ரஜினி, கமலோடு நடிக்க மறுத்தவர் அஜித்தோடு ஜோடி சேர்கிறார்!



‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ன்னு ரெண்டு ராட்சத வெற்றி படங்களைக் கொடுத்துட்டு மூணாவதா தல அஜித்தோடு கைகோர்த்திருக்கிறார் டைரக்டர் வினோத். இந்த முறை பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பிய ‘பிங்க்’ படத்தோட ரீமேக்கை ‘நேர்கொண்ட பார்வை’யாக கொடுத்திருக்கிறார் வினோத்.

“எந்த ஒரு விஷயத்துக்கும் ஆணுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கோ, அதே அளவுக்கு பெண்ணுக்கும் இருக்கு. ஆண் இதை செஞ்சா சரி, இதை பெண் செஞ்சா தப்புங்கிறது எல்லாம் கிடையாது. இதுதான் படம் சொல்ற சேதி” என்கிறார் வினோத். அவரிடம் பேசினோம்.
“அஜித் - வினோத் காம்பினேஷன் அமைஞ்சது எப்படி?”

“கடைசி மூணு வருஷமாக அவரை வச்சி படம் இயக்க முயற்சி பண்ணிட்டே இருந்தேன். அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திராகிட்ட கேட்டபடியும் இருந்தேன். அந்த சமயங்கள்ல வேற படங்கள்ல அஜித் சார் பிசியாக இருந்தார். இடையில ஒரு நாள் சந்திச்சோம். அப்போ நான் சொன்ன கதையில கொஞ்சம் நெகட்டிவ் குணாதிசயங்கள் கொண்ட கேரக்டரா ஹீரோவின் கேரக்டர் இருந்துச்சு.

அதைக் கேட்ட அஜித் சார், இப்போதான் ‘விஸ்வாசம்’ படம் பண்ணியிருக்கேன். அந்தப் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸோட ஆதரவு அமோகமா இருந்துச்சு. அதனால அவங்களை மனசுல வச்சுதான் இனி படம் பண்ணணும். இந்தக் கதைக்கு பதிலாக பிங்க் ரீமேக் பண்ணலாம்னு சொன்னார். இப்படித்தான் எங்க காம்பினேஷன் ஸ்டார்ட் ஆச்சு.”

“அஜித்துடன் பணியாற்றிய அனுபவம்?”

“ஜாலியாக இருந்துச்சு. இப்படி சொல்ல காரணம், அவரோட ஃபிரெண்ட்லியான அப்ரோச்தான். எல்லோர்கிட்டேயும் ரொம்ப மென்மையா, ஸ்வீட்டா நடந்துக்குவார். அவர் கூட ஒர்க் பண்ணும்போது கம்ஃபர்ட் லெவல்ல நாம இருக்கிறோம்கிற சந்தோஷம் இருக்கும். ஸ்டார் நடிகருங்கிறதால படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் எல்லோருக்கும் கிடைக்க செஞ்சிடுவார். நிறைய காட்சிகள்ல 150 பேரை வச்சி ஷூட்டிங் நடத்தும்போது, அத்தனை பேரையும் கவனமா கையாள்கிற பெரிய பொறுப்பு டைரக்டருக்கு இருக்கும்.

அந்த வேலையையும் சுலபப்படுத்திக் கொடுக்கிற திறமையும் அவருக்குத்தான் தெரியும். அஜித் சார் ஸ்பாட்ல இருந்தாலே நேரத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் நடக்கும். ஸ்பாட் பாய்லேருந்து பெரிய டெக்னீஷியன் வரைக்கும் ஷூட்டிங்கிற்கு வந்ததுமே எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டுதான் வேலையில ஈடுபடுவார். சாப்பிட்டீங்களா, எப்படி இருக்கீங்கங்கிற கேள்வியில எல்லோர் மீதுமான அவரோட அக்கறையைப் பார்க்கலாம். நிறைய பாசிட்டிவ் விஷயங்கள்தான் அவரைச் சுற்றிலும் இருக்கும். அது எல்லாமே அவர்கூட ஒர்க் பண்ணும்போது நமக்கும் பரவிடும்.”
“ரெண்டு பெரிய ஹிட் படங்கள் கொடுத்துட்டு, ரீமேக் இயக்கும்போது கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ணீங்களா?”

“ரீமேக் பண்றது எனக்கு கம்ஃபர்ட்டா இருந்துச்சுன்னு சொல்ல மாட்டேன். ‘பிங்க்’ இந்திப் படத்தை ஒண்ணுக்கு நாலு தடவை பார்க்கும்போது எனக்கு படம் பிடிச்சிருந்துச்சு. இதை எப்படி ஒரு மாஸ் படமா கொண்டு வரமுடியும்கிற சவால்தான் முன்னாடி இருந்துச்சு. கதையில நாங்க எந்த மாற்றமும் பண்ணல.

படத்தோட கதையும் அது சொல்கிற விஷயங்களும் அப்படியேதான் இருந்துச்சு. திரைக்கதையில ஆக்‌ஷன் காட்சி உள்பட சிலவற்றைப் புகுத்தி இந்தக் கதையோட நேர்த்தி மாறாம சில மாற்றங்கள் பண்ணியிருந்தேன். அதை அஜித் சாரும் தயாரிப்பாளர் போனி கபூரும் ஏத்துக்கிட்டாங்க. அதுல இந்த படத்தை பண்றதுல எனக்கு முழு உடன்பாடு இருந்துச்சு. இந்தப் படத்தைப் பற்றி அஜித் சார் சொல்லும்போது, ஒரு நல்ல விஷயத்தை நல்லபடி நடக்கணும்னு பண்றோம். அதனால நீங்க தைரியமா இந்த படம் பண்ணுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஜனங்களும் இதை ஏத்துக்குவாங்க என்றார்.”

“ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம அவளைத் தொடக்கூடாதுங்கிறதுதான் ‘பிங்க்’ படம் பேசுற மெசேஜ். இதுக்கு எதிர்மறையான மெசேஜும் படம் பேசும். பாலிவுட்ல இப்படியான கதைகளை வரவேற்று இருக்காங்க. கோலிவுட்ல கலாசாரம்னு எதிர்ப்புக் கொடி பிடிப்பாங்களே?”

“ஆணும் பெண்ணும் சமம்கிறதுதான் இந்தப் படம் சொல்கிற விஷயம். அப்படித்தான் இதைப் பார்க்கணும். கலாசாரம்னா என்ன? ஒரு விதி
முறையை ஏற்படுத்தி அதன்படி நடப்பது, அதை வளரவிடுறதுதான். அதே சமயம் விதிமுறையை உடைக்கிறதும் கலாசாரம்தான். எந்த சமூகம் இதை சரியா புரிஞ்சிக்கிறாங்களோ அவங்க யதார்த்தங்களை புரிஞ்சுக்குவாங்க.

கடந்த ஒரு வருஷத்துல மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான கள்ளக்காதல் கொலைகள் நடந்திருக்கு. செக்ஸை விவாதப் பொருளாகக் கொண்டு வர்றதுதான் இந்தப் படம். அந்த விவாதங்களை கொண்டுவர்றதால எதிர்ப்பு இல்லாம இருக்கலாம். எதிர்ப்புகள் வரவும் செய்யலாம். அதுக்கு பயந்து படம் பண்ணாம இருக்க முடியாது.”

“ரஜினி, கமல் படங்களுக்கு கேட்டே நடிக்க வராத வித்யா பாலன், உங்க படத்துல நடிச்சிட்டாரே?”

“அதுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்குதான் நன்றி சொல்லணும். மறைந்த தேவி கூட வித்யாபாலன் நல்ல நட்புல இருந்தவங்க. போனிகபூர் சார் கூடவும் வித்யா பாலனுக்கு நட்பு உண்டு. அந்த நட்புக்காக இந்தப் படத்துல நடிக்க வந்தாங்க. படத்துல 5 நிமிஷம்தான் அவங்க வருவாங்க. அஜித் சாரோட மனைவி கேரக்டர். அந்தப் பகுதியை சஸ்பென்ஸா வச்சிருக்கோம். படம் பார்த்து அவங்க கேரக்டரை தெரிஞ்சிக்கலாம்.”
“இந்தி ‘பிங்க்’ படத்துல டாப்ஸிக்கு முக்கியத்துவம் இருந்துச்சு. அந்த கேரக்டர்ல அவங்களை எதிர்பார்த்தோமே?”

“டாப்ஸி கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்துச்சோ அந்த அளவுக்கு அவங்களோட பெர்ஃபாமன்சும் அசத்தலா இருந்துச்சு. அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனா, எனக்கு இந்த கேரக்டருக்கு தென்னிந்திய முகம் தேவைப்பட்டுச்சு. சட்டுன்னு பார்த்தா தமிழ்ப் பொண்ணா தெரியுற மாதிரி இருக்கணும். அதே சமயம் நடிப்புல அசத்தணும்.

அதுக்காக நிறைய பேரை பார்த்தோம். கடைசியில ஸ்ரத்தா நாத்தும் ஆடிஷனுக்கு வந்தாங்க. அவங்களோட நடிப்பு திருப்தியா இருந்துச்சு. அந்த கேரக்டருக்கும் நியாயம் செய்வாங்கன்னு தோணுச்சு. படம் முடிஞ்ச பிறகு இப்போ பார்க்கும்போது நாம எடுத்த முடிவு சரிதான்னு தோணுது.”

“அமிதாப் பச்சனோடு அஜித்தை ஒப்பிடுவாங்களே?”

“ஒப்பீடுங்கிற பேச்சுக்கே இடமில்லை. அமிதாப் ஒரு கிரேட் ஆக்டர். அவரோட தி பெஸ்ட்டை அவர் அதுல கொடுத்திருந்தார். அஜித் மாஸ் அண்ட் கிளாஸ் ஆக்டர். அவரோட தி பெஸ்ட்டா இந்தப் படம் இருக்கும். இந்த கேரக்டர்ல அவரைப் பார்க்கிறவங்க அஜித்தை ரொம்பவே லவ் பண்ணுவாங்க.”

“சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத ஒருத்தரையும் இதுல நடிக்க வச்சிருக்கீங்க?”
“ரங்கராஜ் பாண்டே பற்றி சொல்றீங்களா? உண்மைதான். இந்த கேரக்டருக்கு நாங்க முதல்ல கேட்டது பிருத்விராஜை. போனிகபூர் அவர்கிட்ட பேசியிருக்கார். போனிகபூரை சந்திச்ச பிருத்வி, லூசிபர் படத்தோட டைரக்‌ஷன்ல பிசியா இருக்கிறதால நடிக்க முடியாத சூழல் இருக்குன்னு சொன்னார். அவரோட தரப்பு பதில் சரியா இருந்துச்சு. பிறகு டீம்லேருந்து ரங்கராஜ் பாண்டேயை நடிக்க வைக்கலாம்னு ஒரு பேச்சு வந்துச்சு.

போனிகபூருக்கு அவரோட டிவி விவாதங்களோட சிடியை அனுப்பி வச்சோம். அவரும் ஓகே சொன்ன பிறகு நடிக்க வச்சிருக்கோம். அவரோட கேரக்டர் நெகட்டிவ்தனமானது, படத்துல யார் வில்லன் அப்படிங்கிறதெல்லாம் கிடையாது. பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு சொல்கிற இடத்துல அவர் இருப்பார். இல்லை பொண்ணுன்னா ஆணுக்கு இணையாத்தான் இருப்பான்னு சொல்கிற கேரக்டர் அஜித் சாருக்கு. இந்த கோர்ட் காட்சிகள் திரையில தெறிக்க வைக்கும்.”

“அடுத்த படமும் அஜித்துடன். ஒர்க் ஆரம்பிச்சிட்டீங்க போல?”“ஆரம்ப கட்ட வேலைகள்தான் நடக்குது. கதை டிஸ்கஷனும் போயிட்டு இருக்கு. இப்போதைக்கு அந்தப் படம் பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.”

- ஜியா