ஒத்த ஆள்.. ஒத்த செருப்பு.. ஒரு முழுநீள சினிமா!



பார்த்திபன் என்றாலே எதையாவது புதுமையாக செய்கிறவர் என்கிற இமேஜ். அந்த இமேஜை தொடர்ந்து இதுவரை காப்பாற்றி வருகிறார். கொடுக்கிற அன்பளிப்புகளில், நடத்துகிற விழாக்களில் மட்டுமல்ல, படங்களிலும் வித்தியாசம் காட்டுகிறவர்.
அந்த வரிசையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு சினிமா முயற்சிதான் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப் படத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கிறார், அவரே இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...

“இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற பொறி எங்கிருந்து வந்தது?”

“பொறி எங்கிருந்து வரும், அரிசியில் இருந்துதான் வரும். சாப்பிடும் சோற்றுக்கு அரிசி வேண்டும். அந்த கட்டாயத்திலிருந்து வந்த பொறி இது. நான் சொல்லும் சோறு நாமும் எதையாவது செய்து மற்றவர்களின் கவனத்தைத் திருப்பவேண்டு மே என்பது. ஷங்கர், முருகதாஸ், அட்லி மாதிரி இயக்குனர்களுக்கு ஒரு ஸ்டார் ஹீரோ தயாராக இருக்கிறார்.

நமக்கு யார் இருக்கிறார்கள்? எனவே மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க ஏதாவது செய்தாக ேவண்டும். அதுதான் இது. இப்படி சோதனை முயற்சிகளை எடுப்பது எனக்கு புதிதில்லை. எனது படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் புதுமையானதுதான். சுருக்கமாகச் சொன்னால் ஒத்த செருப்பு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம்.”

“ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற இந்த வித்தியாசமான தலைப்பின் பொருள்?”

“இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்தக் கதையில் 7 சைஸ் கொண்ட செருப்புதான் முக்கிய ஆதாரம். இது மட்டுமே தலைப்புக்கான காரணம் அல்ல. ஒத்த செருப்புக்குள் ஓராயிரம் விஷயங்கள் இருக்கிறது. யாரோ தொலைத்தது, யாருக்கும் பயன்படாதது. இப்படி நிறைய இருக்கு.”

“இதற்கு முன்பும் இதுபோன்ற முயற்சிகள் செய்யப்பட்டிருக்கிறதே?”

“உண்மைதான். ஆனால் அதற்கும், இதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே நானே இயக்கி, நானே தயாரித்து நானே நடித்திருப்பதுதான். இதற்கு முந்தைய முயற்சிகள் பல வெற்றி அடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் படம் வெற்றி அடைந்தால் அதற்கு காரணம் திறமையான இந்த படத்தின் டெக்னிக்கல் டீம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஒலிப்பதிவு செய்யும் ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி என பெரிய டீம் இதற்காக வேலை செய்திருக்கிறது.”

“பொதுவாக இதுபோன்ற படங்களில் ஒரு சம்பவம்தான் கருவாக இருக்கும், இதில் என்ன மாதிரியான சம்பவம் இருக்கிறது?”

“ஓர் அறைக்குள் மாட்டிக் கொள்ளும் மனிதன், ஒரு பெட்டிக்குள் மாட்டிக்கொள்ளும் மனிதன், காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் மனிதன், இப்படித்தான் சம்பவங்கள் இருக்கும். இதில் ஒரு கதை இருக்கிறது. அதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை சம்பந்தமான ஒரு விசாரணை நடக்கிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவன். அதாவது நான் மட்டுமே ஃபிரேமில் இருப்பேன்.

என்னிடம் விசாரணை செய்யும் அதிகாரிகள், படத்தில் வரும் மற்ற கேரக்டர்கள் குரல் வழியாக ஆடியன்சுக்குள் செல்வார்கள். அந்தக் கொலை செய்யப்பட்டது ஏன்? யார் என்பது கிளைமாக்ஸ். இப்படி ஒரு சினிமாவுக்கான கதை, அப்படியே அதே உணர்வுடன் பார்க்க முடியும்.”

“சினிமாவே ஒரு விஷுவல் மீடியா. இதில் விஷுவல் ட்ரீட்டுக்கான வாய்ப்புகள் குறைவாகத்தானே இருக்கும்?”

“படத்தின் கதை 500 சதுர அடி அறையில்தான் நடக்கிறது. ஆனால் அந்த இடத்துக்குள் நான் 500 ஷாட் எடுத்திருக்கிறேன். ஒரு போலீஸ் அதிகாரி நடந்து சென்றால் அவரது ஷூ சத்தம் படம் பார்ப்பவர்களைக் கடந்து செல்லும். ஒரு போலீஸ் தூரத்தில் போன் பண்ணுவார்.

அந்த சத்தம் தியேட்டரின் மூலையில் கேட்கும். ஆடியன்சையும் கதை நடக்கும் அறைக்குள் இருக்கிற உணர்வை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, காட்சி கோணம், நடிப்பு தரும்போது அதுவே ஒரு பெரிய விஷுவல் ட்ரீட்டாக மாறி இருக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் ஆடியன்ஸ் கதைக்குள் சென்றுவிடுவதால் விஷுவல் ட்ரீட் பற்றி கவனம் ஏற்படாது.”

“சிறிய பட்ஜெட்டிலேயே படத்தை முடித்திருப்பீங்களே?”

“கண்டிப்பாக இல்லை. பெரிய படத்திற்கான பட்ஜெட்தான் இதற்கும் ஆகியிருக்கிறது. நேர்த்தியான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, அரங்கம் அமைப்பு, படப்பிடிப்பு காலங்கள் இப்படி நிறைய இருக்கிறது. ஒலிப்பதிவு முழுக்க முழுக்க மும்பையில் நடந்தது. படத்தில் நான் ஒருவன் மட்டுமே நடித்திருக்கிறேன் என்பதற்காக விளம்பரச் செலவை குறைக்க முடியாது.

சராசரி சினிமாவுக்கு என்ன செலவாகுமோ அதே செலவு இந்தப் படத்திற்கும் ஆனது. நான் மட்டும் நடித்திருந்தாலும் ஒரு பெரிய படத்திற்கான பட்ஜெட் இந்தப் படத்திற்கு செலவாகி உள்ளது. அது நான் கஷ்டப்பட்டு படங்களில் நடித்து சம்பாதித்த பணம்.”

- மீரான்