மெட்ராஸ் மைம் கோபி



டைட்டில்ஸ் டாக்-119

என்னுடைய  ஆரம்பமும் சரி, சினிமாவும் சரி எல்லாமே சென்னையில் ஆரம்பித்தது. கடந்த ஆறு  தலைமுறைகளாக நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம். சென்னை அயனாவரம்தான்  நான் பிறந்த பூமி.மெட்ராஸ் எப்பவுமே நல்ல மெட்ராஸ். இந்த ஊருக்கு என்று ஏராளமான அழகான அடையாளங்கள் இருக்கின்றன.
மக்கள் மத்தியில் மிக எளிதாக அடையாளம் காணப்படுவது அதன் மொழி. சென்னை மொழி என்பது பொதுவா மக்கள் கருதுவது போல கேலிக்குரிய மொழி அல்ல. எங்கள் மொழியை கொச்சைப் படுத்திவிட்டார்கள் என்பதுதான் நிஜம்.

உதாரணத்துக்கு ‘என்னப்பா நல்லா இருக்கியா’ என்று இழுத்து இழுத்து பேசுவதை சென்னை மொழி என்று நினைக்கிறார்கள். உண்மையில் அது சென்னை மொழி கிடையாது. வார்த்தையை மிக அழகா உச்சரித்து பேசும் மொழி எது என்றால் அது சென்னை மொழி.

எங்க லைப்ஸ்டைல் சூப்பரா இருக்கும். சமூக நீதியைப் பார்க்க முடியும். கிராமங்களிலேயே மறைந்துவிட்ட கூட்டுக் குடும்ப வாழ்க்கையை இங்கு பார்க்க முடியும். யாரும் தனிப்பட்ட முறையில் வாழமாட்டார்கள். சென்னை தாண்டினால் மதம், ஜாதி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். சென்னையில் மார்வாடி, இந்தி, குஜராத்தி, பஞ்சாபி என்று எல்லாருக்குமான வாழ்க்கை உண்டு.

அப்போது ப்ளாட் சிஸ்டம் கிடையாது. எல்லாரும் ஒரே குடும்பம் போல் பழகினோம். பொதுவாக சமைத்தோம். பொதுவாக சாப்பிட்டோம். அந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறக் காரணம் ப்ளாட் சிஸ்டம். அதன் பிறகு மக்களுக்கான கனெக்‌ஷன் துண்டிக்கப் பட்டுவிட்டது. நடை, பேச்சு, பழக்கம் எல்லாமே மாறிவிட்டது.

வட சென்னைக்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நடந்த சென்னை பெரு வெள்ளத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அப்போது சென்னையில் பல இடங்கள் மூழ்கிப் போன நிலையில் வட சென்னையில் தேங்கிய நிலையில் தண்ணீரைஎங்கும் பார்க்க முடியவில்லை. காரணம் அதன் வடிகால் சிஸ்டம்.

சென்னையில் எங்கு போனாலும் ஒரு மகத்துவம் இருக்கும். நடை,  உடை, மொழி, உதவும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் மனம் போன்ற நற்குணங்கள் சென்னை மக்களுக்கு உரியது. சத்துணவு எனக்கு பிடிக்கும். அப்போது சத்துணவு நல்லா இருக்கும். முட்டை கிடையாது. நண்பனின் அம்மா வசந்தி.

அவங்க வீட்டுக்கு சத்துணவுடன் போகும்போது அவங்க சாப்பாட்டை எனக்கு கொடுத்துவிட்டு சத்துணவை அவங்க எடுத்துப்பாங்க. அப்போது போன் வசதி அரிதான விஷயம். எல்லாத்துக்கும் கடிதம் தான் தொடர்பு சாதனம்.  கடிதம் எழுதும் போது நடக்கும் நல்ல விஷயம் மூளை நல்லா வேலை செய்யும். எழுத ஆரம்பித்தால் அடுத்தடுத்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும் . தமிழ் மறக்காது.

மெட்ராஸ் எனக்கு எல்லாம் கொடுத்துள்ளது. நான் எதுவும் இல்லாதவனாக இருந்தவன். ஆனால் நான் செத்தால் எனக்காக மூவாயிரம் பேர் அழுவார்கள். அதுபோன்ற மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளேன். இப்போது நான் நடிகனா இருக்க காரணம் இயக்குநர்கள். பூஜ்ஜியமாக இருந்த என்னை வேல்யூ உள்ள மனிதனாக மாற்றியது இயக்குநர்கள்.

சினிமாவில் பா.ரஞ்சித் போன்ற தம்பிகள் கிடைத்திருக்கிறார்கள். இயக்குநர் பிரம்மாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். என்னுடைய பலம் தெரிந்தவன் அவன் மட்டுமே. எனக்கு காமெடி நன்றாக வரும். மைம் பண்ணுவதால் என் பாடிலேங்வேஜ் வேறு மாதிரியாகிவிட்டது. அந்த வகையில் எனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் இயக்குநர்களுக்கு நன்றி. என்னுடைய ஸ்டூடியோவில் என்னை இயக்கிய எல்லா இயக்குநர்களின் போட்டோவையும் வைத்துள்ளேன். நான் ஏறி வந்த ஏணியை மறப்பதில்லை.

இந்த குணம் சென்னை மக்களுக்குரிய குணம். அவர்களுக்கு நன்றி மறக்கத் தெரியாது. ஆனால் காலப்போக்கில் தவறாக சித்தரித்துவிட்டார்கள். சென்னைவாசி என்றால் ஏமாத்திடுவாங்க என்று சொல்வாங்க. அப்படி கிடையாது. ஏமாற்றப்பட்டு இருப்பார்களே தவிர அவர்கள் ஏமாற்றமாட்டார்கள்.

எனக்கு சென்னை எவ்வளவோ பண்ணியிருக்கு. அப்படி சென்னைக்கு நான் சில நல்ல விஷயங்கள் பண்ண நினைத்தேன். ஆதரவற்ற பிள்ளைகளை விமானத்தில் அழைத்துச் சென்றேன். இந்த உலகத்தில் அநாதைகள் என்று யாரும் கிடையாது. அவர்கள் தனித்துவிடப்பட்ட மக்கள்... அவ்வளவே. எல்லாருக்கும் தாய் தகப்பன் இருப்பார்கள். யாரோ பண்ணிய தப்புக்கு இந்த பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த நினைத்தேன்.

சமீபத்தில் பிறவியிலே பார்வைத் திறன் இல்லாத சுமார் 23 குழந்தைகளுக்கு விமானப் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். ப்ளைட் சவுண்ட் மட்டுமே கேட்டு பழகிய அவர்கள் விமான இருக்கையில் அமர்ந்த போது அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஜெயிண்ட் வீலில்  போவது போல் இருப்பதாக சொன்னார்கள். நீச்சல் குளத்தில் அவர்கள் குளித்தது இல்லை. அதற்கும் ஏற்பாடு செய்தேன். ஒருவருக்கு மூன்று பாதுகாவலர்கள் நியமித்து பார்த்துக் கொண்டேன்.

ஒரு மாற்றுத் திறனாளி மாணவனின் கல்விக்காக சிறிது உதவி செய்தேன். இப்போது அந்த மாணவன் யுனிவர்சிட்டி லெவலில் டாப் மாணவனாக வந்துள்ளார். தெய்வம் வானத்தை பிளந்து வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மனித உருவில் கடவுள் வாழ்கிறார்.

என்னுடைய காரில் எப்போதும் ஏழை மக்களுக்கு கொடுப்பதற்காக உடைகள் வைத்திருப்பேன். வழியில் யாராவது உடைகள் இல்லாமல், உணவு இல்லாமல் இருப்பதைப் பார்த்தால் வண்டியை நிறுத்தி  உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன். இது பெரிய செலவு கிடையாது.

இந்த செலவுகளுக்காகவே மாதம் 4000  அல்லது 5000 ஒதுக்குகிறேன். ஓட்டல், பெட்ரோல் என்று பல வழிகளில் செலவு பண்ணுகிறோம். அதுபோல் என்னுடைய பட்ஜெட்டில் அவர்களுக்கென்று ஒதுக்குகிறேன். இந்த உலகத்தில் எல்லோரும் தொப்புள் கொடி உறவு என்று நம்புகிறேன்.

எல்லாரும் நல்லா இருக்கணும். என்னுடைய ஸ்டூடியோவுக்கு மதிய வேளையில் யார் வந்தாலும் சாப்பாடு போடுவேன். சாயங்காலம் வந்தாலும் எதாவது சாப்பிடலாம். என்னைத் தேடி வருபவர்களுக்கு மரியாதையும் உணவும் கண்டிப்பாக உண்டு. இது என் அப்பா அம்மா கற்றுக் கொடுத்தது. என்னுடைய தாத்தா அடிக்கடி சொல்வது, யாரிடமும் சாப்பிடுறீங்களானு கேட்கக் கூடாது.

சாப்பாட்டை போட்டுக் கொடு. அப்போது அவர்கள் காரணம் சொல்லாமல் சாப்பிடுவார்கள் என்றார். நாம் சின்னதா எதாவது நல்லது செய்தால் கடவுள் அதைவிட பெரிசா செய்வார்னு சொல்வார். என்னுடைய அப்பா சம்பளம் வாங்கியதும் லட்டு, பாதுஷா, ஜாங்கிரினு நிறைய ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வருவார். ஏன் அவ்வளவு பாக்கெட் என்றால் பக்கத்துவீடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

ஏன்னா பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அன்றைய தேதியில் சம்பளம் இருக்காது. அந்த ஸ்வீட்டையும் என் கையால் கொடுக்கச் சொல்லி கொடுப்பது; இருக்கும் சந்தோஷத்தை அறியச் செய்வார். என் அப்பா சொல்லிக் கொடுத்ததை இன்று என் பையனுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

வாழ்க்கையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. நாம் யாருக்காவது உதவ நினைத்தால் வாழும் போதே தாமதப்படுத்தமால் செய்ய வேண்டும். யோசிக்கக் கூடாது. யோசிக்க ஆரம்பித்தால் மனம் மாறிவிடும். உதவி பண்ண பாக்கெட் பெரிசா இருக்கணும்னு அவசியம் இல்லை. மனசு தான் பெரிசா இருக்கணும்.

ஊர் என்பது அடையாளம் மட்டுமே. எல்லா ஊரும் நல்ல ஊர். என்னை எல்லாரும் சென்னைவாசி மாதிரி தெரியலையே என்பார்கள். சென்னை வாசிக்கு நாலு கால் கிடையாது, எல்லாமே மனசு பொறுத்து அமைகிறது. நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது நம் பழக்க வழக்கங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. தண்ணி அடிக்கிறவன் தண்ணி அடிக்கிறவனுடன் சேருவான். கோயில் போகிறவன் கோயில் போகிறவனுடன் சேருவான். நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்லது நடக்கும்.  வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

தொகுப்பு:சுரேஷ் ராஜா

(தொடரும்)