நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாதட்டிக் கேளு!

பொது இடங்களில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க ஒருவராவது வருவார்கள் என்ற நம்பிக்கை விதையை விதைக்கும் படம்தான் இந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’.ரியோவும் விக்னேஷ்காந்த்தும் நண்பர்கள். யூடியுப் சேனலுக்காக பிராங்க் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
அப்படி ஒருமுறை ஷாப்பிங் மாலில் ராதாரவியையும், நாயகி ஷெரீன் காஞ்ச்வாலாவையும் கத்தி முனையில் மிரட்டுகிறார்கள். இளைஞர்களின் துணிச்சலில் இம்ப்ரஸ் ஆகும் ராதாரவி அவர்களிடம் மூன்று டாஸ்க்குகளை ஒப்படைத்து இதை செய்து முடித்தால் பெரும் தொகையைத் தருவதாக சொல்கிறார்.

பணத்துக்கு ஆசைப்படும் இளைஞர்களும் அந்த அசைன்மெண்ட்டை ஏற்று இரண்டு டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள். மூன்றாவது பொறுப்பை செய்யும் போது அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதையும் மீறி அந்த வேலையை செய்து முடித்தார்களா, ராதாரவி ஏன் அப்படியொரு அடாத டாஸ்க்கை கொடுத்தார் என்பதுதான் மீதிப்படம்.

ரியோராஜ், ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வந்து போகிறார். நடிப்பு, சிரிப்பு, சண்டை, எமோஷ்னல் என்று எல்லா பாவங்களிலும் இயல்பாக நடித்து ரசிகர்களிடையே பரவசத்தை கடத்துகிறார்.அறிமுக நாயகி ஷெரின் காஞ்ச்வாலா, இந்தப் படத்துக்கு நான் ஏன் என்று பல இடங்களில் கேட்கிறார். ஹீரோவோடு ஒட்டு மில்லாமல் உறவுமில்லாமல் வந்து போகும் அவருக்கு இது பெரிய இழப்பு. டூயட் இல்லையென்றாலும் ஒரு காட்சியில் முத்தம் கொடுத்து தன் இருப்பை தக்கவைத்துக் கொள்கிறார்.

விக்னேஷ்காந்த், சினிமா காமெடிக்கான இலக்கணத்தை கற்றுக்கொண்டு நடிப்புப் பயணத்தை தொடர்ந்தால் அவருக்கும் நல்லது ரசிகர்களுக்கும் நல்லது.அரசியல் உலகில் சிறப்பாக இருக்கும் நாஞ்சில் சம்பத்துக்கு இதில் சீப் ரோல். அவருடைய நடிப்பை பார்க்கும்போது நாவன்மை உள்ள அவருக்கு சினிமாவைவிட அரசியல்மேடையே சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. பாசமுள்ள அப்பா கேரக்டரில் வழக்கம் போல் கலக்கி இருக்கிறார் ராதாரவி. வில்லனாக வரும் விவேக் பிரசன்னா வியக்கவைக்கிறார்.

ஷபீர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனின் கனவை தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் அவரின் கனவுதான் நிறைவேறவில்லை.அநியாயத்தை தட்டிக் கேட்க முன் வர வேண்டும். ஒருத்தர் வந்தால், அடுத்தடுத்து நிறைய பேர் வருவார்கள் என்கிற மெசேஜ்தான் படத்தின் பலம்.