கன்னிராசி பொண்ணை தேடும் ஹீரோ!



சினிமா ஜாம்பவான்களின் வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் சினிமாவில் குதிக்கலாம் என்பது எழுதப்படாத விதி. அந்த விதிப்படி இயக்குநராக மாறியுள்ளார் சஞ்சய் பாரதி. இவர், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘குணா’,  ‘மகாநதி’  போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சந்தானபாரதியின் மகன்.

நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். டப்பிங், எடிட்டிங் என்று அனைத்துக் கட்ட வேலைகள் முடிந்து ரிலீஸ் பரபரப்பில் இருந்த சஞ்சய் பாரதியிடம் பேசினோம். சினிமாக்காரரின் மகன் என்பதால் படபடபில்லாமல் நிதானமாக பேச ஆரம்பித்தார்.

“திடுதிப்புன்னு டைரக்டராயிட்டீங்க?”

“நீங்க சொல்றது சரிதான். ஏன்னா, என்னை நடிகனாக ‘நாங்க’, ‘புத்தகம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘கூட்டத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் எனக்கு டைரக்டராக வேண்டும் என்பதுதான் சின்ன வயது ஆசை. எனக்குள் அந்த ஆசை வந்தது ஆச்சர்யப்படுவதற்குரிய விஷயமில்லை. காரணம், என்னுடைய குடும்பம்.

தாத்தா எம்.ஆர்.சந்தானம் தயாரிப்பாளர். ‘பாசமலர்’ படத்தைத் தயாரித்தவர்.  அப்பா சந்தானபாரதி இயக்குநராக ஏராளமான படங்களை இயக்கியவர். சித்தப்பா ஆர்.எஸ்.சிவாஜி புகழ்பெற்ற நடிகர். இப்படி... என்னைச் சுற்றி சினிமா ஆளுமைகள் இருந்ததால் இயல்பாகவே எனக்குள் சினிமா மீது ஆர்வமும், குறிப்பாக படம் இயக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.

படிப்பு முடிந்ததும் அப்பாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். வாழ்த்தி அனுப்பி வைத்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய் சாரிடம் ‘தேவி’, ‘வாட்ச்மேன்’,‘ கரு’,‘ வனமகன்’ உட்பட ஏராளமான படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். அவரிடம் சினிமா மேக்கிங் கற்றுக்கொண்டபிறகு தனியாக படம் இயக்க முடியும் என்ற தைரியம் வந்ததும் வெளியே வந்தேன். அந்தவகையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைவிட டைரக்‌ஷன் பண்ணவேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்குள் அதிகமாக இருந்தது.”

“டைரக்‌ஷன் சான்ஸ் எப்படி கிடைத்தது?”

“மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சார்தான் காரணம். ஒரு படவிழாவில் அவரைச் சந்திக்கும்போது கேஷுவலாக விசாரித்தபோது படம் இயக்குவதற்காக கதை ரெடி பண்ணிவைத்திருக்கிறேன் என்றேன். சார் ‘டைட்டில் என்ன’ என்று கேட்டார். டைட்டிலைச் சொன்னதும் அதில் இம்ப்ரஸானவர் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாரிடம் கதை சொல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தார்.

கோகுலம் கோபாலன் சார் கதையைக் கேட்டுவிட்டு உடனே ஓ.கே. சொல்லிவிட்டார். ‘பழசி ராஜா’, ‘காயங்குளம் கொச்சுந்நி’ போன்ற ஏராளமான சூப்பர்ஹிட் படங்களை மலையாளத்தில் தயாரித்த நிறுவனம் தமிழில் என்னுடைய இயக்கத்தில் முதல் படத்தைத் தயாரிப்பது மிகவும் சந்தோஷமளிக்கிறது.”

“படத்தோட டைட்டில் ஜோசியத்தைக் குறிக்கிறது. ஜோதிடம் பற்றிய படமா?”

“அப்படி இல்லை. இது கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட். கிளாமர்,  எமோஷனல், காதல் என்று  எல்லாமே இருக்கும். என்னுடைய அப்பா இயக்கிய படங்கள் போன்றும், கே.எஸ்.ரவிக்குமார் சார் படங்கள், பி.வாசு சார் படங்கள் போன்றும் எல்லாத் தரப்பு மக்களுக்குமான படமாக இருக்கும்.

ஜாதக ராசி பார்க்கும் பையனுக்கு கன்னிராசி பொண்ணு  கிடைத்தால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று ஜோசியர் சொல்வார். அதை வேதவாக்காக எடுத்துக்கொள்ளுகிறார் ஹீரோ. ஆனால் அவருக்கு செவ்வாய் தோஷக்காரர்கள் என்றால் பயம். நாயகியோ செவ்வாய் கிரகத்தில் குடியேற நினைக்கும் சயின்ஸ் மீது ஆர்வமுள்ள பெண். கருத்து முரண் உள்ள இவ்விரண்டு பேருக்கும் எப்படி லைஃப் செட்டாகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறேன்.

படத்தின் டிரெய்லரைப் பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது.”
“ஹரீஷ் கல்யாண்?”

“இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தக் கதைக்கு வளர்ந்து வரும் ஹீரோ தேவைப்பட்டார். அதனால் முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரியான ஒருவர்தான் ஹரீஷ். அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

இது ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ளே வருவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய படம். அப்படிப் பார்க்கும்போது கதைக்கு ஹரீஷ் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. ஹரீஷ் என்னுடைய நீண்ட நாள் நண்பர் என்பதும் கூடுதல் செளகரியமாக இருந்தது.
ஹரீஷைப் பொறுத்தவரை சினிமாவை நேசிப்பவர்.

சினிமா பின்னணி இருந்தாலும் பந்தா இல்லாமல் பழகக்கூடியவர். படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். நான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாகப் பன்ணியிருக்கிறார். ஓப்பனிங் சாங், காமெடி என்று இந்தப் படம் ஹரீஷை கமர்ஷியல் ஹீரோவாக நிறுத்தும். க்ளைமாக்ஸ் மற்றும் காமெடி காட்சிகளில் அதிகமாக  ஸ்கோர் பண்ணியிருப்பார்.”

“நாயகியின் கேரக்டருக்கு கே.ஆர்.விஜயான்னு பெயர் வைக்க்க் காரணம்?”

“யூனிக்காக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாயகியின் கேரக்டருக்கு கே.ஆர்.விஜயா என்று பெயர் வைத்தோம். படம் பார்க்கும்போது ஏன் அந்தப் பெயர் வைத்தோம் என்பது புரியும்.நாயகிகளாக திகங்கனா சூர்ய வன்ஷி, மோனிகா ரெபா ஜான் நடித்திருக்கிறார்கள். இதில் திகங்கனா முதன் முறையாக தமிழுக்கு வர்றார். பாலிவுட்டில் 2 படங்கள், தெலுங்கில் சில படங்கள் பண்ணியிருக்கிறார்.

தமிழ் அன்னிய மொழியாக இருந்தாலும் சொன்னதைப் புரிந்து பிரமாதமாகப் பண்ணினார். ப்ராம்ப்ட்டிங் இல்லாமல் ஜெனூய்னாகப் பண்ணினார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய ரவுண்ட் வரக்கூடியளவுக்கு தகுதியான நடிகை. மொத்தத்தில் கால்ஷீட் சொதப்பல், சம்பள பிரச்சனை என்று எந்தவித இடையூறும் கொடுக்காத புரஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். ‘பிகில்’ ரெபாவுக்கும் அருமையான ரோல். ‘பிகில்’ படத்தில் அவருடைய போர்ஷன் சிறிதாக இருந்தாலும் அதிகம் கவனம் ஈர்த்தவர். அந்த மேஜிக்கை இதிலும் பண்ணியிருக்கிறார்.”

“மற்ற நடிகர்கள்?”

“யோகிபாபு, பாண்டியராஜன், சார்லி, முனீஸ்காந்த் ஆகியோர் காமெடி ஏரியாவை குத்தகைக்கு எடுத்து கும்மியடித்திருக்கிறார்கள். முனீஸ்காந்த் கேரக்டர் வெற லெவலில் இருக்கும். ஜோசியர்கள் வித்யாதரன், செல்வின் ஆகியோருக்கும் படத்தில் முக்கியமான ரோல் இருக்கிறது. நாயகனின் அம்மாவாக ரேணுகா நடித்திருக்கிறார்.”

“பாடல்கள் நல்லா இருக்கே?”

“என்னுடைய முதல் படத்துக்கு ஜிப்ரான் சார் இசையமைத்தால் நல்லாயிருக்கும் என்று கதை எழுதும்போதே முடிவு பண்ணிவிட்டேன். நேட்டிவிட்டி படங்கள், கமல் சார் படங்கள் பண்ணிக்கொண்டிருந்த அவருக்கு இதுபோன்ற கமர்ஷியல் களம் புதியதாக இருந்ததால் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்.
படத்தில் ஐந்து பாடல்கள். ஒவ்வொரு பாடலும் வெரைட்டியாக இருக்கும்.

‘ஐ வான்ட் ஏ கேர்ள்’ என்ற ஓப்பனிங் பாடலை அனிருத் பாடியுள்ளார். விவேகா, மதன் கார்க்கி, கு.கார்த்தி ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பி.கே.வர்மா ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். சாரிடமிருந்து பெரிய சப்போர்ட் கிடைத்தது. ‘கோமாளி’ படத்துக்கு பணிபுரிந்த உமேஷ் ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணியிருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் ‘கோகுலம் மூவிஸ்’ முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இந்தப் படத்தை அடுத்து தொடர்ந்து இதே நிறுவனம் ஏராளமான தமிழ்ப் படங்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற பொறுப்போடும், படம் ஜெயித்து தயாரிப்பாளருக்கு லாபம் தரவேண்டும்  என்ற நோக்கத்தோடும் ஹானஸ்ட்டாக என்னுடைய வேலையைச் செய்திருக்கிறேன்.”

“அப்பா என்ன சொன்னார்?”

“அப்பா எப்பவுமே ஃப்ரெண்ட்லி டைப். சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதையும் நான் மறைக்கமாட்டேன். என்னுடைய விருப்பத்துக்கு அப்பா எப்போதும் குறுக்கே நின்றதில்லை. கதை எழுதி முடித்ததும் அப்பாவிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் சின்ன சின்ன கரெக்‌ஷன்ஸ் சொன்னார். அதன்பிறகுதான் கதையை ஃபைனல் பண்ணினேன்.

சமீபத்தில் டபுள் பாசிடிவ் பார்த்துவிட்டு அப்பா ‘நல்லா பண்ணியிருக்கே’ என்று வாழ்த்தினார். தயாரிப்பாளரும் செம ஹேப்பி. கமல் சார் எங்கள் குடும்பத்தில் ஒருவர். நான் படம் பண்ணும் விஷயத்தை அப்பா கமல் சாரிடம் சொன்னதும் ‘நல்லா பண்ணச் சொல்லு’ என்று வாழ்த்தினாராம். விரைவில் கமல் சாருக்கும் படத்தைப் போட்டுக் காட்டி வாழ்த்து வாங்குவேன்'’ என்று தெரிவிக்கும் சஞ்சய் பாரதியின் முகத்தில் நம்பிக்கை தெரிந்தது.

- சுரேஷ்ராஜா