பெண்ணின் மனதைதொட்டு கொட்டாச்சி



டைட்டில்ஸ் டாக்-121

பெண்ணின் மனசைத் தொடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. பெண்ணின் மனதைத் தொடுவதென்றால் காதல் என்று மட்டுமே பலரும் கருதுகிறார்கள். அப்படியல்ல. எல்லோருமே குறைந்தபட்சம் அவரவர் அம்மாவின் மனதைத் தொட்டவர்கள் மட்டுமல்ல. மனதிலும் வாழ்பவர்கள்.எனக்குத் தெரிந்து நான் மூன்று பெண்களின் மனதைத் தொட்டிருப்பதாகக் கருதுகிறேன்.

எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு என்றால் அது நான் மட்டுமே. மூன்று சகோதரிகள். நான்காவது குழந்தை ஆணாகப் பிறந்ததில், என் அம்மாவுக்கு கூடுதல் சந்தோஷம். அவருக்கு சினிமா ஆர்வம் அதிகம். எந்தவொரு சினிமாவையும் அவர் தவறவிட்டதில்லை. அதனால் எனக்கும் இயல்பாகவே சினிமா ஆர்வம் ஒட்டிக் கொண்டது.

என்னுடைய ஊர் பொள்ளாச்சி பக்கத்துல உள்ள ஜமீன் ஊத்துக்குளி. சினிமாவில் ஜமீன் அரண்மனையை காண்பிக்கணும்னா எங்க ஊர்லதான் படப்பிடிப்பு நடத்துவாங்க. ‘சின்னத்தம்பி’, ‘எஜமான்’ என்று ஏராளமான படங்களில் எங்க அரண்மனை இடம் பிடிச்சிருக்கு.

எங்க ஊர்லே படப்பிடிப்பு நடக்கும்போது வேடிக்கை பார்ப்பது எங்கள் வாடிக்கை. அந்த கும்பலில்  நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்பா, நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே தவறிவிட்டார். அம்மாதான் அக்காக்களையும் என்னையும் வளர்த்து ஆளாக்கியவர்.

எனக்கு புத்தி தெரிஞ்ச சமயத்தில் என்னை திருப்பூர்லே வேலைக்குச் சேர்த்துவிட்டார். சில வருடங்களில் அம்மாவும் தவறிட்டார். அம்மாவின் ஏக்கத்தில் இருந்த எனக்கு ‘சீமான்‘ படம் அருமருந்தாக இருந்தது. அந்தப் படத்துலே மனோரமா ஆச்சி கையில் ஒரு குழந்தை இடம்பிடித்திருக்கும். ஆச்சி பக்கத்தில் என்னுடைய அக்கா, எங்க ஊர்க்காரப் பெண்களுடன் சேர்ந்து என்னுடைய அம்மாவும் நின்றுகொண்டிருந்தார்.

‘சீமான்’ படத்தில் ஆச்சியின் கையில் இருந்த அந்தக் குழந்தை என்னுடைய அக்காவுடையது. கூடவே எங்க குடும்பப் பெண்களும் நடித்தார்கள். அச்சமயத்தில் அம்மாவின் நினைவு நாள் வந்தது.

அம்மா போட்டோவை வைத்து சாமி கும்பிட எங்களிடம் ஒரு போட்டோ கூட இல்லை. கண்ணுக்குத் தெரிந்த ஒரே வாய்ப்பு ‘சீமான்’ படத்துல அம்மா நடித்திருக்கிறார் என்பது தான். எப்படியும் அந்த கம்பெனிக்காரர்களிடம் போட்டோ இருக்கும் என்று தோன்றியது.

அம்மாவின் போட்டோவை வாங்கணும் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு புறப்பட்டேன். சினிமாக்காரகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பார்கள் என்றும் வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் நினைத்து வந்த எனக்கு சென்னை அனுபவம் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. நொந்து நூடுல்ஸ் ஆனேன். ஒரு வழியாக சம்பந்தப்பட்ட சினிமா கம்பெனியில் ‘சீமான்’ ஆல்பம் கண்ணில் தென்பட்டது. ஆனால் அதில் அம்மாவின் போட்டோ இல்லை.

போட்டோ கிடைக்காத விரக்தியில் இனிமேல் ஊருக்குப் போய் என்ன பண்ணப்போறேன், அங்கே செய்யுற வேலையை இங்கேயே செய்யலாம். நேரம் கிடைக்கும்போது சினிமா வாய்ப்பு தேடலாம் என்று சென்னையிலேயே டேரா போட்டேன். சாப்பாட்டுக்கு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக ஓர் ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை நேரம் முடிந்ததும் சினிமா வாய்ப்புத் தேட ஆரம்பித்துவிடுவேன்.

ஒரு நாள் வாய்ப்புத் தேடி போய்க் கொண்டிருந்தபோது ஒரு நண்பர், ஆபாவாணன் சார் படத்துல ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் நடப்பதாகச் சொன்னார். நானும் உடனடியா ஆபாவாணன் சார் ஆபீஸ் போனேன்.

அங்கிருந்தவர் அடுத்த நாள் வரும்படி சொன்னார். மறுநாள் ‘அடிமைகள்’ என்ற படத்துல நூறு இருநூறு அடிமைகளோடு நடிக்கும் வாய்ப்புக் கொடுத்தார்கள். படப்பிடிப்பில் சில பல சேட்டைகள் மூலம் யூனிட்ல உள்ளவங்ககிட்ட நெருங்க முடிந்தது. அதன் மூலம் சினிமா பரிச்சயம் நன்றாகக் கிடைத்தது.

சென்னையில் நான் பிரம்மச் சாரியாக இருந்தபோது இன்னொரு பெண்ணின் மனதைத் தொட முடிந்தது. அவர் என்னுடைய ஹவுஸ் ஓனர் அம்மா. அவர்தான் என்னுடைய கஷ்ட சூழலை அறிந்து எனக்கு பல சமயங்களில் சாப்பாடு, கைச் செலவுக்கு என்று பலவிதங்களில் உதவினார்.30, 40 படங்கள் நடித்து முடித்த சமயத்தில் என்னுடைய திருமணம் பற்றிய பேச்சு வந்தது.

தீவிரமாக பெண் தேடியும் பெண் அமையவில்லை. என்னுடைய நிலைமையைப் புரிந்து கொண்ட என்னுடைய பெரிய அக்கா மணிமேகலை அவருடைய மகள் அஞ்சலியை கட்டிக் கொடுக்க சம்மதித்தார்.

அஞ்சலி என்னைவிட திறமையானவர். அழகானவர். அப்படியிருந்தும் அவர் மனதை நான் தொட முடிந்தது என்றால் அது இறைவனின் ஆசீர்வாதம். அஞ்சலி வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையே வந்தது. அவருக்கு கற்பூரப் புத்தி. எந்த ஒரு விஷயத்தையும் உடனே புரிந்து கொள்வார். அபாரமான சினிமா நாலெட்ஜ் உள்ளவர். திருமணத்துக்குப் பிறகு அஞ்சல் வழியில் கல்வி படித்தார்.

சினிமாக்காரர்களுக்கு நிரந்தர வருமானம் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி பல கஷ்டமான சூழ்நிலையிலும் குடும்பத்தை மிகத் திறமையாக வழிநடத்தினார். என்னுடைய மனைவி நிறைமாதமாக இருந்தபோது பிரசவ செலவுக்கு கையில் காசு இல்லாமல் இருந்தேன்.

செய்வதறியாமல் தவித்துப் போனேன். பிறரிடம் கை நீட்ட மனமும்  வரவில்லை. அப்போதுதான் ‘சந்தமாமா’ என்ற படத்தில் கமிட்டானேன்.  அந்தப் படத்தில் நடித்ததால் கொஞ்சம் பணம் கிடைத்தது. அந்தப் பணம் பிரசவ செலவுக்கு பயன்பட்டது படம் முடியும் சமயத்தில் குழந்தை பிறந்தது. எல்லோருக்கும் லட்டு கொடுத்து மகிழ்ந்தது மறக்க முடியாதது.

ஒரு கட்டத்தில் குடும்பக் கஷ்டம் அதிகமானது. சுமைகளைக் குறைக்க டப்பிங் பேசலாம் என்று முடிவு செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டு டப்பிங் யூனியன் கார்டு எடுத்தேன். நான் எப்படி பேசினாலும் கொட்டாச்சி பேசுவது போலவே இருப்பதாகச் சொன்னாரள்.

கஷ்டப்பட்டு எடுத்த கார்டு வீணாகிவிடுமோ என்ற மனநிலையில் இருந்தபோது என்னுடைய மனைவி பெயருக்கு கார்டை மாற்றித் தரக் கேட்டேன். யூனியனில் அதுபோன்ற நடைமுறையில்லை என்றாலும் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மனைவிக்கு டப்பிங் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

புதுமுக நாயகிகள் நடித்த ஏராளமான படங்களுக்கு என் மனைவி டப்பிங் பேசியிருக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா மேடம் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார். அவருடைய சின்ன சின்ன சிணுங்கல் எல்லாமே என்னுடைய மனைவியின் குரல் தான்.

தொடர்ந்து ‘குற்றம் கடிதல்’ போன்ற ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். கடந்த இரண்டு வருடமாக எனக்கு சரியாக பட வாய்ப்பு இல்லை. என் மனைவிதான் குடும்ப பாரங்களை ஷேர் பண்ணினார். என்னுடைய மனைவி எனக்கு எனர்ஜிடானிக். நான் துவண்டுபோகும் சமயத்தில் எல்லாம் என்னை உற்சாகப்படுத்துவார்.

இந்த கொட்டாச்சி மூன்றாவதாக ஒரு பெண்ணின் மனதைத் தொட்டது என் மகள் மானஸ்வி. என் மகள் துறுதுறு பெண். ரொம்ப ஷார்ப். போன்லே சின்னதாக வீடியோ எடுப்பதாக இருந்தாலும் சினிமா படப்பிடிப்புக்கு கிளம்புற மாதிரி மேக்கப் போடுவாள். அவளை சினிமாவைக்காட்டித்தான் வளர்த்தேன்.

அதனால் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்தது. சாப்பிடும்போது ரோலிங்... கேமரா... ஆக்‌ஷன்... என்று சொல்லித்தான் உணவு ஊட்டுவேன். மானஸ்வியின் ஒரு வீடியோவைப் பார்த்து இயக்குநர் அஜய் ஞானமுத்து சார் ‘இமைக்கா நொடிகள்’ வாய்ப்புக் கொடுத்தார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் மனைவிக்கும் வேலை இல்லை என்றால் சில சமயம் மானஸ்வியின் சம்பளம் தான் குடும்பதை பேலன்ஸ் செய்ய உதவுகிறது.

சினிமாவில் என்னுடைய சமகாலத்தில் வாழ்க்கையில் உயர்ந்து, பிறகு தோற்றுப் போனவர்கள் நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். என் குடும்பத்துக்கு அப்படியில்லாமல், இப்போது இந்தக் கொட்டாச்சி இல்லாமலேயே என் மனைவி, மகள் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற மன நிறைவு மூலம் அவர்களின் மனதைத் தொட முடிந்ததாக நினைக்கிறேன்.

நண்பர்களே! பெண்கள் ஆர்வத்தோடு செய்யும் வேலைக்கு தடையாக இருக்காதீர். நீங்களே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பிறகு நீங்களே தடையாக இருக்கக் கூடாது.  என் அனுபவத்தில் சொல்வதாக இருந்தால், பெண்களுக்கு பிடித்த வேலைக்கு சப்போர்ட் பண்ணினால் பெண்களின் மனதைத் தொடலாம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)