தெலுங்குலே சிக்கல்!தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வந்தவர் நயன்தாரா. இப்போது தமிழில் மட்டுமே அவரது படங்கள் வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தெலுங்கு படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்கள் தெலுங்கிலும் கிடைக்கும் என நயன்தாரா நம்பியிருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தபடி தெலுங்கில் மேலும் அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், நயன்தாராவை தெலுங்கு சினிமா புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறதாம். சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கூட்டாக சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக சொல்கிறார்கள்.

தனது சம்பளமாக ரூ.6 கோடி கேட்கிறார் நயன்தாரா. அவருக்கு தெலுங்கில் திருப்புமுனை கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளரின் படமாக இருந்தாலும் இந்த சம்பளத்தை குறைக்க அவர் தயாராக இல்லை. மேலும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டாரான ஹீரோக்களே பங்கேற்கும்போது, இவர் மட்டும் பங்கேற்க மறுக்கிறார்.

‘சைரா’ படத்தின் புரமோஷனுக்கு பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். இது சிரஞ்சீவிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக பின்னர் தெரிந்தது. இந்த காரணங்களால் நயன்தாராவை தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளார்களாம்.

- ஜி