பாம்பாட்டம் ஆடுகிறார்-ஜீவன்!



மாயாஜாலப் படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர் வி.சி.வடிவுடையான் இந்த முறை ஐடியாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கவுள்ளாராம். படத்தின் பெயர் ‘பாம்பாட்டம்’. படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.‘‘பொதுவாக என்னுடைய படங்களில் இருக்கும் மந்திர தந்திரக் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது. தன்னுடைய புத்திசாலித்தனத்தால் ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதைப் போன்று திரைக்கதை அமைத்துள்ளேன்.

இந்தப் படத்தில் நாயகனாக ஜீவன் நடிக்கிறார். ஜீவன் சாரை அவ்வளவு எளிதாக கன்வின்ஸ் பண்ண முடியாது. அந்தளவுக்கு கதை மீதும் தன்னுடைய கேரக்டர் மீதும் கவனம் உள்ளவர். மொத்தம் மூன்று கதைகளை அவரிடம் சொன்னேன். இந்தக் கதை அவருக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்துக்காக அவர் கொடுத்துவரும் ஒத்துழைப்பு அதிகம்.  அவர் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இது மாறியுள்ளது. காரணம், இதுதான் அவர் நடிக்கும் முதல் ஹாரர்  படம்.

வழக்கமாக பார்க்கும் ஜீவன் சார் கெட்டப்பை இந்தப் படத்தில் பார்க்க முடியாது. ஹேர் ஸ்டைல், பாடி லேங்வேஜ் என்று லுக் முற்றிலும் மாற்றப்பட்டு ஃப்ரெஷ் லுக்கில் இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் எடுக்கிறோம். ஐந்து மொழிகளிலும் நேரடி படமாக வெளியாகும். மொத்தம் 150 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில்  படப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஐந்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக தமிழில் முன்னணியில்  உள்ள நடிகையொருவர் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பை டைட்டில் லோகோ அறிவிக்கும் சமயத்தில் வெளியிடவுள்ளோம்.

படம் டெக்னிக்கலாகவும் பேசப்படும். அம்ரீஷ் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். சூப்பர் சுப்பராயன் இசையமைக்கிறார்.
‘6.2’, ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வி.பழனிவேல் வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கிய வரும் எனக்கே இந்தப் படம் த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ரசிகர்களுக்கும் அந்த த்ரில்லிங் அனுபவம் கிடைக்கும்’’ என்கிறார் வி.சி.வடிவுடையான்.

- எஸ்