விஜய்யை சைட் அடித்தேனா? வர்ஷா வெட்கம்‘பிகில்’ படத்தில் கடைசி கோல் அடிக்கும் ஃபுட்பால் ப்ளேயராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. கன்னடத்துப் பைங்கிளியான இவருக்கு அதிகம் விளம்பரம் தேவையில்லை.
ஏற்கனவே ‘யானும் தீயவன்’, ‘96’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தியவர். நான்கு ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் ‘96’, ‘பிகில்’ படங்களுக்குப் பிறகுதான் ரசிகர்களிடம் ரீச் ஆகியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“எப்படி விஜய்யின் ‘பிகில்’ வாய்ப்பு அமைந்தது?”

“விஜய்சேதுபதியின் ஸ்டூடண்டாக நான் நடித்த ‘96’ படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே ‘பிகில்’ வாய்ப்பு வந்தது. ஒரு நாள் அட்லி சார் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அட்லி சாருடன் நடந்த மீட்டிங்கில் கதையைப் பற்றியோ, என்னுடைய கேரக்டரைப் பற்றியோ எதுவும் பேசவில்லை. ‘இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இருக்கும். உங்களைப் பார்த்தால் பழம் மாதிரி தெரிகிறீர்கள்.

உங்களால் முடியுமா என்று யோசித்துச் சொல்லுங்க’ என்றார். வீட்டுக்கு வரும் வழியிலேயே என்ன மாதிரி ஆக்‌ஷன் படமாக இருக்கும்,  ‘மிஷன் இம்பாசிபிள்’ மாதிரி இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன். விஜய் சார், அட்லி சார் டைரக்‌ஷன் என்றதும் மேற்கொண்டு யோசிக்காமல் அக்ரிமென்ட்டில் சைன் பண்ணினேன்.  ஆரம்பத்தில் ‘பிகில்’ ஃபுட்பால் படம் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. அடுத்தடுத்த சந்திப்பில்தான் ‘பிகில்’ ஃபுட்பால் படம் என்று தெரிந்தது.”

“நீங்க அடிப்படையில் ஃபுட்பால் பிளேயரா?”

“படம் பார்த்த நிறையப் பேர் உங்களுக்கு ஃபுட்பால் தெரியுமா என்று கேட்கிறார்கள். ஸ்கூல் நாட்களில் கூடைப்பந்துதான் என்னுடைய ஃபேவரைட் கேம். ஆனால் எல்லோரும் என்னுடைய உயரத்தை மனதில் வைத்து பேசியதால் கூடைப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன். அந்தவகையில் ஃபுட்பால் பற்றி ஒரு ஐடியாவும் இல்லை. ஹாக்கியாவது கொஞ்சம் தெரியும். காரணம், எங்கள் ஊரான கூர்க்கில் ஹாக்கி விளையாட்டு பிரபலம்.”

“ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சீங்களா?”

“இல்லையா பின்னே? முதல் நாள் படப்பிடிப்பிலேயே இது கேரவனில் உட்கார்ந்து ஜூஸ் சாப்பிடும் படம் இல்லை என்று தெரிந்தது. இயக்குநர் அட்லி சார் எங்கள் டீம் மேட்ஸ் அனைவருக்கும் ஃபுட்பால் பயிற்சிக்கான கேம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.  காலையில் ஃபுட்பால் பயிற்சியும் மாலையில் ஃபிட்னஸ் பயிற்சியும்  இருக்கும்.

ஃபுட்பாலைப் பொறுத்தவரை அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது ஸ்கின் கலர் டோட்டலாக மாறியது. ஆரம்பத்தில் நிறம் மாற்றம் கவலை அளித்தாலும் பெரிய படத்தில் இருக்கிறோம் என்று நினைத்தபோது பெரிதாகத் தெரியவில்லை. பிறகு பெஸ்ட் கொடுக்கணும் என்று ஆர்வத்துடன் நடித்தேன்.”

“பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகவும் ‘பிகில்’ பேசியிருக்கு. இல்லையா?”

“படத்தில் எனக்கு ஃபுட்பால் ப்ளேயர் மட்டுமல்லாமல் குடும்பத் தலைவி  என்ற இன்னொரு டைமென்ஷனும் இருந்தது. அந்தக் காட்சியும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்கக் காரணமே என்னுடைய கணவராக நடித்தவர். அவர் பெண்களை மட்டம் தட்டிப் பேசியது எனக்குள் ஒருவித ஃபயரை உண்டாக்கியது.

பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதை தடுக்கும்விதமாகவும், என்னுடைய கேரக்டர் சில பெண்களுக்காவது இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்றும் நடித்தேன்.”

“விஜய்?”

“எல்லா நடிகைகளுக்கும் விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். விஜய் சாரை படங்களில் பார்த்ததோடு சரி. இந்தப் படத்தில்தான் சாரை நேரில் சந்தித்தேன். வீட்டுக்கு வந்து அழைக்கும் காட்சியைத்தான் முதலில் எடுத்தார்கள். ஆரம்பத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க பயமாக இருந்தது. ஆனால் விஜய் சார் செட்ல இருந்தால் எல்லாருக்குள்ளும் பாசிடிவ் எனர்ஜி பரவும். சார் இருந்தால் செட் அமைதியான சூழலுக்கு மாறிவிடும்.  

எல்லாருடைய முகங்களிலும் இருக்கும் இறுக்கம் மாறும். லைட் பாயில் ஆரம்பித்து ஆர்ட்டிஸ்ட் வரை எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்வார். பதிலுக்கு நானும் குட் மார்னிங் சொல்வேன். அதைத்தாண்டி அவரிடம் பேச கொஞ்சம் பயமாக இருக்கும். இவ்வளவுக்கும் அவர் சீரியஸ் பெர்சன் கிடையாது. ஸ்பாட்டில் அமைதியாகப் பேசுவார். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் எங்கிருந்துதான் அந்த ஃபோர்ஸ் வரும் என்று தெரியாது. ஒரே டேக்கில் ஓ.கே.பண்ணிவிடுவார். சில சமயம் இரண்டு டேக் போகும். அது அவருடைய பிரச்சனையாக இருக்காது. டெக்னிக்கல் பிரச்சனையாக இருக்கும்.

விஜய் சார் கண் பவர்ஃபுல்லாக இருக்கும்.  என் ஃப்ரெண்ட்ஸ் சிலர், ‘விஜய் சாரை சைட் அடிச்சியா’ என்று கேட்டதுண்டு.  அடிப்படையில் நான் விஜய் சார் ரசிகை. சைட் அடித்தேன் என்று சொல்வது சரியாக  இருக்காது. சில சமயம் சூட் அணிந்து வரும்போது நான் மட்டுமல்ல, மொத்த  செட்டுமே வியந்து பார்க்கும். ”

“நயன்தாரா?”

“நயன்தாரா மேடம் ஸ்வீட் பெர்சன். எங்கள் டீமில் நான்தான் கொஞ்சம் துறுதுறுவென்று இருப்பேன். என்னைப் பார்த்தவுடன் அவருக்கு சிரிப்பு வரும். எனக்கும் அவருக்குமான காம்பினேஷன் காட்சியில் அவர்தான் சிறப்பான நடிப்பைக் கொண்டுவருவதற்கு உதவியாக இருந்தார்.”

“இயக்குநர் அட்லி ஜாலியான ஆளாச்சே?”

“ஆமாங்க. படப்பிடிப்பு டென்ஷன் இருந்தாலும் இயக்குநர் அட்லி சார் எப்போதும் ஜாலியாக பேசக் கூடியவர். டேக் முடிந்ததும் ‘நல்லா பண்ணிட்டிங்க’ என்று சொல்வார். அவர் அப்படிச் சொல்லும்போது கலாய்க்கிறாரோ என்றுகூடத் தோணும். ஆனால் பேட்டி கொடுக்கும்போது என்னைக் குறிப்பிட்டுச் சொன்னபோதுதான் அவர் சொன்னது நிஜம் என்று தெரிந்தது.

இயக்குநர் அட்லியின் படங்களைக் குறித்து விமர்சனங்கள் வருகிறது. விமர்சனம் பண்ணும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் மனம் நோகும்படி புண்படுத்தக்கூடாது. ‘ராஜா ராணி’யில் அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

‘தெறி’யில் சமந்தாவின் எமோஷனல் காட்சியில் டைரக்டரின் டச் இருக்கும். ஐடியாக்கள் சில சமயம் ஒத்துப்போகலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் கொஞ்சம் ஓவராக வருகிறதோ என்று தோன்றுகிறது.”

“அடுத்து என்ன பிளான்?”

“தமிழில் ‘96’ படத்துக்குப் பிறகு எனக்கான வரவேற்பு அதிகமாகியுள்ளது. எல்லார் கூடவும் நடிக்கணும். அதில் விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி படங்களில் கண்டிப்பாக நடிக்கணும். தற்போது தெலுங்கில் ஒரு படம் பண்றேன். நிறையப் பேர் என்னை மலையாளி என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் மலையாளி கிடையாது.”

- சுரேஷ்ராஜா