டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா!



மின்னுவதெல்லாம் பொன்தான்!-39

இந்திய அளவில் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவர் சுவர்ணமுகி. இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனால் “எலும்பே இல்லாத பெண்மணி” என்று புகழ்ச்சியாக வர்ணிக்கப்பட்டவர்.
அந்த அளவிற்கு அவரது பாம்பு நடனமும், மயில் நடனமும் புகழ்மிக்கது.
சுவர்ணமுகியை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு நர்த்தகி என்ற அரசுப் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு அது சுவர்ணமுகிக்கு வழங்கப்பட்டது.

உஷா ராஜேந்தர் பற்றி எழுத வந்திருக்கும் இந்த நேரத்தில்சுவர்ணமுகி பற்றி எழுதியதற்கு காரணம் உண்டு. சுவரண்முகி யின் உடன்பிறந்த தங்கைதான் உஷா ராஜேந்தர். தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்ட உஷாவுக்கு நான்கு சகோதரிகள். நால்வருமே நான்கு துறைகளைத் தேர்ந்தெடுத்து முன்னேறினார்கள். அக்கா சுவர்ணமுகி நாட்டியத்தை தேர்வு செய்தார். தங்கை உஷா நடிப்பை தேர்ந்தெடுத்தார்.

70களில் இறுதிக் காலத்தில் உஷா ராணி, உஷா குமாரி என்ற பெயர்களில் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார் உஷா.1980ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ திரைப்படம்தான் அவருக்கு ஒரு அடையாளத்தையே சினிமாவில் கொடுத்தது.

இத்தனைக்கும் ‘ஒருதலை ராகம்’ படத்தில் உஷா ஹீரோயின் இல்லை. ஹீரோயின் ரூபாவின் தோழியாக வருவார். படத்தில் ரூபா ரொம்ப  அமைதி என்றால், உஷா அதற்கு நேர் எதிர். வெடுக் கோபம், படபட பேச்சால் நாயகி ரூபாவை விட ரசிகர்களை அதிகம் கவனிக்க வைத்தார்.

‘ஒருதலை ராகம்’ படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், படத்திற்கு இசை அமைத்து, இயக்கிய டி.ராஜேந்தருக்கு எந்தப் பலனும் இல்லை. இயக்கம் என்று தயாரிப்பாளரே தன் பெயரைப் போட்டுக் கொண்டார்.

டி.ராஜேந்தர் பெயர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது. அப்போது அடுத்த படம் கிடைக்காமல் டி.ஆர் தவித்துக் கொண்டிருந்தபோது அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் உஷா. இந்த உதவியும், இருவருமே தஞ்சை மண் என்கிற நெருக்கமும் காதலை உருவாக்கியது. திருமணமும் செய்து கொண்டனர்.

‘அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’, ‘தூக்கு மேடை’, ‘புதிய வார்ப்புகள்’, ‘வெற்றி நமதே’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘சுமை’ ஆகிய படங்களிலும், ‘பட்டம் பதவி’, ‘தூரம் அதிகமில்லை’, ‘வசந்த அழைப்புகள்’, ‘முள் இல்லாத ரோஜா’ போன்றவற்றிலும் நடித்தார் உஷா.

திருமணத்திற்குப் பிறகு கணவர் இயக்கி, தயாரிக்கும் படங்களின் நிர்வாகப் பொறுப்பை கவனிக்க வேண்டிஇருந்ததால் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார். மேலும், கணவர் நடத்திய பத்திரிகையின் நிர்வாகத்தினையும் திறம்படச் செய்தார். கணவர் இயக்கிய சில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார்.

உஷா தொடர்ந்து நடித்திருந்தால் ஒருவேளை நல்ல குணச்சித்திர நடிகையாக இன்றும் வலம் வந்து கொண்டிருப்பார். என்றாலும் அவர் நடித்த படங்கள் அனைத்திலுமே கண்ணியமான குடும்பக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். இன்று அவர் ஒரு கலைக்குடும்பத்தின் தலைவியாக தனது கடமையை செய்து வருகிறார்.

இவரது பெயரில் ஒரு திரைப் படம் (உயிருள்ளவரை உஷா) எடுக்கப்பட்டது, பத்திரிகையும் (உஷா) நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வேறு எந்த நடிகைக்கும் இப்படிப்பட்ட சிறப்பு அமையவில்லை.

சகலகலா வல்லவர் டி.ராஜேந்தரின் மனைவி, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தாயார் ஆகிய அடையாளங்களைத் தாண்டியும் தன்னுடைய தனித்தன்மையை தமிழ்த் திரையுலகில் தடம் பதியச் செய்தவர்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்