கைதி என்னை காப்பாத்திட்டான்!ஜார்ஜ் மகிழ்ச்சிசமீபத்தில் வெளிவந்த ‘கைதி’ படத்தில் கார்த்தியை அடுத்து அதிகமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதில் போலீஸாக நடித்த ஜார்ஜ். நாலா பக்கமும் வில்லன்கள் அச்சுறுத்தினாலும் அச்சப்படாமல் சட்டையை அவிழ்த்துக் காண்பித்து வீரம் கொப்பளிக்க மார்தட்டி பின்னால் வரப்போகும் கார்த்திக்கு தளம் அமைத்துக் கொடுத்திருப்பார்.

காமெடி கதாபாத்திரங்களுக்காக பேசப்பட்ட ஜார்ஜ் ‘கைதி’க்குப் பிறகு குணச்சித்திர நடிப்புக்காகவும் பேசப்படுகிறார். அந்த வகையில் காமெடி, குணச்சித்திரம் இரண்டையும்  ஒருங்கே செய்யும் வெகுசில நடிகர்களில் ஜார்ஜ் இணைந்திருப்பது கோலிவுட்டுக்கு இனிப்பான செய்தி. ‘பிகில்’ படத்திலும் சர்ச் ஃபாதராக கலக்கியிருந்தார். இந்த தீபாவளியின் டபுள் டக்கர் நடிகராக மாறிய ஜார்ஜை சந்தித்தோம்.

“உங்களுக்கு ‘கைதி’ முக்கியமான படம். வரவேற்பு எப்படியிருக்கிறது?”

“நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாடுறாங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அதில் நான் ஏற்று நடிச்ச நெப்போலியன் கேரக்டர் பற்றி இண்டஸ்ட்ரி, சோஷியல் மீடியா என்று எல்லாத்தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்துள்ளது. சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கன்னு சொன்னாங்க.”

“படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ மாதிரி மாஸ் காட்டியிருந்தீர்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம்?”

“இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும்போதே ‘இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். பெரிய பேர் வரும் பாருங்க’ன்னு சொன்னார். அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், எல்லாப்படத்திலும் இப்படித்தான் சொல்லுவாங்க, எல்லாப்படம் போலத்தான் இந்தப்படமும் இருக்கும் என்ற மனநிலையில்தான் வேலை பார்த்தேன்.

ஆனால் படம் வெளியாகி பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. டீம்ல இருக்கிற எல்லாரும் கடுமையான உழைப்பைக் கொடுத்தார்கள். கார்த்தி சார், நரேன் சார் என்று எல்லோரும் அவங்களுடைய தி பெஸ்ட்டை கொடுத்தார்கள். ஒளிப்பதிவாளர் சத்யனோட ஒர்க் பிரமாதம்.  ஆங்கிலப் படத்துக்கு நிகரான ஒளிப்பதிவு பண்ணியிருந்தார். இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமாக இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.”
“காமெடியிலிருந்து சீரியஸ் கேரக்டருக்கு மாறியது எப்படியிருந்தது?”

“இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர்.சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன். எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. ‘தடம்’ படத்தில்தான் முதல் முறையா இயக்குநர் மகிழ்திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனால் ‘கைதி’யில் ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனாதான் பார்த்திருக்காங்க. இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க! சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு  யோசிச்சேன். ஆனால் லோகேஷ் சார்தான் தைரியம் தந்து ‘பண்ணுங்க சார், மக்கள் ஏத்துப்பாங்க’னு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தாலதான் பண்ணினேன். காமெடில இருந்து  நம்மள இப்படிப்பட்ட  பாத்திரத்தில மக்கள் ஏத்துக்கிட்டதே பெரிய சந்தோஷம்தான்.”

“ஹீரோ கார்த்தி என்ன சொன்னார்?”

“கார்த்தி சாருக்கும்  எனக்கும் படத்தில் கடைசிலதான் காம்பினேஷன் இருந்தது. க்ளைமாக்ஸ் போர்ஷன் மட்டும்தான். ஆனால் முழுப் படத்திலும் சேர்ந்து நடித்தால் என்ன பேர் கிடைக்குமோ அது கிடைத்தது. கார்த்தி சார் நடிப்பில பிரமாதப்படுத்திடுவார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனால் அவரே லாவகமாக ஓட்டியது அவர் தொழில் மீது வைத்திருக்கும் இன்வால்வ்மென்ட்டை வெளிப்படுத்தும். கார்த்தி சார் தன்னோட வேலையில சரியா இருப்பார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ரீரிக்கார்டிங்ல பின்னிட்டார். ஒரு பாட்டில எறிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா கொடுத்தார். மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க. படம் பார்த்து கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டினார். அவருக்கு பெரிய மனசு.”

“விஜய்யோட ‘பிகில்’ அனுபவம் எப்படியிருந்தது? ”

“விஜய் அருமையான நடிகர். அவரைத் திட்டுவது போல் எனக்கு கேரக்டர் கொடுத்ததும் கொஞ்சம் பதறிவிட்டேன். எப்படி நடிக்கப் போகிறோம் என்று பயமாகவும் இருந்தது. அவரிடம் முன்னமே கேட்டேன். ‘சார் தப்பா எடுத்துக்காதீங்க’ என்றேன். அவர் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. இது காட்சிதான். நீங்கள் நன்றாக செய்யுங்கள்’ என்றார். எனக்கு கூச்சம் போக, காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனேதான் இருப்பார். எங்களுடன்தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. ‘பிகில்’ படத்தில் அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.”

“அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தீர்களே... அவர் எப்படி?”

“அவரும் பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்தபோது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்து தந்தார். பழகுவதற்கு இனிமையானவர்.”

“நீங்கள் கூத்துப்பட்டறை மூலமா சினிமாவுக்கு வந்தவர் என்கிறார்களே?”

“தொண்ணூறுகளிலேயே கூத்துப்பட்டறைல சேர்ந்துட்டேன். நான், பசுபதி, ஜெயக்குமார், கலைராணி, இப்படி நிறைய பேர். பசுபதி, கலைராணி சீக்கிரமே சினிமாவுக்குள் வந்துட்டாங்க. நான் பத்து வருஷமா அங்கதான் நாடகங்கள்லே நடிச்சிட்டு இருந்தேன். நாசர் சார்தான் அவரோட ‘மாயன்’ படத்தில அறிமுகப்படுத்தினார். அவர் மூலம்தான் சினிமாவுக்கு வந்தேன். பசுபதியும் அவர் மூலமாதான் கமல் சாருக்கு அறிமுகமாகி வில்லனா நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு இப்போதுதான் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.”

“பிரகாஷ்ராஜ் நடித்த ‘கஞ்சீவரம்’ உங்களுக்கு ஒரு அடையாளமாக அமைந்தது இல்லையா?”

“அந்தப்படத்தில் என்னை பலரும் அடையாளம் கண்டு பேசினார்கள். அந்தப்படத்தில் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக ஏ.எல். விஜய் சார் வேலை பார்த்தார். அவர்தான் என்னை அந்தக்   கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் அவர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு தருவார். ‘மதராஸப்பட்டினம்’, ‘சைவம்’  என்று எனக்கு எல்லாமே நல்ல ரோல்கள் கிடைத்தது.

விஜய் இயக்கத்தில் நடித்த ‘பொய் சொல்லப் போறோம்’ எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி. நாசர் சாரும் நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. நாசர் சார் முன்னமே எனக்கு பழக்கமென்பதால் அந்தக்காட்சியில் நன்றாக நடிக்க முடிந்தது. அவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். கூத்துப்பட்டறை நடிகர்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.”

“சுந்தர்.சி படங்களிலும் உங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறதே?”

“அவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். இப்படி பண்ணுடா என உரிமையோடு சொல்வார். ‘கலகலப்பு’, ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்களிலும் ரசிக்கும்படியான கேரக்டர். ‘கலகலப்பு 2’ ல் அந்தப் படகு காட்சியில் நானேதான் படகு ஓட்டினேன். நாடகங்களில் நடித்தபோது பலவற்றையும் கற்றுக்கொண்டேன். பொதுவாக நான் செய்யும் பாத்திரங்களில் உண்மையாக இருப்பேன். நாமே செய்ய வேண்டும் என நினைப்பேன். அந்தக்காட்சியில் ராதாரவி சாரும் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மக்களும் அந்தக்காட்சியை பெரிதாக ரசித்தார்கள்.”

“தமிழ் சினிமாவில் எல்லோருடனும் நடித்திருக்கிறீர்கள். இவர்களோடு நடிக்கணும் என்ற விஷ் லிஸ்ட் எதாவது இருக்கிறதா?”

“அப்படி எதுவும் இல்லை. இதுவரைக்கும் எல்லாப்படத்திலும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்தான் செய்திருக்கிறேன். பெரிய கதாபாத்திரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறைய செய்ய ஆசை.”

“உங்க லேட்டஸ்ட் ரிலீஸான ‘கைதி’ பார்த்துவிட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள்?”

“படம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார்... ‘அண்ணா, வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள். படம் வந்தபிறகு கூட்டிப்போங்கள்’ என்றார். தீபாவளிக்கு படத்திற்கு குடும்பத்தை கூட்டிப்போனேன். என் பையனும், மகளும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘அப்பா, என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள். சொல்லவே இல்லையே’ என்றார்கள்.

அவர்களின் நண்பர்கள் எல்லாம், ‘உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருக்கிறார்’ என்று பாராட்டியிருக்கிறார்கள். ஒரு நடிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இதுதான்.”

“தற்போது நடிக்கும் படங்கள்?”

“சமுத்திரக்கனியின் ‘அடுத்த சாட்டை’ படத்தில் ஒரு ரோல் பண்ணியிருக்கேன். தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணியிருக்கோம். ‘பிழை’ படத்தில் ஒரு ரோல் பண்ணியிருக்கேன். இப்போது பெரிய வாய்ப்பாக ஷங்கர் சாரோட ‘இந்தியன் 2’ ல ஒரு கதாபாத்திரம் பண்றேன். ‘கைதி’ மீண்டும் எனக்கு ஒரு தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இனி எல்லாம் நல்லா நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரா