தமிழ் சினிமாவுக்கு வரும் இலங்கையின் முன்னணி ஹீரோ!



இலங்கை சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்ற பெருமை இவருக்கு உண்டு.

குழந்தை இயேசு இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவையும் வீர்சிங்கே கொடுத்துள்ளாராம். தமிழ் சினிமாவில் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வீர்சிங்.

‘‘சின்ன வயதிலிருந்து சினிமான்னா உயிர். சினிமாவை ஹாலிவுட்டுக்கு அடுத்து இந்தியாவில்தான் கற்றுக்கொள்ள முடியும். மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு இலங்கை சினிமாவில் கவனம் செலுத்தினேன். கடந்த 15 வருடங்களில் இலங்கையில் தயாரான ஏராளமான படங்களில் நடித்துள்ளேன்.

அங்கே கதாநாயகனாக நடித்தாலும், தமிழில் ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன்.
இந்தப் படத்தின் கதைக்கருவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் கதைக்கருவை சொன்னதும் இந்தக் கருவையே படமாக்கலாம் என்றார்.

நான் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்துள்ளேன். அதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என நினைப்பவன். அவர்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல. அவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என் மனதிலேயே ஊறிப்போன விஷயம்.
இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.

இந்தப் படம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு தேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது. முன்ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்து இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில், குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். தமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன்’’ என்ற வீர்சிங்கிடம் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் பற்றி பேசுகிறபோது, “பிற மதத்தினர் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் என எல்லோரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

யாரோ ஒருசிலர் செய்யும் தவறினால் இந்த நட்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. ஒரே உலகம், ஒரே மக்கள். எல்லோருக்கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்கும்போது, அவர்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார் வருத்தம் கலந்த வலியுடன்.‘‘அந்த நிமிடம்’' படம் வெளியான பிறகு எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும்’’ என்கிறார் வீர்சிங்.

-  எஸ்