ஜெய் குறித்த Breaking news!



ஜெய் நடிக்கும் படம் என்றாலே பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது.  அந்த வரிசையில் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, படத்தலைப்பைப் போலவே படத்தைப் பற்றிய செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்குக் காரணம் சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் என்பது மட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் படம் தயாராவதும்தான்.

பிரம்மாண்டமாக காட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக, ஒட்டுமொத்த படக்குழுவும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்களாம். உச்சகட்டமாக சர்வதேசத் தரத்தில் 100 நிமிடங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம்.

தயாரிப்பாளர் திருக்கடல் உதயம், விஷுவல் விருந்தாகவே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம். இவர் வெங்கட் பிரபு- சரண் நடித்த ‘ஞாபகம் வருதே’, விஜய் வசந்த் நடித்த ‘ஜிகினா’ போன்ற படங்களைத் தயாரித்தவர்.விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார்.

‘‘இது வழக்கமான கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நேரடியாகச் சென்று நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இதற்காகவே பிரம்மாண்டமான அரங்குகளை நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்தினோம். தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத விஷுவல் எஃபெக்ட்ஸ் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

நாயகன் ஜெய் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பு. ஜெய் தன்னுடைய வேலையில் எப்போதும் கவனமாக இருக்கிறவர். இயக்குநருக்கு திருப்தியளிக்கும்வரை விடமாட்டார். அவர் சார்ந்த வேலைகள் முடிந்தாலும் படப்பிடிப்பில் கடைசிவரை இருந்து உற்சாகப்படுத்துவார். நாயகியாக பானு நடிக்கிறார்.  ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடிக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாலிவுட் கேமராமேன் ஜானி லால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்கிறார். பாடலைப் போன்று ஆடலும் சிறப்பாக வந்துள்ளது. டான்ஸ்மாஸ்டர் ராதிகா பெண்டு எடுத்துவிட்டார். ஆண்டனி சார் என்ன மாயம் செய்தார் என்று தெரியவில்லை. படம் விறுவிறுப்பாக வந்துள்ளது. இந்தப் படம் விஷுவல்ஸ்க்காக பேசப்படும்’’ என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.

- ரா