விஜய்க்கு தங்கச்சியாக ஆசைப்படும் மோனிகா!



சமீபத்தில் வெளிவந்த படங்களில் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் தரமான படம் என்ற பாராட்டைப் பெற்ற படம் ‘ஜீவி’ . அந்தப் படத்தில் நாயகியாக நடித்தவர் மோனிகா சின்னகோட்லா. இவர் தற்போது உஷா கிரியேஷன்ஸ் சார்பாக பி. ராமநாதன், ரக்‌ஷந்த் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

படத்தைப் பற்றி மோனிகாவிடம் கேட்டோம்.‘‘இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் கதை. சென்னையிலிருந்து நாட்டு நலப்பணித்திட்டத்திற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள் சில மாணவிகள். அதே ஊரில் மெடிக்கல் பிரதிநிதியாக வேலை பார்க்கிறார் ஒரு இளைஞன். இவர்களில் ஒரு பெண் இளைஞனை சந்திக்க நேரிடுகிறது. நாளடைவில் இது காதலாக மாறுகிறது. சமூகசேவை முடிந்து சென்னை செல்கிறாள் அந்தப் பெண்.

அவளைத் தேடி அவனும் சென்னை செல்கிறான். இருவரும் சந்தித்தார்களா, இவர்களது காதல் நிறைவேறியதா என்பதை காதல் கனிரசம் சொட்டச் சொட்ட மனதை வருடும் கதையாக சொல்லப்பட்டிருக்கும்.நாயகனாக விவேக் ராஜ் நடிக்கிறார். இவர் ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படம் சினிமாவில் வளர்ந்து வரும் எனக்கு உதவியாக இருந்தது. லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவா ரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் போன்ற சீனியர்களுடன் நடித்ததன் மூலம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடிந்தது.இசையமைப்பாளர் நோவா, ஒளிப்பதிவாளர் கே.ராம்குமார் என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். நாகர்கோவில், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப் படத்தில் எனக்கான ஸ்பேஸ் அதிகமாக இருக்கும். இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் சார் நடிகர்களிடம் உள்ள திறமையை மிக அழகாக பயன்
படுத்துவார். கேரக்டருக்கு தேவையான உணர்ச்சிகளை எடுத்துக் கொள்வதில் மேஜிக் நிகழ்த்துவார். இந்தப் படம் கவலைகளை மறந்து மகிழ வைக்கும் வேலையைச் செய்யும்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘தோழர் வெங்கடேசன்’, ‘டைம் இல்ல’ உட்பட நாலைந்து படங்கள் கைவசம் உள்ளது’’ என்கிற மோனிகாவுக்கு விஜய்யை ரொம்பப் பிடிக்குமாம். விஜய் படத்தில் தங்கச்சி உட்பட என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பாராம்.

- ரா