ஒட்டகத்தோடு 100 நாள்!



பிளாக் காமெடி, பேய் சீசனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கோலிவுட்டில் அனிமல் ஜானர் படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ‘ராக்கி’, ‘வாட்ச்மேன்’, ‘மான்ஸ்டர்’ பட வரிசையில் அடுத்து வெளிவரவுள்ள படம் ‘பக்ரீத்’. விக்ராந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார். வானிலை சட்டு சட்டென மாறிக்கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் படத்தின் நாயகன் விக்ராந்த்தை சந்தித்து பேசினோம்.

“எப்படி வந்திருக்கு...‘பக்ரீத்’ படம்?”

“ஒட்டகத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதன் முறையாக தயாராகியுள்ள படம் ‘பக்ரீத்’. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு.நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகிறது.

இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். காரணம், சமீபத்தில் வெளிவந்த ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’, அடுத்து வெளிவரவுள்ள ‘பக்ரீத்’ போன்ற படங்கள் எனக்கு தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக ‘பக்ரீத்’ படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது என்று சொல்லலாம்.

வழக்கமா எல்லாரும் தங்கள் படத்தை வித்தியாசமான படம் என்று சொல்வார்கள். எங்கள் படம் வித்தியாசமா, இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தை ரசிகர்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம். வித்தியாசமாக இல்லை என்றால் என்னுடைய சட்டையைப் பிடித்துக் கேட்கலாம்.

தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாகக் கொண்டு வர வேண்டும் என்றார். முருகராஜ் அண்ணனை எனக்கு 13 வருடமாகத் தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை இருந்தது.

ஒட்டகத்தை வைத்து படம் எடுப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இந்தப் படத்தில் ஒட்டகம் இடம் பெற்று இருக்கிறது என்றால் அந்தப் பெருமை அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் போய்ச் சேரும். இந்தப் படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார்.
கிட்டத்தட்ட படப்பிடிப்புக்கு ஒரு வருடம் இருக்கும் போதே ஒட்டகத்துக்கான பர்மிஷன் போன்ற முன் ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிட்டது. நாய், பூனை போன்ற பிராணிகளை நடிக்க வைப்பது வேறு விஷயம். ஒட்டகத்தை வைத்து எடுக்கும் போது நிறைய நிபந்தனைகள் இருக்கும்.

ஸ்கிரிப்ட், ஒட்டகப் பயன்பாடு என்று எல்லா விஷயங்களையும் அனிமல் போர்டில் சமர்ப்பித்து தடையில்லா சான்றிதழ் வாங்கி வைத்திருந்தார்கள். அப்படித்தான் எல்லாமே சாத்தியமானது. படப்பிடிப்புக்கு முன்பே ஒரு வருடம் ஆயத்த வேலைகள் என்பது பெரிய விஷயம். ஏன்னா, பெரிய படங்களில் மட்டுமே அதற்கான பட்ஜெட் இருக்கும். அடுத்த ஒரு வருடம் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் என்று ஒதுக்கி வேலை செய்தார்கள். இது படத்தின் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது.”

“நீங்க ஓட்டலில் தங்கியதைவிட ஒட்டகத்துடன் தான் அதிகம் தங்கினீர்களாமே?”

“இது நாயகனுக்கும் ஒட்டகத்துக்குமிடையே ஒரு பிணைப்பு உள்ள கதை. வழக்கமா பண்ற படம் போன்று கதை கேட்டோம், படப்பிடிப்புக்கு கிளம்பிப் போனோம் என்ற ரீதியில் இந்தப் படத்தைப் பண்ண முடியாது. நம்ம வீட்லே செல்லப்பிராணி இருந்தால் அதனுடன் நாம் எப்படி ஐக்கியமா இருப்போமோ அது போன்ற நெருங்கிய தொடர்பு ஒட்டகத்துடன் இருக்க வேண்டும்.

அப்போதுதான் காட்சி இயல்பாகவும் சிறப்பாகவும் இருக்கும்.அதுக்காகவே படப்பிடிப்புக்கு முன்பாகவே ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் சில மாதங்கள் பழகினோம். நான் மட்டுமல்ல, படத்துல ஒட்டக காம்பினேஷன்ல வர்ற எல்லாருக்கும் அந்த பயிற்சி கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, ஒட்டகத்தை 100  நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது.

பொதுவா எனக்கு விலங்குகள் பிடிக்கும். அதனால் ஒட்டகத்துடன் நடிக்கும் போது கஷ்டமாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஒட்டகம் மிரண்டது. நாய் கடித்தால் பரவாயில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒட்டகத்தைப் பொறுத்தவரை ஒண்ணு கடிக்கும் இல்லைன்னா இடித்துத் தள்ளும். பொதுவா விலங்குகளை நாம் நெருங்கும் போது அது நம்முடைய நோக்கத்தை புரிந்து கொள்ளும். அந்த வகையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஒட்டகம் கொஞ்ச நாளில் என்னுடன் பழக ஆரம்பித்தது. படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை.”

“கதையைப் பற்றி சொல்லவேயில்லையே?”

“விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயம் செய்துவரும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது.அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூரப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளும்தான் கதை. பயணக் கதை என்பதால் இந்தியாவில் உள்ள பல ஊர்களின் கலாச்சாரத்தை பதிவு செய்துள்ளோம்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல இடையூறுகள் இருந்தது. உண்மையிலேயே ஒட்டகத்திற்கும் பெரிய நன்றி சொல்லணும்.”

“மற்ற நடிகர்கள்?”

“எனக்கு ஜோடியா வசுந்தரா நடித்திருக்கிறார். திறமையான நடிகை. வெளிப்படையாக பேசக் கூடியவர். இந்தப் படம் அவர் நடிப்புத் திறமைக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக இருக்கும். முக்கியமான வேடத்துல எம்.எஸ்.பாஸ்கர் சார் வர்றார். இந்தப் படத்தில் தமிழ்நாட்டிலிருந்து ராஜஸ்தான் நகர்வது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் பெரிய நடிகர்களை நடிக்க வைத்திருக்க முடியும். படத்துல நான், வசுந்தரா, எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். படம் சொல்லும் சேதி பெரிது என்பதால் படப்பிடிப்பு எங்கு நடத்தினோமோ அங்குள்ள உள்ளூர் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்தோம்.”

“அடுத்து?”

“இப்போ ‘வெண்ணிலா கபடிக்குழு - 2’ முடிச்சிருக்கேன். என் அண்ணன் சஞ்சீவ் இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். ‘தாக்க தாக்க’ படத்துக்கு பிறகு நானும் அண்ணனும் இணைந்து பணியாற்றுகிறோம். இரண்டு நாயகர்கள் படமாக வெளிவரவுள்ளது. இன்னொரு நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக். விஜய்சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். பிஸி ஷெட்யூலுக்கு மத்தியில் விஜய் சேதுபதி எங்களுக்காக நேரம் ஒதுக்கி டிஸ்கஷன்ல கலந்துகொண்டார். விளையாட்டு சம்பந்தமான கதை என்பதால் இப்போ தீவிர பயிற்சியில் இருக்கிறேன்.”

“உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் வட்டாரம் அதிகமாச்சே. அவர்களுடன் நட்பு தொடர்கிறதா?”

“விஷால், ஆர்யாவுடன் எனக்கு பன்னிரண்டு வருட நட்பு இருக்கு. நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து அவர்களுடன் பழகுகிறேன். விஷ்ணுவுடன் பத்து வருடங்களாக பழகி வருகிறேன். எல்லோரும் குடும்பமாக பழகி வருகிறோம். எங்கள் நட்பை கிரிக்கெட் இன்னும் பலமாக்கியது. இன்னொரு விஷயம். நண்பர்களாக நாங்கள் சந்திக்கும்போது நான் சினிமா பேசுவது இல்லை. ஆனால் நிறையப் பேர் பேசுகிறார்கள் என்று கருதுகிறேன். நண்பர்களிடம் எனக்காக எந்த ஒரு ஆப்ளிகேஷனையும் கேட்டதில்லை. சினிமா வேறு தொழில் வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.”

“ஆர்யாவுக்கு திருமணமாயிடுச்சே. முன்பு மாதிரி பழக நேரம் இருக்கிறதா?”

“என்ன பாஸ்? கல்யாணம்தானே நடந்திருக்கு, நல்ல விஷயம்தானே? அதுக்கு ஏன் பதறணும். திருமணத்துக்குப் பிறகு ஆர்யா நல்லா இருக்கிறார். எப்பவும் போல் நாங்கள் பழகுகிறோம்.”“விஷால் உங்களை வைத்து படம் தயாரிக்கப் போவதாகச் சொன்னாரே...?”

“விஷாலுடன் நடித்த ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஏறுமுகத்தைக் கொடுத்ததை மறக்க முடியாது. விஷாலின் முடிவில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல கதை அமையும் பட்சத்தில் இணைந்து பணியாற்றுவோம்.”

“விஜய்யோட ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் உணர்ச்சிவசப்பட்டு டிவிட்டர்ல கமெண்ட் போட்டி ருந்தீர்களே?”

“தான் ஆடவில்லை என்றாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதுபோல் விஜய் அண்ணன் எங்க குடும்ப ரத்தம். ‘பிகில்’ படத்தில் விஜய் அண்ணனின் ஓல்ட் கெட்டப் என்னை அதிகமா இம்ப்ரஸ் பண்ணியதால் செம தூள் என்று கமெண்ட் போட்டேன்.”

- சுரேஷ்ராஜா