பேயைவிட கொடூரமான விஷயம்!‘இருட்டு’ சீக்ரட்!‘‘இது என்னோட முதல் ஹார்ரர் படம். பெரும்பாலும் நான் பேய் படங்கள பார்க்க மாட்டேன். பேய் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட என்னையே ஹார்ரர் படம் இயக்க வச்சிருக்கார் சுந்தர்.சி. சார். அதுக்காகவே அவருக்கு நன்றி சொல்லிக்கறேன். நான் இந்தப் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சிம்புகிட்ட ஒரு கதை சொல்லியிருந்தேன். அவருக்கும் அந்தக் கதை பிடிச்சிடுச்சு.

அதை அவர் விடிவி கணேஷ்கிட்ட சொல்லியிருக்கார். அவர் உடனே அதை தயாரிக்கவும் முன்வந்துட்டார். அதுக்காக கணேஷ்கிட்ட பேச ஒருநாள் அவர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கேதான் சுந்தர்.சி சாரை பார்த்தேன். எதிர்பாராத விதமா இன்ப அதிர்ச்சி. சுந்தர் சாருக்கும் உடனே ஒரு கதை ரெடி பண்ணி, இந்தப் படத்தை தொடங்கிட்டோம். பேயை விட கொடூரமான விஷயம் ஒண்ணு இருக்கு.

அது நெஞ்சை உறையச் செய்யும் உண்மையும் கூட! அப்படி ஒரு ஸ்கிரிப்ட் அமைஞ்சதால மேக்கிங்ல மிரட்டியிருக்கோம்’’ என்கிறார் இயக்குநர் துரை வி.இசட். அஜித்துக்கு ‘முகவரி’, விக்ரமிற்கு ‘காதல சடுகுடு’, சிம்புவிற்கு ‘தொட்டிஜெயா’ என ஹிட்களை இயக்கியவர். இப்போது சுந்தர்.சி நடிப்பில் ‘இருட்டு’வை இயக்கியிருக்கிறார்.

“அதென்னங்க பேயைவிட கொடூரமான விஷயம்?”

“அப்படி ஒரு விஷயம் இருக்கு. படம் பார்த்துட்டு, நீங்க நெட்ல போய் தேடினாலும் அது புதிரா தோணும். இந்தப் படத்துல சுந்த.சி. சார் தவிர தன்ஷிகா, விமலாராமன், சாக்ஷி சௌத்ரி, யோகிபாபு, விடிவி கணேஷ்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. விமலாராமன் தமிழ்ல ரீஎண்ட்ரீ ஆகுறாங்க. வசனங்களை என்னோடு சேர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் சாரும் எழுதியிருக்கார்.”

“அஜித்தை வெச்சு ‘முகவரி’ எடுத்த துரைக்கும் ‘இருட்டு’ துரைக்கும் என்ன வித்தியாசம்?”

“அந்த துரை சினிமா அனுபவமே இல்லாதவர். காலேஜ் படிக்கும் போதே, டைரக்‌ஷனுக்கு வந்துட்டார். யார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதவரா இருந்தார். ஒரு laymanனா, அனுபவமின்மையானவரா இருந்து அஜித், என்.கே.விஸ்வநாத் சார், தேவா சார், பி.சி.ஸ்ரீராம், தோட்டாத்தரணி, ரகுவரன், வைரமுத்துனு பெரிய ஜாம்பவான்களோடு ஒர்க் பண்ற ஒரு சிறுமாணவராக இருந்தார்.

அப்பவே எனக்கு என்ன வேணும் என்பதை ரொம்ப ஆணித்தரமா, பயப்படாமல் சொன்னதாலதான் என்னை அஜித்ல இருந்து ரகுவரன் வரை அத்தனைபேருக்கும் பிடிச்சு, தனிப்பட்ட முறையில் பாராட்டினாங்க. அதிலும் அஜித் சாருக்கு படம் ரொம்ப பிடிச்சுப் போய், ‘முகவரி’
ரிலீஸுக்கு முன்னாடியே என்னைக் கூப்பிட்டு அழகான ஒரு ஹூண்டாய் காரை பரிசளிச்சார். அந்த டைம்ல எனக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மட்டும்தான் அவர் கார் கொடுத்திருந்தார்.

 இந்த விஷயங்கள் எல்லாருக்குமே ஒரு ஹிட்டுக்கு அப்புறம்தான் கிடைக்கும். ஒரு மாபெரும் புகழுக்கு பிறகுதான் மரியாதை கிடைக்கும். ஆனா, அஜித் சாரோட அன்பும், மரியாதையும், பரிசும், நெகிழ்ச்சியும் எனக்கு ‘முகவரி’  ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே கிடைச்சிடுச்சு. என்கிட்ட ஏற்கனவே கார் இருந்துச்சு. அதை அவர்கிட்டேயும் சொன்னேன் தலைவா என்கிட்ட அல்ரெடி கார் இருக்கு.

உங்க டேட் குடுங்க போதும்னு கேட்டேன். ‘நீங்க மொதல்ல கிஃப்ட்டை வாங்கிக்குங்க. அப்புறம் டேட் தர்றேன்’னார். அப்புறம் அவர் அடுத்தடுத்த உயரங்கள் தொட்டு, இப்ப உச்சத்துல இருக்கார். அவரோட வளர்ச்சியை பார்த்து ஹேப்பியா இருக்கு. மறுபடியும் அவர்கிட்ட டேட் கேட்டு அவருக்கு தொல்லை குடுக்க விரும்பல. ஆனா, ஒரு படத்தின் வெற்றிக்கு முன்னாடி பரிசு கொடுத்த அஜித், ஒரு gem of personதான்.”  

“என்ன சொல்றார் ‘இருட்டு’ ஹீரோ சுந்தர்.சி?”

“சுந்தர்.சி சார் சிம்பிள் அன்ட் ஹம்பிள். துளியும் பந்தா இல்லாதவர். சினிமா, கதை அதைத் தவிர வேற எதையும் பேசினதில்ல. அவருடைய படைப்புகளை பார்த்துட்டு,அவரைப் பத்தி நாம ஒரு மைன்ட்செட்ல அவர்கிட்டப் போய் பேசினால்.. அப்படியே பிரமிக்க வைக்கறார். அவ்ளோ சினிமா நாலேஜ், டெக்னாலஜி டேலன்ட்னு எல்லாமே விரல் நுனியில் தெரிஞ்சு வச்சிருக்கார்.

கடவுள் அருளால் நான் யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாமலேயே முதல் படத்தை பண்ணிட்டேன். ‘முகவரி’ பண்ணும் போது நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன். ஒரு குருவே இல்லாமல் சினிமாவுக்குள் வந்துட்டோமேனு ஒரு ஏக்கம் எனக்குள் இருக்கும்.

ஆனா, சுந்தர் சார்கிட்ட ஒர்க் பண்ணும் போது, அந்த ஏக்கம் காணாமல் போயிடுச்சு. ‘நீங்கதான் என் டீச்சர்’னு அவர்கிட்டேயும் சொல்லிட்டேன். சிரிச்சார். இல்லசார் மானசீகமா ஃபீல் பண்ணினேன்னு சொன்னேன். 38 படங்கள் இயக்கியவர் அவர். ஆனா, அவர் செட்டுக்குள்
வந்துட்டார்னா டைரக்டர்ங்கற சட்டையை கழட்டி வச்சிடுவார்.

நடிகர் சுந்த.சி.யாகத்தான் வந்து நிப்பார். டைரக்டர் ஆகி நடிக்க வந்த பிறகு அவரால 20 படத்துக்கு ஹீரோவாக நடிக்க முடிஞ்சதுக்கு அந்த அருமையான பண்புதான் காரணம். மறுபடியும் அவரோடு ஒர்க் பண்ண ஆசை வந்திடுச்சு.”

- மை.பாரதிராஜா