அரசியல்தான் பேசுறோம்! கர்ஜிக்கிறார் சங்கத்தமிழன்
தீபாவளிக்கே ‘சங்கத்தமிழன்’ களமிறங்குவார் என்று எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரவே இந்த தாமதம் என்கிறார்கள் படக்குழுவினர். சிம்புவின் ‘வாலு’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர்தான் ‘சங்கத்தமிழன்’ படத்துக்காக விஜய்சேதுபதியை இயக்கியிருக்கிறார். படரிலீஸ் பரபரப்பில் இருந்தவரை சந்தித்தோம். “நம்ம ‘சங்கத்தமிழன்’ எப்படி வந்திருக்காரு?”
“சூப்பரா வந்திருக்காரு. ஒரு கமர்ஷியல் படத்துல சமூக அக்கறையோட ஒரு கன்டன்டை சொல்லும்போது சில விஷயங்களை கவனத்துல எடுத்துப்பேன். அதை அழகாகவும் சொல்லணும். ஜனங்களுக்கும் புரியணும்.. அதே டைம்ல யாருக்கும் தப்பாவும் தோணிடக் கூடாது என்பதில் நான் ரொம்ப தெளிவா இருப்பேன். இந்தக் கதையை விஜய்சேதுபதி சார்கிட்ட சொன்னதும் ரொம்பவே சந்தோஷமா சம்மதிச்சார்.
சார் இதுல என்னை முழுசா நம்பினார். நானும் அவரை முழுசா நம்பினேன். எங்க ரெண்டு பேரோட நம்பிக்கைதான் இந்தப் படம். இதைத்தாண்டி இதோட தயாரிப்பாளார்களும் எங்களை நம்பினாங்க. ஏன்னா, இது கொஞ்சம் பெரிய பட்ஜெட் படமாகிடுச்சு. தயாரிப்பாளர் பாரதி மேடம் அவங்களால இப்படி ஒரு படம் சாத்தியமாகியிருக்கு.’’
“இப்போ படங்களில் ஓரிரு டயலாக்கில் அரசியல் பேசினாலே பிரச்சினை ஆகுது. அப்படியிருக்க இந்தப் படம் முழுக்க அரசியல் பேசியிருக்கீங்களாமே?”
“உண்மைதான். என் ரெண்டாவது படம் ‘ஸ்கெட்ச்’ கமர்ஷியல்னாலும் அதுல நல்ல மெசேஜ் இருக்கும். சின்னப் பசங்க படிக்கணும். அவங்க வேலைக்கு போயிடக்கூடாதுனு ஒரு அழுத்தமான மெசேஜ் வச்சிருந்தேன். அதைப் போல இதுலேயும் மக்களுக்கான ஒரு பிரச்சினையை தொட்டிருக்கேன். சமூகத்துல நடக்கற அநீதிகளைப் பார்த்ததும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோபம் இருக்கும்.
ஆனா அதை தங்களுக்குள்ளாகவே புதைச்சிப்பாங்க. சொசைட்டியில ஒரு பிரச்சினை நடக்கும் போது யாராவது ஒருத்தர் குரல் கொடுக்கமாட்டாங்களானு காத்திருப்போம். அப்படி சூழல்ல ஒருத்தர் குரல் கொடுக்க துணியும் போதே, அங்கே அரசியல் பேசவேண்டியதாகிடுது.
இன்றைய சூழல்ல இப்படி ஒரு படத்துல தைரியமா முன்வந்து நடிக்க சம்மதிச்சதுக்காகவே விஜய்சேதுபதி சாருக்கு மொதல்ல நன்றி சொல்லிக்கறேன். இதுல டயலாக்கும் கூர்மையா இருக்கும். ஒரு புரட்சிகரமான பாட்டும் இருக்கு. தன்னம்பிக்கையும், ஒற்றுமையையும் வலுயுறுத்தும் அந்தப் பாடலை கார்க்கி எழுதியிருக்கார். சங்கர்மகாதேவன் பாடியிருக்கார்.”
“படம் ரொம்ப சூடா இருக்குமோ?”
“அப்படியெல்லாம் இல்லீங்க. என்னோட குடும்பம் கூட்டுக்குடும்பம். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பானு உறவுகள் சூழ்ந்து வீடே கலகலனு எப்பவும் கலர்ஃபுல்லா களைகட்டும். அப்படி ஒரு கூட்டுக்குடும்பப் பின்னணியில் ஃபேமிலி எண்டர்டெயினரா கொண்டுபோயிருக்கேன். படத்துல ரெண்டு ஹீரோயின்கள். ராஷிகண்ணா, நிவேதாபெத்துராஜ் நடிச்சிருக்காங்க.
‘வாலு’வில் சிம்பு சார், சந்தானம் சார் கெமிஸ்ட்ரி மாதிரி இதுல சேதுபதிசார்- சூரி காம்போ பேசப்படும். இந்தி வில்லன் ரவிகிஷன், அஸ்ரஃப் ராணா, நாசர் சார், ஸ்ரீமன், துளசி, ‘கடைக்குட்டிசிங்கம்’ தீபா, இந்துனு பெரிய பட்டாளமே இருக்கு. மொத்த கூட்டத்தையும் ஒரே ஃபிரேம்ல பார்க்கும்போது திருவிழா மாதிரி ஜொலிக்கும். வேல்ராஜ் சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.
‘குலேபகாவலி’ விவேக் மெர்வின் இசையமைக்கறாங்க. முதல்நாள் கம்போஸிங் போதே, அவங்களோட செட் ஆகிட்டேன். ஒரு பாடலை ராத்திரி பதினொரு மணிக்கு துவங்கி அதிகாலை அஞ்சு மணிக்குள்ள எழுத வேண்டிய சூழல். விவேகா அதை அழகா செய்திருக்கார். அந்தப் பாடலை விவேக்கும் மெர்வினும் சேர்ந்து அன்னிக்கு காலையில எழுமணிக்குள்ளாகவே பாடி ஒலிப்பதிவும் பண்ணி அசத்திட்டாங்க.
ஓபனிங் பாடலுக்கு ராஜுசுந்தரம் சார் நடனம் அமைச்சிருக்கார். மொத்த படத்தையும் அழகா வடிவமைச்சிருக்கார் எடிட்டர் பிரவீன்.. அனல் அரசுவின் ஸ்டண்ட்ஸும், பிரபாகரின் ஆர்ட் டைரக்ஷனும் பேசப்படும். இப்படி நல்ல டீம் அமைஞ்சிருக்கு.”
“விஜய்சேதுபதி இப்போ ரொம்ப பிஸியான ஆர்ட்டிஸ்ட். அவரை எப்படி புடிச்சீங்க?”
“விஜய்சேதுபதி சாரை ரொம்ப வருஷமாவே தெரியும். ‘நாம ரெண்டு பேர் காம்பினேஷன்லேயும் ஒரு படம் பண்றோம்'னு என்னை பாக்குற டைம்ல எல்லாம் சார் சொல்லிட்டே இருப்பார். ‘சங்கத்தமிழன்’லதான் அது கைகூடி யிருக்கு. இந்தப் படம் விஜயா புரொடக்ஷன்லே கிடைத்த காரணமே, நண்பர் மன் சார்தான்.
மத்தவங்களுக்கு அவர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாலும் எனக்கு அவர் அண்ணனாகிட்டார். விஜயாவுல புரொடக்ஷன் ஹெட்ஸ் ரவிச்சந்திரன் சார். குமரன் சார்கிட்ட என்னை அவர் அறிமுகப்படுத்தினார். வெங்கட்ராமரெட்டி சார், பாரதி ரெட்டி மேடம்கிட்ட இந்தக் கதையை சொன்னதும், அவங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருச்சி. ஷூட்டிங் கிளம்பிட்டோம்.
இதற்கிடையே உடல்நலமில்லாமல் இருந்த வெங்கட்ராமரெட்டி சார் திடீர்னு இறந்துட்டார். மேற்கொண்டு இந்த புராஜெக்ட் நடக்குமான்னு கலங்கிட்டோம். அப்ப எங்களை கூப்பிட்டு ஆறுதல் சொன்னவர் பாரதிரெட்டி மேடம்தான். ‘வெங்கட் சாரோட கனவே, நல்லபடங்கள் நிறைய தயாரிக்கிறதுதான்.
நீங்க ஷூட்டிங்கை தொடரலாம்’னு சொல்லி, எங்களுக்கு உறுதுணையா நின்னாங்க. ஸ்பாட் போனாலே நான் ஷாட்கள் நிறைய ஷூட் பண்ணுவேன். என்கிட்ட உதவி இயக்குநரா என் தம்பி விஜய் பிரதீப்பும் ஒர்க் பண்றார். என் உதவி இயக்குநர் டீமை எப்பவுமே நான் ‘நாளைய இயக்குநர்கள்’னுதான் சொல்லுவேன். டைட்டில் கார்டுல கூட அப்படித்தான் இடம்பெற வைக்கறேன்.”
“விஜய் சேதுபதியோடு பண்ணின ஒர்க் திருப்தியா?”
“நிச்சயமா. இதுலே அவர் ஹவுசிங் போர்டுலே வசிக்கற கேரக்டர். நம்ம பக்கத்து வீட்டு பையனை நினைவுபடுத்தற மாதிரி நடிச்சிருக்காரு. பொதுவாகவே அவர் எப்பவும் தன்னை ஒரு ஹீரோனு என்னிக்குமே காட்டினதில்ல. எப்பவுமே யதார்த்தமான மனிதர் அவர்.
எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துப்பார். சீன்ல ஒரு சின்ன சேஞ்சஸை அவர் சொல்லவந்தாலும் கூட, ‘ப்ரோ இப்படிப் பண்ணிக்கலாமா? உங்களுக்கு இது ஓக்கேவா? அப்படி சொல்லலாமா?’னு ஃப்ரெண்ட்லியா கேட்பார்.
அந்த கரெக்ஷனை ஓக்கே சொல்ல கொஞ்சம் நான் தயங்கி நின்னாக்கூட, ‘வேணாம்...உங்க முகம் சரியில்ல..’னு என் முகத்தோட ரியாக் ஷன் பார்த்து புன்னகைப்பார்.
என்னோட கதை கெட்டுடக்கூடாதுனு நினைப்பார். எந்த ஒரு சூழலிலும் இயக்குநரைத் தாண்டி பண்ணணும்னு நினைக்க மாட்டார். முழுப்படமும் முடிச்சு விஜய்சேதுபதி சாரோட டப்பிங் முடிச்சதும், ‘மறுபடியும் அவரோட எப்போ ஒர்க் பண்ணப்போறோம்’னு ஃபீல் ஆகிடுச்சு. அதே ஃபீல்ல அவரும் இருந்தார்.” “விக்ரம், சிம்பு, சந்தானம் இவங்களோட டச்ல இருக்கீங்களா?”
“அதெப்படி நம்மளை கைதூக்கி விட்டவங்களை மறந்துட முடியும்? எல்லார்கிட்டேயும் வாட்ஸ்அப்ல பேசிட்டுத்தான் இருக்கேன். சிம்பு சார்கிட்ட என்னைப் பத்தி யார் பேசினாலும் ரொம்பவும் பாசிட்டிவ்வா சொல்வார். என்னுடைய நலனை விரும்புறவர். அதேபோல சந்தானம் சார் இல்லேனா ‘வாலு’ தொடங்கியிருக்கவே முடியாது.
அதோட ஒவ்வொரு தேக்கநிலையிலும் எனக்கு தைரியமும் நம்பிக்கையையும் கொடுத்தவர். இப்ப அவர் ஹீரோவானாலும் என்னிக்குமே அவர் எனக்கு ஹீரோவாகத்தான் தெரியறார். ‘ஸ்கெட்ச்’ படம் ரிலீஸாகி ஐம்பதாவது நாள் ஓடிட்டிருக்கு.
திடீர்னு விக்ரம் சார்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘எங்க இருக்கீங்க?’னு கேட்டார். நான் வீட்லதான் இருந்தேன். அவர்கிட்ட வீட்ல இருந்ததை சொன்னேன். ‘நம்ப மாட்டேன். உடனே லொகேஷன் ஷேர் பண்ணுங்க’ன்னார். வாட்ஸ்அப்பில் நான் இருக்கும் இடத்தை ஷேர் பண்ணினேன். அடுத்த அரைமணிநேரத்துல விக்ரம் சார், அவரோட மனைவி சகிதமா எங்க வீட்டுக்கு வந்து எங்களோடு பேசி சிரிச்சு, சில மணிநேரம் செலவிட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இனிமையான மனிதர் அவர்.”
- மை.பாரதிராஜா
|