சுருங்களையும் விழாவின் சிறப்பம்சங்களையும் இவ்வாரமும் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநரும் கதாசிரியருமான வி.பிரபாகர்.
வியட் ஹெல்மர் (Viet Helmer) இயக்கிய ‘தி பிரா’ என்ற படம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. காரணம், 90 நிமிடங்கள் வசனம் ஏதுமின்றி பின்னணி இசையையும், சிறப்பு சபதங்களையும் மட்டும் இணைத்து காட்சிகளை சலிப்பின்றி ரசிக்கவைத்திருந்தார்கள்.

கதாநாயன் நுர்லன் ஒரு தனியார் ரயில் ஓட்டுநர். அவர் இயக்கும் ரயில் செல்லும் ரெயில்வே டிராக் ஒரு குடியிருப்பு காலனி பகுதியைக் கடந்து செல்லும்படி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்களும் மிக சகஜமாக பயம் ஏதுமின்றி டிராக்கில் துணிகளைக் காய வைப்பது, சுண்டாட்டம் விளையாடுவது, சைக்கிள் ஓட்டிச்செல்வது என  சர்வ சாதாரணமாக இருக்கிறார்கள்.

ரயில் வரும் முன் சிக்னல் கண்ட்ரோலராக இருக்கும் பெண் சிக்னல் விளக்கை எரியவிட்டதும் அங்குள்ள டீக்கடையில் வேலை செய்யும் விசில் சிறுவன் விசிலை ஊதியபடி டிராக்கில் ஓடுவான்.விசில் சத்தம் கேட்டதும் அனைவரும் துரிதமாக செயல்பட்டு ஓடி தங்கள் உடமைகளையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்வார்கள்.

இது தினமும் நடைபெறும் வழக்கமான ஒன்று. அதையும் மீறி துணிகள் ரெயில் முன் மாட்டிக்கொண்டால் டிரைவர் நுர்லன் விசில் சிறுவனின் உதவியோடு பொருளை உரியவர்களிடம் சேர்த்துவிடுவார்.

ரிட்டையர்மெண்ட்டை தொடும் நிலையில் உள்ள அவர் அந்த ஊரில் உள்ள ஒரு சிறிய உணவகத்தின் மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.சிறுவன் டிராக் ஓரமாக ஒரு சிறிய வீடு அமைத்து தங்கியுள்ளான். அவனுக்கு பொதுமக்கள் உணவு கொடுத்து உதவுகினறனர். ஒரு நாள் நுர்லன் ரெயில் ஓட்டிவரும்போது ஒரு வீட்டின் ஜன்னல் வழியே இளம்பெண் ஒருத்தி நீல நிற பிரா அணிவதைப்பார்க்கிறார்.

அவள் முகத்தைப்பார்க்க முடியவில்லை. மறுநாள் எதிர்பாராதவிதமாக அந்த நீல நிற பிரா ரயில் முன் மாட்டிக்கொள்கிறது. விசில் சிறுவனின் உதவியுடன் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி அந்த பிராவிற்கு உரிய பெண்ணைத் தேடுகிறார் அவர். அதனால் பல அவமானங்களையும் இன்னல்களையும் சந்திக்கிறார். சிறுவனின் டீக்கடை வேலையும் பறிபோகிறது.

அந்தப் பெண்களின் கணவன்மார்களால் சிறுவனும் அவரும் அடித்து விரட்டப்படுகின்றனர். இறுதியில் ரயில்வே டிராக்கில் அடித்துத் தள்ளப்படும் கதாநாயகன் சிறுவனால் மயிரிழையில் காப்பாற்றப்படுகிறார். நுர்லனுக்கு பதில் அவருடைய குள்ளமான உதவியாளர் ரயில் ஓட்டும்போது டிராக்கில் விழுந்துகிடக்கும் தலைமை ஓட்டுநர் உயிரைக் காப்பாற்ற, அவர் துடிப்பதும் டென்ஷனில் நம்மைத் தவிக்க வைப்பதும் உச்சகட்ட காட்சியாக நகைச்சுவைப் படத்தை ‘நச்’ என நிமிர்த்தி நிற்க வைக்கிறது. பிராவுக்கு உரிய பெண்ணை அவர் கண்டுபிடிப்பதே கிளுகிளுப்பான கிளைமேக்ஸ்.
டேவிட் நர்வேத் (David Nawrath)  இயக்கிய மற்றொரு படம் ‘அட்லஸ்்’ (THE MOVER).

60 வயது சீனியர் சிட்டிஸன் வால்டர் கதாநாயகன். ரியல் எஸ்டேட் ஓனர் ரோஸன் குரோன் என்பவருக்கு வலது கரமாக பணிபுரிகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கணவன்- மனைவி-குழந்தை உள்ள சிறிய குடும்பத்தின் பிளாட்டை குறைந்த விலைக்கு வாங்கி பலமடங்கு லாபத்திற்கு விற்க முயற்சி செய்யும் மாஃபியா கும்பலுக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வால்டருக்கு ஏற்படுகிறது.

அந்தக் குடும்பத்தை மிரட்டி காலி செய்ய வேண்டிய வால்டரே மாஃபியா கும்பலின் கொலை வெறித்தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றுகிறார். அதற்காக ஒரு கொலையும் செய்கிறார். அதன்பிறகு ஒரு உண்மை தெரிகிறது, அந்த வீட்டில் குடியிருப்பது, வால்டரின் சொந்த மகன் என்று! அவன் சிறுவயதிலேயே தாயுடன் பிரிந்து சென்றுவிட்டதால் தந்தையின் முகம் தெரியாமல் வளர்க்கப்பட்டவன்.

மகனின் குடும்பத்தைக் காப்பாற்ற வால்டர் கொலை செய்த மாஃபியா தாதாவின் உறவினர்கள் வால்டரைத் துரத்தித் துரத்தி அடிக்கின்றனர்.
இறுதியில் மகன் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரையே கொடுக்கிறார் அவர். ஆக் ஷனும் சென்டிமென்டும் கலந்த திரைக்கதை. கதாநாயகனாக நடித்துள்ள ரெயினர் பாக் (Rainer Bock)கின் சிறந்த நடிப்பு படத்தின் பெரிய பலம். பல இடங்களில் நம்ம ஊர் சரத்குமாரை நினைவுபடுத்து
கிறார்.

இது ஆலா எடின் அல்ஜிம் இயக்கிய (Alaa Eddine Aljem) ‘தி அந்நோன் செயின்ட்’ (The Unknown Saint) என்ற அரேபிய படத்தின் கதை.
அமின் என்ற வாலிபன் பெரிய தொகையைத் திருடிவிட்டு ஓடுகிறான். போலீஸ் அவனைத் துரத்த மலைப்பகுதிக்கு ஓடிவரும் அமின் பணப்பையை மலைமீது குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அதன் மீது மண் சமாதி அமைத்துவிட்டு ஓடி போலீஸிடம் அகப்பட்டு சிறைக்குச் சென்றுவிடுகிறான். சில வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு பணத்தை எடுக்க அங்கு வரும் அவன் அதிர்ச்சி அடைகிறான்.

அவன் பணத்தை புதைத்த இடத்தின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டு  பிற பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் பலர் அங்கு வந்து வழிபடுகின்றனர்.
அங்கிருந்து எப்படியாவது பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யும் அமின் அருகிலுள்ள ஒரு விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறான்.

அறை வாடகையை அதன் மேனேஜரிடமே திருடிக்கொடுக்கிறான். அந்தக் கோயிலைக் கட்டிய மத நம்பிக்கையுள்ள நபர் இரவு முழுவதும் நாயுடன் காவல் இருக்கிறார். அவரை வீழ்த்த முதலில் காவல் காக்கும் நாயின் எலும்பு முறியும் அளவுக்கு அடித்துக்காயப்படுத்துகிறான் அமின். அந்த ஊருக்கு வந்த டாக்டர் நாய்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறார்.

அமின் மற்றொருவனையும் கூட்டுசேர்த்துக்கொண்டு கோயிலுக்கு வெடி வைத்து பணத்தை எடுக்க முயற்சி செயகிறான். அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிய, பணம் ஒருவன் கையில் கிடைக்கிறது. அந்த ஊருக்கு புதிதாக வந்த மருத்துவர் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரி மாத்திரையைக் கொடுப்பது நம்ம ஊர் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஞாபகப்படுத்துகிறது. ஒரே லொகேஷனில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது.

லீடிங் லீ (Leading Lee) இயக்கிய  ‘தி சைலன்ஸ் ஆஃப் ஓம்’ (The Silence of Om) படம் எப்படி என்று பார்க்கலாம்.இது ரிவர்ஸ் கட் ஃபார்முலாவில் மிகச் சிறந்த முறையில் எடிட் செய்யப்பட்ட படம். கேங்ஸ்டர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உடலில் வரைந்து கொள்ளும் டாட்டூவை கதாநாயகன் ஓம்-கா வரைந்து வந்ததைப் பார்த்து கோபத்துடன் அவனின் தந்தை அவனை அடிப்பது முதல் அனைத்துக் காட்சிகளும் தனுஷ் நடித்த தமிழ்ப்படம் பார்ப்பது போலவே இருந்தது.

ஆனால் கதைப்படி அவனுடைய குடும்பத்தில் பிறந்த கடைசி வாரிசு அவன் என்றும் ஏதோ சாபத்தினால் அவன் வாழும் ஒவ்வொரு நாளும் வாழ்வின் இறுதி நாளாகவே ஓம்காவிற்கு தோன்றுகிறது. அவன் போலீஸாரிடம் சிக்கி சிறையில் இருக்கும் காலகட்டத்தில் கூட அவனை நல்லவன் என்று நம்பும் காதலி ஜிங்-ஜுவான் அவனுடைய முதுகில் இருக்கும் டாட்டூவைப்பார்த்ததும் மயங்கி விழுகிறாள்.

ஓம்-கா வரைந்துள்ள கேங்ஸ்டர் டாட்டூவைப் பார்த்துதான் மயங்கிவிட்டாள் என்று  ஆடியன்ஸை நினைக்கவைத்து, ரிவர்ஸ் கட்டில் அவன் குடும்பத்தை வரைந்து டாட்டூவாக வைத்திருப்பதாக விஷுவலாகக் காண்பிக்கும் காட்சி ஹைலைட்.இது தவிர ஜெர்மானிய படமான ‘பலூன்’, ‘ஜஸ்ட் 6.5’, ‘தி கன்ட்ரி’ ஆகிய சிறந்த படங்களும் திரையிடப்பட்டன.

2019ம் ஆண்டின் 17வது உலகத்திரைப்பட விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான விருது  வழங்கும் விழா அரங்கம் நிறைந்த திரையுலக பிரபலங்களுடனும் ரசிகர்களுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ ஸ்க்ரீன்ப்ளே ஜூரி விருதையும், இயக்குநர் பார்த்திபனின் ’ஒத்தசெருப்பு’ இரண்டு  விருதுகளையும் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘பக்ரீத்’ ஆகிய இரு படங்களும் இணைந்தும் விருதினைத்தட்டிச் சென்றன.

அமிதாப் பச்சன் விருதை இயக்குநர் ராம்குமாரும் சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘ஜீவி’ படத்திற்காக கோபிநாத்தும் பெற்றனர்.இந்த உலகப்பட விழாவை சிறப்பாக நடத்தியதற்கு மிகவும் பாராட்டப்பட்டவர் சென்னை ஃபிலிம் பெஸ்டிவல் அமைப்பின் செயலாளர் தங்கராஜ்.

நமது தமிழகத்தைச்சேர்ந்த திரைப்படத்துறையினர் கோவா திரைப்படவிழாவிற்குச் சென்றால், அனைவரிடமும் அன்பு பாராட்டி உதவிகள் செய்யும் கோவா ராஜு அவர்களையும் இந்த இனிய தருணத்தில் பாராட்டுகிறேன்.