அபிதகுஜலாம்பாளை மறக்க முடியுமா?மின்னுவதெல்லாம் பொன்தான் -36

அய்யர் ஆத்து பொண்ணு அபிதகுஜலாம்பாளை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. அப்படியென்றால் அந்த கேரக்டரில் நடித்த அபிதாவை எப்படி மறந்தோம். சில காலம் வரை  ‘சேது’ அபிதா என்று பேசப்பட்ட அவர், அதன் பிறகு சினிமாவில்  இருந்து சத்தமே இல்லாமல்   வெளியேற்றப்பட்டார். அது ஏன் என்பதை கடைசியாகப் பார்க்கலாம்.

அபிதா, அக்மார்க் மலையாள கிறிஸ்டியன் பொண்ணு. ஜெனீஷா என்பது அவரது சொந்தப் பெயர். சினிமாவுக்காக மாற்றிக் கொண்ட பெயர்தான் அபிதா.  சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரை சீரியல்களில் சின்னச் சின்ன  கேரக்டரில் நடித்து வந்தார் அபிதா. பதினான்கு வயதிலிருந்தே நடித்து வந்திருக்கிறார்.

அப்புறம் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு செல்வா நடித்த ‘கோல்மால்’ என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோயினுக்கு தங்கை கேரக்டரில் நடித்தார்.  அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை  ‘தேவதாஸி’ என்ற மலையாள காலைக் காட்சி படத்தில் ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு கிளாமராக நடித்தார்.

நல்ல வேளையாக பாலா, ‘தேவதாஸி’யை பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. ஒருவேளை பார்த்திருந்தால் ‘சேது’வில் அபிதாவை, அபிதகுஜலாம்பாள் ஆக்கியிருக்க மாட்டார். அபிதா நடித்த சீரியலை பார்த்துதான் அவரை ‘சேது’வில் நடிக்க வைத்தார். அந்த ஒரே படத்தின் மூலமாக அபிதா மூலை முடுக்கெல்லாம்  பேசப்பட்டார். அப்புறம் நடந்ததுதான் அவர் கேரியரையே மாற்றிப் போட்டது.

ராமராஜனின் மார்க்கெட் இறங்கி க் கொண்டிருந்த நேரம். ‘சேது’வில் அபிதாவைப் பார்த்த ராமராஜன், தன் படத்தின் அடுத்த ஹீரோயின் அவர்தான் என்று முடிவு செய்தார். அந்த நேரத்தில் அபிதாவுக்கு வேறு சில படங்கள் வந்தன. ஆனால், அபிதாவே எதிர்பார்க்காத ஒரு சம்பளத்தை கொடுத்து தன் படத்துக்கு கமிட் செய்தார் ராமராஜன். அந்தப் படம்தான் ‘சீறிவரும்  காளை’. படம் தோற்றது.

அடுத்து பெரிய படமோ, பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்போ அவருக்கு கிடைக்கவில்லை. ‘பூவே  பெண் பூவே’ படத்தில் நடித்தார் அந்தப் படமும் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. மக்கள், அபிதகுஜலாம்பாளை நினைத்துக் கொண்டு அபிதாவை மறந்தார்கள். முன்பு ‘தேவதாஸி’ படத்தில் நடித்ததைப்போன்றே ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தில் ரசிகர்களின் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக கவர்ச்சியாக நடித்தார். ‘எட்டுப்பட்டி ராசா’, ‘அரசாட்சி’ போன்ற படங்களில் சின்னச் சின்ன  கேரக்டர்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வெறுப்புற்று சினிமாவில் இருந்து விலகினார். சினிமா கைவிட்டாலும் மனம் தளராத அபிதா சின்னத்திரையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ என்ற தொடர் மூலம் தமிழ்நாடு முழுக்க மீண்டும் பிரபலமானார். அந்த சீரியல் ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது. சுனில் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட அபிதா  அல்சா, அன்சிலா என்ற இரு குழந்தைகளுடன் இப்போது பெங்களூரில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்