ஆக்‌ஷன் மாஸ் காட்டுகிறார் விஜய் சேதுபதி!



‘‘விஜய் சேதுபதி ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும் படம் தான் ‘சிந்துபாத்’. இதற்கு முன் ஃபாரீன் பேக்கிரவுண்ட்லே எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும், இது அந்தப் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும். காமெடி, பாடல்கள் என்று  ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களும் பக்காவா ஒர்க் அவுட்டாகியிருக்கு.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு படத்தைப் பார்த்தபோது ஆல் கிளாஸ் ஆடியன்ஸை திருப்திப் படுத்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது’’ என்று ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ போன்ற படங்களின் மூலம் ஏற்கனவே விஜய்சேதுபதியோடு இணைந்து கவனம் ஈர்த்தவர் இவர்.

“நீங்க ஏற்கனவே விஜய் சேதுபதியை இயக்கிய ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ போன்ற படங்கள் உங்களுக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கு. அதை ‘சிந்துபாத்’திலும் தக்க வெச்சுப்பீங்க, இல்லையா?”

“இப்போதும் எனக்கு அடையாளம் தரும் படமாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை பார்க்கிறேன். அந்த அடையாளத்தை தக்க வைக்கு மளவுக்கு இந்தப் படமும் இருக்கும். சிந்துபாத் கதைகளில் நாம் கேள்விப்பட்ட மாதிரியான படம் இது. காதலியைத் தேடி காதலன் கடல் தாண்டிப் போவது தான் படத்தோட கதை.

குற்றாலத்தில் சில்லறைத் திருட்டு மூலம் கல்லா கட்டும் நாயகன் வெளிநாட்டில் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிற நாயகிக்கு கடல் தாண்டி எப்படி
உதவுகிறார் என்பதை சுவாரஸ்யமா சொல்லியிருக்கிறேன். முதல் பாதி காமெடி, காதல் என்று கலகலன்னும் இரண்டாவது பாதி அதிரடி ஆக்‌ஷனாகவும் இருக்கும்.”

“அப்போதைய விஜய் சேதுபதி ஓக்கே. இப்போதைய விஜய் சேதுபதி?”

“விஜய் சேதுபதியை முதல் முதலாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் பார்த்தபோது, ‘நல்லா நடிக்கிறாரே... எந்த சீன் கொடுத்தாலும் செமையா பண்றாரே’ என்ற ஆச்சர்யத்தை உண்டாக்கினார். ‘சேதுபதி’ பண்ணும் போது ஸ்டார் நடிகராக மாறி இருந்தார். எவ்வளவு அழுத்தமான கதைக்கும் தாங்குவார் என்ற நம்பிக்கையை கொடுத்தார். நடிப்பு விஷயத்திலும் வேற லெவலைத் தொட்டிருந்தார்.

விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு நாளுக்கு நாள் வியப்பளிக்கிறது. அவருடைய வளர்ச்சியை பிரமிப்பாக பார்க்கிறேன். கடந்த ஏழெட்டு வருஷமாக அவருடன் டிராவல் பண்ணுகிறேன். இப்போ மூணாவது படம் பண்றேன். அப்போது இருந்த விஜய் சேதுபதிக்கும் இப்போது உள்ள விஜய்சேதுபதிக்கும் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது. இப்போ ஆதர்ச நடிகனா மாறியிருக்கிறார்.

அவருடன் வேலை செய்யும் போது எனக்கு பெரியளவில் பணிச்சுமை இருந்ததில்லை. முதல் படத்தில் பார்த்த மாதிரியே அதே தோழமையை இப்போதும் வெளிப்படுத்துகிறார். பேசிக்கலா அவர் சிம்பிளிசிட்டியை அதிகம் விரும்புபவர். படப்பிடிப்பில் அவரை எப்படி ஹேண்டில் பண்ணப் போகிறோம் என்ற குழப்பமே ஏற்படாது. ஒரு இயக்குநராக என் வேலையை பார்த்தாலே போதும். என் வேலையில் என்று மே அவர் தலையிட்டதில்லை.

எங்கள் இருவருக்குமான புரிதல் செமையா இருக்கும். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் வேலை செய்யும் போது முழுக் கதையைச் சொன்னேன். ‘சேதுபதி’ பண்ணும்போது 25 சதவீத கதை தான் விஜய் சேதுபதிக்கு தெரியும். இதெல்லாம் அவருக்கு என் மீதுள்ள நம்பிக்கை. இவன் நல்லா பண்ணுவான் என்று என்னை முழுமையா நம்புகிறார். இந்தப் படத்தின் கதையை அரை மணி நேரம்தான் சொல்லியிருப்பேன். அவர் அப்படி இருப்பதாலேயே என் பொறுப்பு கூடுதலாகிறது.

படப்பிடிப்பு சமயத்தில் அதைப் பண்ணு, இதைப் பண்ணுன்னு சொன்னதில்லை. ஸ்பாட்ல சில விஷயங்களை இம்ப்ரவைஸ் பண்ணுவார். இது எல்லா நடிகர்களும் செய்யக் கூடியது. அவர் சொல்லும் சில விஷயங்கள் நல்லா இருக்கும். நல்லா இல்லாதபோது அது வேண்டாம் என்று சொன்னாலும் பெரிசா எடுத்துக்கொள்ளமாட்டார். அவருக்கு இயக்குநரின் திருப்திதான் முக்கியம்.

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கான இனிப்பான செய்தி ஒண்ணு எங்கிட்ட இருக்கு. முன் எப்போதும் இல்லாதளவுக்கு விஜய் சேதுபதி இந்தப் படத்தில் அதிகமான சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.”

“அஞ்சலி?”

“இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. அஞ்சலியைச் சுற்றித்தான் கதை நடக்கும். மலேஷியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்பவராக வர்றார். அவருக்கு அங்கு சில பிரச்சனைகள் வருகிறது. அதை நாயகன் எப்படி எதிர்கொண்டு காப்பாற்றுகிறார் என்பதுதான் கதைக்களம்.
 என்னுடைய அனுபவத்தில் அஞ்சலியைப் போன்ற ஒரு நடிகையைப் பார்த்ததில்லை. பிரமாதமான நடிகை. எந்த ஒரு சீனையும் எளிதில் புரிந்துகொண்டு கலக்கி எடுக்கிறார். இது பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக்கூடிய படம்.

நாலு பாட்டுக்கு வந்துவிட்டு போவது மாதிரியான படம் இல்லை. அஞ்சலியை ஏன் செலக்ட் பண்ணினேன் என்பது படம் பார்க்கும்போது புரியும்.
 உடல் எடையை குறைத்து சின்னப் பொண்ணு லுக்லே இருப்பார். விஜய்சேதுபதிக்கு காது அரைகுறையாதான் கேட்கும். அஞ்சலிக்கோ சத்தமா பேசித்தான் பழக்கம். இவ்விருவருடைய காம்பினேஷன் அலப்பறையா இருக்கும்.

அஞ்சலி வேலை விஷயத்திலும் பயங்கரஃ பாஸ்ட்.  எல்லாமே சிங்கிள் டேக்தான். டப்பிங் கூட ஒன்றரை நாளில் பேசி முடித்துவிட்டார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அருமை. சுருக்கமா சொல்வதாக இருந்தால் ‘அங்காடித் தெரு’ அஞ்சலியை மீண்டும் பார்த்த மாதிரி இருக்கும்.”

“மற்ற நடிகர்கள்?”

“விஜய்சேதுபதி பையன் சூர்யா விஜய்சேதுபதி படம் முழுக்க  வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஸ்கிரீன்லே பார்க்கும் போது முதல் படம் மாதிரி தெரியாது. விஜய் சேதுபதியைப் போல் அவனும் என்னை நடிப்பில் வியக்க வைத்திருக்கிறான். சூர்யா என் பையன் மாதிரி. எட்டு வருடமாக அவனைப் பார்க்கிறேன்.

முதல் நாளிலிருந்தே தயக்கம் இல்லாமல் கடகடன்னு நடிக்க ஆரம்பித்துவிட்டான்.வில்லனா லிங்கா பண்ணியிருக்கிறார். இந்தப் படத்துக்காக 17 கிலோ உடல் எடையை அதிகப்படுத்தி நடித்திருக்கிறார். உடலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு விஷயத்துக்காகவே ஒரு வருடம் தேவைப்பட்டது. அவருக்கு இந்தப் படம் ப்ளஸ்ஸாக இருக்கும்.

விவேக் பிரசன்னா, ஜார்ஜ், அருள்தாஸ் ஆகியோர் முக்கியமான வேடத்துல வர்றாங்க. இது தவிர படத்துல வேறு சில கேரக்டர்ஸ் இருக்கு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் நடிப்பை வெளிப்படுத்தணும் என்பதால் நடிகர்களை ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளோம்.”
“பாடல்கள் நல்லாயிருக்கே...? ”

“யுவன் ஷங்கர் ராஜா மியூசிக் எப்படி இருக்கும் என்று தனியா சொல்லத்தேவையில்லை. பாடல்கள் சூப்பரா வந்திருக்கு. பாடல்களைக் கேட்டுவிட்டு பழைய யுவனை பார்த்த மாதிரி இருக்கு என்றார்கள். யுவனோடு வேலை செய்வதை மோஸ்ட் கம்போர்ட்டா பார்க்கிறேன். அவரைப் பொறுத்தவரை இசை அவருக்கு சாதாரணமான விஷயம். அதில் குறை வைக்கமாட்டார். அவரிடம் நான் என்ன மாதிரி பாடல்கள் வாங்குகிறேன் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.  தாய்லாந்து, கம்போடியா, மலேஷியா என்று பல தேசங்கள் வழியாக கதை டிராவலாவதால் கேமரா ஒர்க் முக்கியம். அதைப் புரிந்து பண்ணியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் மோகன் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார். சண்டைக் காட்சிகளை தாய்லாந்து டீம் பண்ணியிருக்கு. சண்டைக் காட்சிகள் உலகத் தரத்தில் இருக்கும். இதே டீம் விஜய் நடித்த ‘புலி’, விஷால் நடித்த ‘சமர்’ போன்ற படங்களில் வேலை பார்த்துள்ளது.

கே.புரொடக்‌ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பல காரணங்களால் படம் தாமதமானாலும் தயாரிப்பாளர்கள் எவ்வித குறுக்கீடுமில்லாமல் கதைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.”

“தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து படம் பண்ணும் ரகசியம் என்ன?”

“இந்தப் படம் பண்ணுவதற்கு இரண்டு வருடம் காத்திருந்தேன். விஜய் சேதுபதி என் வீட்ல உள்ள ஒருத்தர் மாதிரி. எப்ப வேணும்னாலும் அவருடன் நான் படம் பண்ணலாம். அதுக்காக அட்வாண்ட்டேஜ் எடுக்க விருப்பமில்லை. அவருடன் வேலை செய்வதாக இருந்தால் அவருடைய மார்க்கெட், அவருக்கு பொருத்தமான கதை என்று பல விஷயங்கள் இருக்கிறது.

நான் பண்ணும் கதைக்கு அவர் செட்டானால் மட்டுமே அவரிடம் போகிறேன். அவரை வைத்து படம் பண்ணுவதற்கு  இன்னொரு காரணம் அவருடைய ப்ளஸ் மைனஸ் எல்லாமே எனக்குத் தெரியும். அவருக்கு கதை பண்ணுவது எளிது. ஆரம்பத்தில் ‘சிந்துபாத்’ படத்தை வெளியே பண்ணலாம் என்று நினைத்தேன்.

சில காரணங்களால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. கடைசியாக விஜய் சேதுபதி நான் பண்றேன் என்றார். தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணுவேன். குறைந்தது பத்து படமாவது பண்ணுவேன். அதில் சந்தேகமில்லை.”

“விஜய் சேதுபதி தவிர்த்து உங்ககிட்ட வேற யாருக்கெல்லாம் கதை இருக்கு?”

“பெரிய நடிகர்கள் நடிக்குமளவுக்கு இரண்டு, மூன்று கதை ரெடியா இருக்கு. அதைப் பற்றி ரிலீஸுக்குப் பிறகு யோசிப்பேன்.”

- சுரேஷ்ராஜா