மகாநதி- மகாநதி சங்கர்டைட்டில்ஸ் டாக்-137

நான் வட சென்னைக்காரன். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அப்பாவுக்கு துறைமுகத்தில் வேலை. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்புக்கு டாட்டா காட்டிவிட்டேன். படிப்பை நிறுத்தியதற்கு பெரிய காரணம் எதுவுமில்லை.
படிப்பு மீது எனக்கு ஆர்வமில்லை. பிற்காலத்தில் ஸ்டண்ட்மேனாக வருவேன் என்று தெரியாமலேயே டீன் ஏஜில் ஸ்டண்ட்மேனுக்கு தேவையான நீச்சல், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கராத்தே உட்பட பல கலைகளைக் கற்றுக்கொண்டேன்.

அப்பாவுடைய வேலை அண்ணனுக்கு கிடைத்தது. பதிமூன்று வயதில் நான் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். இருபது வயதில் சினிமா ஸ்டண்ட்மேன் யூனியனில் சேர்ந்துவிட்டேன்.
கிருஷ்ணா நடித்த தெலுங்குப் படத்தில்தான் ஃபைட்டராக களமிறங்கினேன். இங்கு நான் பண்ணிய முதல் படம் ரஜினி சார் நடித்த ‘ப்ளட்ஸ்டோன்’. அந்தப் படத்தில் ரஜினி சாருக்கு நான்தான் டூப் போட்டேன். முதல் படத்திலேயே ஹாலிவுட் டீமுடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது.

 ஃபைட்டராக தமிழைவிட தெலுங்கு, இந்தியில்தான் அதிகமாக வேலை செய்தேன். காரணம், எனக்கு வேலை கொடுத்த  தாஸ் மாஸ்டர், பெப்ஸி விஜயன் மாஸ்டர் இருவரும் அந்த மொழிகளில் பிஸியாக இருந்தார்கள். தமிழில் ‘கலியுகம்’, ‘ரோஜாவைக் கிள்ளாதே’ உட்பட ஏராளமான படங்களில் ஃபைட்டராக நடித்துள்ளேன். அந்த சமயத்தில் ஒரு விபத்து. சிலகாலம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

ஓய்வுக்குப் பிறகு ஒரு நாள் ‘விக்ரம்’ தர்மா மாஸ்டர் அழைத்தார். ஃபைட்டராக சிறு ஓடையில் நீந்திக் கொண்டிருந்த என்னை ‘மகாநதி’யில் இணைத்த பெருமை ‘விக்ரம்’ தர்மா மாஸ்டருக்கு உண்டு. அவர் படங்களிலும் நான் ஃபைட்டராக நடித்துள்ளேன். அப்போது ‘கமல் சாரின் ‘மகாநதி’ படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்க விருப்பமா’ என்று கேட்டார்.

என்னைப் போன்ற ஸ்டண்ட்மேன்களின் முகங்கள் படங்களில் தெரியாது. குளோஸ் அப் காட்சிகளும் இருக்காது. முகம் தெரியும்படி எப்போதாவதுதான் வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் முகம் தெரியும்படி நடிக்கணும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அதற்குமுன் கமல் சாருடன் ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘சிங்காரவேலன்’ படங்களில்  பண்ணியிருக்கிறேன். ஆனால் அதில் என் முகம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.

அந்த சமயத்தில்தான் தர்மா மாஸ்டர் ‘மகாநதி’ வாய்ப்பு பற்றிச் சொன்னார். கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். முதல் இரண்டு மீட்டிங்கில் கமல் சாரை சந்திக்கமுடியவில்லை. மூன்றாவது சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. அப்போது சென்னை கிண்டியில் ‘கேம்பா கோலா’ வளாகத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

தர்மா மாஸ்டருக்கு எடிட்டிங் வேலை இருந்ததால் நான் மட்டும் போனேன். நான் சென்ற தினத்தன்று கமல் சாருக்கு பிறந்தநாள். என்னைப் பார்த்ததும் ‘ஹேர் ஸ்டைல் என்னைப் போன்று ஷார்ட்டாக வெட்ட வேண்டும்’ என்றார். மறுநாள் அவர் சொன்ன மாதிரியே முடிவெட்டிக் கொண்டு போனேன். என்னுடைய தோற்றத்தைப் பார்த்ததும் ‘யு ஆர் செலக்ட்டட்’ என்று பார்வையிலேயே ஓக்கே பண்ணிவிட்டார் கமல் சார்.

‘மகாநதி’ படம் என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழே தெரியாமல் இருந்த நான் தமிழ் கற்றுக்கொண்டேன். அதற்குமுன் டயலாக் பேப்பரை வாங்காமல் மக்கப் முறையில்தான் டயலாக் பேசுவேன். அந்தவகையில் என்னுடைய வாழ்க்கையில் மகாநதியாக இருந்து என்னை வளப்படுத்தியது தர்மா மாஸ்டர். அவர் என்னை மட்டுமல்ல, ‘தளபதி’ தினேஷ், ‘இந்தியன்’ பாஸ்கர், ராஜசேகர்  என்று நிறைய பேரின் செழிப்பான வாழ்க்கைக்கு மகாநதியாக இருந்துள்ளார்.

‘மகாநதி’ படத்துக்குப் பிறகு சங்கர் என்ற பெயர் மறந்து கேரக்டர் பெயரான துலுக்கானம் என்ற பெயர்தான் தெரிந்தது. சுமார் ஐந்து வருடத்துக்கு துலுக்காணம் இருக்கிறாரா என்று கேட்டுதான் பட வாய்ப்பு வரும். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் பண்ணிட்டேன்.

வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். ரஜினி சாருடன் பண்ணிய ‘பாட்ஷா’ படமும் மறக்க முடியாது. ஒருநாள் நான், ‘தளபதி’ தினேஷ், ரஜினி சார் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார், ‘வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டீகளா? ’என்று கேட்டார். அப்போது ‘நாங்கள் ஓரளவுக்கு செட்டிலாகிவிட்டோம்’ என்று சொன்னோம்.

அப்போது ரஜினி சார், ‘வாழ்க்கையில் செட்டிலாவது கடினம். சைக்கிள், பைக், கார், வீடு என்று ஆசையின் எல்லைகள் பெருகிக்கொண்டே போகும். ஒரு மனிதனுக்கு சங்கு சத்தம் எழுப்பப்படும்போதுதான் உண்மையில் செட்டிலாகிறான்’ என்றார்.

என்னுடைய வாழ்க்கையில் மது இல்லாத நாளே இருந்ததில்லை. அந்தக் காலகட்டத்தில் ஒண்ணு வேலை மேல இருப்பேன்... இல்லைன்னா... போதை மேல இருப்பேன். எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன் என்பது போல் இப்போது என்னுடைய கவனத்தை சினிமா தாண்டி ஆன்மிகத்திலும் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.

நண்பர் ஒருவர் மூலம் சன்மார்க்க நெறி மீது ஆர்வம் பிறந்தது. மது, புலால் மறுத்து வாழ ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இரண்டு வருடத்துக்குப் பிறகுதான் முழுமையாக சரண் அடைந்தேன். மது என்னை விட்டு முற்றிலும் விலகியது. புலால் உணவையும் தவிர்த்துவிட்டேன்.

அதன்பிறகு சிறந்த நடிகருக்கான விருது, ஏராளமான பட வாய்ப்புகள் பெற்றேன். எனக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐடி துறையில் வேலை செய்கிறார். இரண்டாவது மகள் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார். மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

சன்மார்க்க நெறி பக்கம் வராமல் இருந்தால் எனக்கு அதன் மீது ஆசை இருக்கிறது... இதன் மீது ஆசை இருக்கிறது... என்று சொல்லியிருப்பேன்.

இப்போது அப்படி எதுவும் ஆசை இல்லை. சன்மார்க்கத்தில் இருக்கிறவர்கள் ஆண்டிகோலத்திலும் சித்தர் போலவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இல்லறம் போற்றும் நல்லறத்துடன் வாழ்தல் வேண்டும். அதன்படி குடும்பத்தை வழி நடத்துமளவுக்கு வருமானம் இருக்கிறது.

கடந்த நான்கைந்து வருடங்களாக பதினைந்து மூலிகைகள் அடங்கிய ‘கஞ்சி தானம்’ பண்ணுகிறேன்.  வட சென்னையில் உள்ள பிரபல பெண்கள் மருத்துவமனை வாசலில் பிரதி வியாழனன்றும் நானும் என் மனைவியும் மூன்று டிரம்மில் உணவு எடுத்துக் கொண்டு போய் எளியோருக்கு கொடுக்கிறோம். என்னைப் போன்று தமிழகம் முழுவதும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அன்னதானம் கொடுத்து வருகிறார்கள்.

எனக்குத் தெரியாத அராத்து இல்லை. எனக்கு 55 வயது. சினிமாவில் 35 வருடங்கள் கடந்துவிட்டது. என் முகமும், குரலும் ஒரு ரவுடியை மனதில் நிறுத்தும். ஆனால் இதுவரை நான்  எங்கேயும் கெட்ட பெயர் எடுத்ததில்லை. யாரையும் திட்டியதில்லை. எந்த வம்புக்கும் போனதில்லை. ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும் என்பதால் ஸ்டண்ட் வேண்டாம் என்று முடிவு பண்ணி நடிப்பை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

குரல்தான் எனக்கு ப்ளஸ். அதுதான் எனக்கு சோறு போடுகிறது. அதுபோல் எல்லோருக்கும் ஒரு ப்ளஸ் இருக்கும். இந்த உலகத்தில் திறமை இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோருக்குள்ளும் திறமை உண்டு. அதில் கவனம் செலுத்தினால் வெற்றி காணலாம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)