குணா சந்தானபாரதிடைட்டில்ஸ் டாக்-140

வாழ்க்கையில் நான் சந்தித்த ஏராளமான குணவான்கள் இருக்கிறார்கள். சுருக்கமாக சிலரைக் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.
எனக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கம் உள்ள கிராமம். என்னுடைய அப்பா எம்.ஆர்.சந்தானம் நடிகராக, தயாரிப்பாளராக சினிமாவில் ஜொலித்தவர். அப்பா தயாரித்த படங்களில் முக்கியமான படம் சிவாஜி சார் நடித்த ‘பாசமலர்’. அப்பாவின் உயரத்துக்கு காரணம் அவருடைய நல்ல குணம்.

அப்பா அடித்தட்டு நிலையிலிருந்து வாழ்க்கையில் நாடகம், சினிமா என்று படிப்படியாக முன்னேறியவர். சினிமாவிலும் சரி... பொதுவாழ்க்கையிலும் சரி... நல்ல குணம் உள்ளவர் என்று பெயரெடுத்தவர் அப்பா. ஆனால் அப்பாவை சின்ன வயதிலே இழந்துவிட்டேன். நான் பெரியவனாகி அப்பாவின் நண்பர்களைச் சந்தித்தபோது ‘உங்க அப்பா நல்ல மனுஷன். யாரையும் கெடுக்கணும் என்று நினைத்ததில்லை’ என்று சொல்லக்கேட்டுள்ளேன்.

என் வாழ்க்கையில் மறக்கவே கூடாத மற்றொரு நல்ல குணம் படைத்தவர் என்னுடைய மூத்த அண்ணன் காந்திராஜன். அவர் குடும்பத்துக்காக நிறைய தியாகங்கள் பண்ணியவர். ஒரு நிரந்தர வேலை கிடைக்கும்வரை கிடைத்த வேலையைச் செய்து எங்களைக் காப்பாற்றினார். அந்த மாதிரி  நல்ல குணம் உள்ள அன்ணன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம். நாங்கள் மொத்தம் ஐந்துபேர். தம்பி ஆர்.எஸ்.சிவாஜி, இரண்டு தங்கைகள், நான் உள்பட எல்லோரையும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணச் செய்தவர் என் அண்ணன்.

என்னுடைய அம்மா நல்ல குணவதி. நாங்கள் ஐந்து பேர் என்றாலும் எங்கள் எல்லோரையும் அம்மா  ஒரே மாதிரிதான் வளர்த்தார். ஆனால் அம்மாவும் நாங்கள் சின்ன வயதில் இருக்கும்போதே இறந்துவிட்டார். நான் பாட்டி செல்லம். அவரும் நல்ல குணவதி.

படிப்பு முடிந்தபிறகு சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன். அந்த ஆசையை நிறைவேற்றிய நல்ல குணம் படைத்தவர் கண்ணதாசன். கவிஞர்தான் என்னை இயக்குநர் தர் சாரிடம் சேர்த்துவிட்டார். என்னுடைய குருநாதரின் நல்ல குணத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு...நல்ல குணம் படைத்தவர். ஸ்டைலீஷாக படம் எடுக்கக்கூடியவர். வேகமாக படங்களை முடிப்பார். குணத்தைப் பொறுத்தவரை தங்கம். யார் எப்போது உரசிப்பார்த்தாலும் அவருடைய குணம் எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

உதவி இயக்குநர்களை உதவியாளர்களைப் போல் பார்க்காமல் சொந்த மகன் போல் நடத்துவார். என்னையும் பி.வாசுவையும் அப்படித்தான் நடத்தினார். என் குருவிடம் நான் வேலை பார்த்த முதல் படம் ‘ஓ மஞ்சு’. சினிமாவில் முதல் படத்தில் கிளாப் போர்டு அடிக்கக்கூட உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தர் சார் நான் வேலை செய்த முதல்  படத்திலேயே அவர் சொல்லச் சொல்ல... வசனத்தை எழுதும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி... படப்பிடிப்பின்போதுதான் அவர் இயக்குநராகவும் நாங்கள் உதவி இயக்குநராகவும் இருப்போம். மற்ற நேரங்களில் நண்பர்களைப் போல்தான் எங்களிடம் பேசுவார். எங்களோடு விளையாடுவார். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவார். அந்த மாதிரி குணம் படைத்த படைப்பாளியை சினிமாவில் பார்ப்பது அரிது. உதவியாளர்களை மதிக்கும் அவரின் குணத்துக்கு இன்னொரு உதாரணம் நாங்கள் போட்டுக்கொடுத்த ஷெட்யூல்படிதான் படமாக்குவார்.

அவரிடம் வேலை செய்யும்போது சம்பளம் என்று பெரிதாக எதிர்பார்க்கவில்லை. கொடுக்கும்போது வாங்குவோம். ஆனால் அந்த சம்பளம் மார்க்கெட்படி அதிகமாக இருக்கும். அவரிடம் இருக்கும்வரை எங்களை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டார். புதுக் கம்பெனியாக இருந்தாலும் சரி, பெரிய கம்பெனியாக இருந்தாலும் சரி, உதவியாளருக்கான மரியாதையைப் பெற்றுத்தருவார்.

உதவி இயக்குநராக இருந்த என்னை இயக்குராக்கி அழகு பார்த்த நல்ல குணத்துக்கு சொந்தக்காரர் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் கங்கை அமரன். என்னுடைய கல்லூரி நாட்களிலிருந்து பாவலர் சகோதரர்களுடன் எனக்கு பழக்கம் உண்டு. அதில் அமர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர்தான் என்னை இயக்குநராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அதன்படி என்னை இயக்குநராக வைத்து ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தைத் தொடங்கினார். பிறகு அந்தப் படத்தை  வேறொரு தயாரிப்பாளர் அண்டர்டேக் பண்ணினார்.என் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர்களில் அமருக்கு முக்கிய இடமுண்டு. அவரிடம் இருக்கும் நல்ல குணமே எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்வதுதான். நல்ல கவித்திறன் உள்ளவர். அமர் எழுதிய பாடல்கள் எல்லாமே அருமை. இசையைவிட, பாடல் எழுதவே அவருக்கு அதிகம் பிடித்திருந்தது.  அதில் பெயர் வாங்கவேண்டும் என்று விரும்பினார்.

அமர் எழுதிய பாடல் என்றால் ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்ற குத்துப்பாடல் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அமர் எழுதிய ஒரு அருமையான பாடல்... ‘அறுவடை நாள்’ படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடலை மறந்துவிட முடியாது. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள நாயகி காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியாத சோகத்தை மிக அற்புதமாகக் கூறுவதுபோல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

அதேபோல் ‘செந்தூரப்பூவே’ பாடல். உண்மையில் அப்படியொரு பூவே இல்லை. ’செந்தூரப்பூவே’ வந்தபின், பல ‘பூ’ பாடல்கள் வந்தன. ‘பூவரசம்பூ பூத்தாச்சு’, ‘கொத்தமல்லிப் பூவே’போன்ற பாடல்கள் அப்படி வந்தவை. ஒருமுறை ‘தியாகம்’ என்ற படத்தில் கண்ணதாசன் பாடல் எழுத வந்தார். கங்கை அமரனைப் பார்த்து, ‘செருப்பூ’, ‘சாயபூ’ தவிர எல்லாப் பூவையும் இவனே எழுதிட்டான்’ என்றார்.

அதன்பிறகு கண்ணதாசன் எழுதிய பாட்டுதான், ‘தேன்மல்லிப் பூவே’. ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வரும் ‘அந்தி வரும் நேரம்’ மெலடியும் அமரின் கற்பனையே. இப்படி... எத்தனையோ பாடல்களை அமரின் எழுத்தாற்றலுக்கு உதாரணமாகச் சொல்லலாம். அமர் யாருக்கும் கெடுதல் நினைக்காத குணமுள்ளவர். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பார். எப்போதும் கலகலப்பாக இருக்கணும் என்பதால் வயது பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார். தனிப்பட்ட விதத்தில் என்னுடைய ஆதங்கம் என்ன என்றால் அமருக்கான அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதே.

என்னுடைய நண்பர் வாசுவைப் பற்றியும் சொல்லவேண்டும். மக்களுக்குத்தான் அவர் இயக்குநர் பி.வாசு. எனக்கு உடன்பிறவாத சகோதரர். எங்கள் வீட்டில் நல்லது கெட்டது என்றால் முதல் ஆளாக அவரும், அதே மாதிரி அவர் வீட்டில் நல்லது கெட்டது என்றால் நானும் நிற்குமளவுக்கு எங்களுடைய நட்பு புனிதமானது.

நாங்கள் பேசாத நாளில்லை. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வாசு என்னிடம் பேசாமல் இருந்ததில்லை. அதேபோல்தான் நானும். நாங்கள் படம் இயக்கும்போது தனித்தனியாகப் பண்ணுவோம் என்று பேசிவைத்துதான் பிரிந்து படம் பண்ணினோம். மற்றபடி உறவுகளில் பிரிவு கிடையாது.

அதே மாதிரி கமல் சாரைப் பிரித்து என்னைப் பார்க்க முடியாது. அவரும் என்னுடைய பால்ய கால நண்பர். இருவரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்திப்பு நடக்கும். சினிமாவைப் பற்றி நிறையப் பேசுவோம். அதைப்பற்றி சொல்வதாக இருந்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
என்னிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட நல்ல குணம் என்று எதுவுமில்லை.

அவரிடமிருந்துதான்  நான் கற்றுக்கொண்டேன். கமல் சார் பெரிய ஜீனியஸ். அது எல்லோருக்கும் அமையாது. அது இறைவன் கொடுத்த வரம். விடாமுயற்சி, தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் இருப்பது, உண்மைக்காகப் போராடும் குணம் , நல்ல சினிமா எடுப்பது... இதெல்லாம் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய குணம் என்று பார்த்தால்... யாரையும் கெடுக்க நினைக்கமாட்டேன். நீங்களும் அடுத்தவர்களைக் கெடுக்க திட்டம் போடாதீர்கள். அப்படி இருந்தால் நல்லா இருப்பீர்கள். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்கள் வேலைக்கு நேர்மையாக இருங்கள். வேலையில் பேதமில்லை. எளிமையான வேலை செய்தாலும் அந்த வேலையை நேசித்துச் செய்யுங்கள். பலன் கிடைக்கும்.

யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை திறம்படச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் வெற்றி நிச்சயம். வயிற்றெரிச்சல் அடைந்தால் உடல்நலம்தான் பாதிக்கப்படும். நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. யாரிடமும் எதிர்பார்ப்புகளுடன் பழகியதுமில்லை.

எனக்கு நாற்பது, ஐம்பது வருடமாக பழக்கம் உள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். நண்பர்களுக்கு என்று இல்லாமல் எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். முடியாதபட்சத்தில் ‘இல்லை’ என்று சொல்லிவிடுவேன். சினிமாக்காரர்கள் என்றில்லை. பொதுவாக இதுதான் என் பழக்கம்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டேன். வெளிப்படையாகப் பேசுவேன். அதுதான் என் ப்ளஸ். அதுதான் என் மைனஸ். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய வெளிப்படைத்தன்மைக்காகவே அமர் என்னைத் திட்டுவது முண்டு. ஆனால் டிப்ளமசியாக எனக்கு பழகத் தெரியாது.

எனக்கு ஆசை எதுவுமில்லை. இப்போதும் நடிக்க அழைக்கிறார்கள். வரும் வாய்ப்புகளை உதறிவிடாமல் பண்ணுகிறேன். சம்பளம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. சிலர் சின்ன பட்ஜெட்டுடன் வருவார்கள். என்னால் அவர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோஷமே.

முடிந்தவரைக்கும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சி பண்ணுகிறேன். அதேசமயம் எல்லோரையும் திருப்திப்படுத்துவது கடினம். வயது கூடினாலும் சந்தோஷமாக இருக்கிறேன். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)