கோடம்பாக்கம் வந்திருக்கும் புது கவிஞர்!



கோடம்பாக்கத்தின் புது வரவான பாடலாசிரியர் பா.இனியவன், தனிப்பாடலாக ‘என்னோட ஆளு’ மூலம் ஹிட் ஆகியிருக்கிறார்.“விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரையடுத்த மணம்பூண்டி என் சொந்த ஊர். அம்மா ராணி. அப்பா பாலகிருஷ்ணன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

எப்போதும் எங்கள் வீட்டில் ஏதோவொரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். பாடலின் அர்த்தம் பெரிய அளவில் புரியாவிட்டாலும் அவற்றைக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டுமே வளர்ந்தேன்.  வாழ்வியல் கவிஞன் வாலி மற்றும் மக்கள் கவிஞன் நா.முத்துக்குமார் ஆகியோர் எனக்குப் பிடித்த பாடலாசிரியர்கள்.

‘காதல் திருமணம்’ படத்தின் இயக்குநர் பிரதீப் சதாசிவம்தான் என்னை முதலில் பாட்டெழுத அழைத்தார். பின்பு ஏதோ சில காரணங்களால் படம் சற்று தாமதமாக... அதற்குள்  நிறைய வாய்ப்புகள். இப்போது ‘வேல் கம்பு’, ‘பசுபதிபாளையம்’, ‘மடையன்’, ‘கோபம் கொள்ளும் நேரம்’, ‘கணேசாபுரம்’  மற்றும் பெயர் சூட்டப் பெறாத மேலும் சில படங்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன்.

போற்றுதலுக்குரிய ஐயா அப்துல்கலாம் மறைந்தபோது அவரின் புகழுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  ஒரு பாடல் எழுதினேன். அதற்குப் பிறகு நம் இந்திய வீரர்கள் மீதான கொடூரமான புல்வாமா தாக்குதலின்போது வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி ஒரு அஞ்சலி பாடல் செய்தோம்.

 பின்னர் ஈழச் சொந்தங்களுக்காக இந்தாண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒரு நல்ல பாடல் செய்தேன். தவிர இந்த ஆண்டில் ‘என்னோட ஆளு’ என்னும் வெற்றிப்பாடலும் எழுதியது மகிழ்ச்சிக்குரியது. மேலும், சில காதல் பாடல்களும் விளம்பரப் பாடல்களும் எழுதியுள்ளேன்.

சமீபத்திய அங்கீகாரமாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த பின்வரும் வரிகள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.‘பா.இனியவன், நீங்கள் நல்ல திறமைசாலி. அழகாய் எழுதுகிறீர்கள். தொடந்து எழுதுங்கள். முயற்சி செய்துகொண்டே இருங்கள்.

பெரிய பாடலாசிரி யராய் வருவீர்கள் என்பது உறுதி’ன்னு அவர் பாராட்டியிருக்கிறார். மேலும் உடன் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் வெளிப்படையான பாராட்டுகள்,  நம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது.''

- ராஜா