சின்னத்திரையில் பெரியதிரைக்கான பிரும்மாண்டம்!



‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘கார்மேகம்’, ‘சுறா’ போன்ற ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியவர்  இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார். இவர் வடிவேலு, சூரி போன்ற காமெடி நடிகர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு காமெடி டிராக்  எழுதியவர்.
காமெடி, சென்டிமென்ட் படங்களை எடுப்பதில் கைத்தேர்ந்தவரான இவர் சமீபத்தில் தன் கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பியுள்ளார். அவரிடம் பேசினோம்.

‘‘சன் டி.வி. என்ற பெரிய நிறுவனம் கொடுக்கும் வெளிச்சம் அதிகம். அதுதான் நான் சின்னத்திரை பக்கம் வரக் காரணமாக இருந்தது. அப்புறம்.... பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணுமளவுக்கு உடனடியாக என்னிடம் கால்ஷீட் இல்லை. படமாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி... எல்லாமே ரசிகர்களுக்குத்தானே என்ற அடிப்படையில்தான் சின்னத்திரையில் ‘மகராசி’ தொடரை இயக்கி வருகிறேன்.

எஸ். எஸ். ஆரின் பேரன் எஸ். எஸ். ஆர். ஆரியன், விஜய், திவ்யா, பாடகர் தீபன் சக்கரவர்த்தி,  ராம்ஜி, அன்னை இல்ல வாரிசு  சிவாஜி மனோ, ரியாஸ்கான், காயத்ரி யுவராஜ், ரவிசங்கர், சினேகா நம்பியார், மகாலட்சுமி, விஜய் ஆனந்த, மதுமிதா, வைஷாலி தணிகா, மிதுன்ராஜ், ஹரிஷ் என்று எல்லோருமே வெள்ளித்திரை மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் இதில் நடிக்கிறார்கள்.

‘கிழக்குச் சீமையிலே’ அஸ்வினி நம்பியார் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு நடிப்பதோடு முதன் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தவகையில் சினிமா இயக்குவது போன்ற உணர்வுதான் இருக்கிறது.

‘விண்மீன்கள்’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘கட்டப்பாவ காணோம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு  செய்த ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு இடங்களைப் பொறுத்தவரை சீரியல்களில் வளசரவாக்கத்தைத் தாண்டி வேறு இடங்களைப் பார்க்கமுடியாது. இதில் பிரமாண்டமான வீடு செட், ரிஷிகேஷ், ஹரித்துவார், ஹைதராபாத், சிதம்பரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.

ஓடும் ரயிலில் முதன்முறையாக பெரும்பான்மையான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். தயாரிப்பு நிறுவனமான சிட்ரம் ஸ்டுடியோஸ் பெரிய பட்ஜெட் படம் போல் செலவு செய்துள்ளார்கள்.

சின்னத்திரை எனக்கு ஒரு புதிய களம். மற்றபடி  விஜய், அஜித் சார் படங்கள் பண்ணுவதற்கான  கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதற்கு முன் சின்னத்திரையில் சக்ஸஸ் கொடுக்கணும்’’ என்றார் எஸ்.பி.ராஜ்குமார்.

- ரா