படப்பிடிப்பில் பரபரப்பு!உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இதன் நாயகன் சிவநிஷாந்த். நாயகி நீருஷா. முக்கிய வேடத்தில் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமி, சஞ்சனா, ஸ்ரீஹர்ஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் இலங்கை நடிகர் லால்வீர்சிங் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இசை சாய் பாஸ்கர்.

இதில் பழிவாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார்களாம்.‘‘படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவானது. படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.பிச்சைமணி அடிப்படையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் பில்டர். அவரும் நானும் கடந்த பத்து வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். நீண்ட நாட்களாகவே சினிமாவில் கால் பதிக்கும் எண்ணத்துடன் நல்ல தருணத்திற்காகக் காத்திருந்த நண்பரிடம் ‘துப்பாக்கியின் கதை’யைச் சொன்னேன். அவரே படத்தைத் தயாரிப்பதற்கு முன்வந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

ஒருநாள் கோவையில் இந்தப் படத்தின் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது துணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினைப் பறித்துக்கொண்டு ஹீரோ ஓடுவது போலவும், அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கினோம்.

ஆனால் அதை உண்மை என்று நினைத்த அதை வேடிக்கை பார்த்த  பொதுஜனம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹீரோவை உண்மையான

திருடன் என்று நம்பி விரட்டிச் சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நபர் விபத்தில் சிக்கி, அவரது காலில் முறிவு ஏற்பட்டது.

அதன்பின்னர் எங்கள் செலவில் அவருக்கு சில லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை அளித்தோம்.இன்னும் இதுபோல பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்துள்ளன’’ என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.  

- எஸ்