சின்னத்திரையை குறைத்து மதிப்பிடாதீர்கள்!



அஞ்சு படம் நடிக்கும்  ஹீரோயின் ஆதங்கம்

அறிமுகம் அதிகம் தேவைப்படாதவர் வாணி போஜன். டி.வி.வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். சின்னத்திரையில் இருப்பவர்களுக்கு எப்போதும் வெள்ளித்திரை மீது ஒரு கண் இருக்கும். அந்தவகையில் கோடம்பாக்கத்துக்குள் அதிரடியாக நுழைந்திருக்கும் வாணி போஜனிடம் பேசினோம்.“உங்களுடைய சினிமா பிரவேசம் எப்படி நடந்தது?”

“நான் ஊட்டி பொண்ணு. படிச்சது ஆங்கில இலக்கியம். என்னுடைய தோழி எதேச்சையாக ஏன் மாடலிங் பண்ணக்கூடாது என்று கேட்டார். ஏன் ட்ரை பண்ணக்கூடாது என்று தோணுச்சு. ஏர்லைன்ஸில் வேலையை உதறிவிட்டுத்தான் சின்னத்திரைக்கு வந்தேன். என்னுடைய பெயர் வாணி போஜன் என்று தெரியுமான்னு தெரியவில்லை. ஆனால் ‘தெய்வமகள்’ சத்யா  என்றால் ஊர் உலகத்துக்கே தெரியும். தேங்க்யு... சன் டி.வி.

சின்னத்திரையில் நிறைவான திருப்தி கிடைத்தது. சின்னத்திரை புகழ்தான் என்னை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நம்புகிறேன்.
இப்போது என் கைவசம் ஐந்து படங்கள் உள்ளது. நானெல்லாம் சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. இதுவரை சுமார் 400 விளம்பரப் படங்கள் பண்ணியிருப்பேன். மாடலிங்கும் பண்ணியிருக்கிறேன். ஆனால் டி.வி., சினிமா பக்கம் வருவேன் என்று நினைக்கவில்லை. சின்னவயதில் என்னுடைய கனவெல்லாம் ஏர் ஹோஸ்டஸாக வரவேண்டும் என்பதுதான்.”

“சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?”

“வித்தியாசம்னு எதுவுமில்லை. இரண்டிலும் ஒரே ஸ்டைல் ஆஃப் ஒர்க்தான் இருக்கிறது. சின்னத்திரையில் ஐந்து வருடமாக ஒரே கேரக்டரை பண்ணிக்கொண்டிருப்போம். சினிமாவில் ஒரு கேரக்டர்  முப்பது, நாற்பது நாளில் முடிந்துவிடும். ஒரு படம் முடிந்ததும் அடுத்த கேரக்டருக்கு ஆயத்தமாக வேண்டும்.

அந்தவகையில் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன். தெலுங்கில் ஒரு படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தேன். வித்தியாசம் என்று பார்த்தால் சினிமாவில் கால அளவு என்பது குறைவாக இருக்கும். சினிமா என்று வரும்போது ரிலீஸ் தேதி ஒருவித பயத்தைக் கொடுக்கும். டி.வி.யில் அப்படியொரு பயமிருக்காது.”

“போட்டி எந்தத் துறையில் அதிகம்?”

“கரெக்ட்டாக சொல்லத்தெரியவில்லை. சின்னத்திரையில் இருந்தவரை யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. ‘தெய்வமகள்’ பெரிய ஹிட் என்பதால் போட்டியைப்பற்றி யோசிக்கவில்லை. அதே சமயம் சின்னத்திரையில் போட்டி இருப்பதாக நினைக்கவில்லை. ஏன்னா, அவரவர் வேலையில் அவரவர் பிஸியாக இருக்கிறார்கள். சினிமா என்பது போட்டி போட்டு  ஜெயிப்பதற்கான களம் கிடையாது. இது முழுக்க முழுக்க திறமையைச் சார்ந்தது. கேரக்டருக்குப் பொருத்தமாக இல்லையென்றால் வாய்ப்பு கிடைக்காது.”

“விஜய் தேவரகொண்டாவின் தெலுங்குப் பட வாய்ப்பை எதிர்பார்த்தீர்களா?”

“விஜய தேவரகொண்டா தயாரித்த படத்தில் நடிப்பேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. தமிழில் படம் பண்ண ஆரம்பித்த பிறகு ‘மிக்கு மாத்திரம் செப்தா’ வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர் சமீர் மூலம்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழ் என்பதால் என்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். அவர்தான், ‘நீங்கள் பண்ணா நல்லா இருக்கும்’ என்று கதை சொன்னார்.

எனக்கு நம்பிக்கையில்லை. எத்தனையோ திறமைசாலிகள் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் இருக்கும்போது நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் ஹீரோவும் சென்னையில் இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்தமாதிரி ஒரு செல்ஃபி எடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு அனுப்பி வைத்தார் சமீர். எதிர்பாராதவிதமாக அந்த வாய்ப்பு எனக்கே கிடைத்தது. படமும் நல்லா ஓடியது. அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்பு வந்துள்ளது.”

“தமிழில் என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?”

“5 படங்கள் பண்ணுகிறேன். வைபவ்வுடன் ‘லாக்கப்’, ‘ஓ மை கடவுளே’, ஆதவ் கண்ணதாசனுடன் ஒரு படம், ‘மிஸ்டர் டபிள்யூ’ இந்தப் படங்கள் இல்லாமல் பெயரிடப்படாத ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் நல்ல பெர்ஃபாமர் என்ற பெயர் எனக்கு கிடைக்கும். படப்பிடிப்பு முடிந்தது. கூடிய சீக்கிரத்தில் அறிவிப்பு வரும்.”

“எந்த மாதிரி வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?”

“வைபவ்வுடன் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குப் போகும் கேரக்டர். இந்தப் படத்தில் ரித்திகா சிங்கும் இருக்கிறார். ‘லாக்கப்’ படத்தில் வைபவ்வின் கேர்ள் ஃப்ரெண்ட் கேரக்டர். இந்தப் படங்களைப் பார்க்கும்போது வாணி... ஒரே மாதிரி நடித்திருக்கிறார் என்று தோன்றாது. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு ஷேட் இருக்கும்.

பெயர் அறிவிக்கப்படாத படத்தில் எனக்கு லைஃப் டைம் கேரக்டர் என்று சொல்லலாம். என்னுடைய கேரியரில் அப்படியொரு படம் அமையுமா என்பது டவுட்.  அந்தவகையில் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் ஆர்வத்துடன்தான் ஏற்றுக்கொள்கிறேன்.”

“எப்போதாவது சின்னத்திரையை விட்டுவிட்டு வெள்ளித்திரைக்கு ஏன் வந்தோம் என்று நினைத்ததுண்டா?”

“அப்படி நினைக்கவில்லை. நான் எப்போது வேண்டுமானாலும் சின்னத்திரைக்குப் போகலாம். எனக்கான இடம் அங்கிருக்கிறது. சின்னத்திரையைவிட்டு வரும்போது பெரிய சோதனையை சந்தித்தேன். ‘தெய்வமகள்’ முடிந்த சமயத்தில் பெரிய சீரியல் வாய்ப்பும், வெள்ளித்திரை வாய்ப்பும் வந்தது. அந்த சமயத்தில் சீரியலா, சினிமாவா என்ற குழப்பம் வந்தது.

சினிமா என்றால் ரிஸ்க் எடுக்கிறோம் என்றும் சீரியல் என்றால் லைஃபில் செட்டில் ஆகலாம் என்றும்தான் யோசித்தேன். அப்படி... துணிந்துதான் சினிமாவுக்கு வந்தேன். நல்லவேளை... நான் சினிமாவுக்கு வந்ததும் நாலைந்து படங்களில் கமிட்டாக முடிந்தது.

சின்னத்திரை என் மனதுக்குள் எப்போதும் இருக்கும் விஷயம். நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலும், ரசிகர்கள்… ‘எப்போது ஸ்மால் ஸ்கிரீனுக்கு வருவீங்க, எப்போதாவது திரையில் பார்ப்பதைவிட தினமும் டி.வி.யில் வரும்போது எங்கள் வீட்டுக்கே வருவது போன்று இருக்கிறது’ என்கிறார்கள். சில சமயம் டி.வி.யிலிருந்து வந்ததைக் குறித்து ஃபீல் பண்ணியிருக்கிறேன்.”

“நீங்க யாருக்கு ரசிகை?”

“யார் நல்லா பெர்ஃபாம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு நான் ரசிகை. ‘அசுரன்’ல தனுஷ் சான்ஸே இல்லை. வாட் ஏ பெர்ஃபாமன்ஸ்... தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ஃபேன். நடிகைகளில் ‘மரியான்’ பார்வதி. அவங்க நடிப்பு பிடிக்கும்.”

“நடிப்புக்காக ஹோம் ஒர்க் செய்யும் பழக்கமிருக்கிறதா?”

“செட்லேதான் எனக்கு நடிப்பு வரும். ஒரு இயக்குநருக்கு தெளிவு இருந்தால் ஆர்ட்டிஸ்ட்டுக்கு பிரச்சனையில்லை. இயக்குநர் இதுதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் அதே மாதிரி ஆர்ட்டிஸ்ட்டால் எளிதாக நடிக்க முடியும்.

உங்களால் எந்தளவுக்கு இம்ப்ரவைஸ் பண்ணமுடியும் என்று சுதந்திரம் கொடுத்தால் நம்முடைய ஸ்டைலைப் புகுத்தி நடிக்கலாம். டி.வி. மாதிரி சினிமா கிடையாது. சினிமாவில் கடின வேலை இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை மக்கப், ப்ராம்ப்டிங்  கிடையாது. கேரக்டரை உள்வாங்கி நடிப்பேன்.

கேரக்டருக்காக ரெஃபரன்ஸ் எடுக்கமாட்டேன். அப்படி எடுத்தால் ஒரிஜினாலிட்டி போய்விடும். கிராமத்துப் பெண் என்றால் அந்த கிராமத்தில் இருக்கிறவர்கள்தான் ரெஃபரன்ஸ். அதைவிட பெட்டர் ரெஃபரன்ஸ் கிடைக்காது. கிராமத்து மனிதர்களை கவனித்தால் போதும்.

‘ஓ மை கடவுளே’ படத்தில் இயக்குநர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் க்ளியராக இருந்ததால் என் வேலை எளிதாக இருந்தது.”“சின்னத்திரையிலிருந்து வந்ததால் சினிமாவில் உங்களுக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது?”

“சின்னத்திரை- வெள்ளித்திரை என்ற அந்த டிரெண்ட் மாறியுள்ளது என்று சொல்லலாம். இன்னும் எத்தனை வருஷம் அப்படி பிரித்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. சின்னத்திரை நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ரொம்ப டெடிகேஷனாக இருப்பார்கள்.

ஐந்து வருடம் ஒரே ப்ராஜக்ட்டில் இருக்கிறார்கள். நடுவில் எங்கும் ஜம்ப் ஆவதில்லை. பொறுப்பும் அதிகம். சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு தமிழ் தெரியும், நடிக்கத் தெரியும். அதைவிட வேறு என்ன வேண்டும்.

தயவு செய்து சின்னத்திரை நடிகர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். இப்போது சினிமாவில் பெரிய கேரக்டருக்கு சின்னத்திரையில் ஆள் இருக்கிறார்களா என்று தேடுகிறார்கள். சின்னத்திரை நடிகர்கள் சினிமாவில் நடிப்பது அட்வான்ட்டேஜ் என்று நினைக்கிறேன். இனி அந்த பாகுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா