ஆவேசமாவாளா ஆத்தோர ஆத்தா?தமிழ் சினிமாவில் இது பார்ட் 2 சீசன். அந்த வரிசையில் 1983-ல் வெளிவந்த ‘ஆத்தோர ஆத்தா’ என்ற படத்தின் இரண்டாவது பாகமாக ‘சூப்பர் ஹீரோயினி’ என்ற பெயரில் தயாரித்து இயக்கியுள்ளார் மாங்காடு ராமச்சந்திரன். இவருடைய படத்தில்தான் கோவை சரளாவை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் என்று பெருமையோடு சொல்கிறார்.

‘‘இது பக்காவான கமர்ஷியல் படம். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் எடுத்திருக்கிறேன். ஆறுகளால் சூழப்பட்ட அழகிய கிராமத்தில் மர்மமான முறையில் அவ்வூரிலுள்ள கன்னிப் பெண்கள் இறந்து விடுகின்றனர். போலீஸ் விசாரிக்க வரும்போது அவர்களை அவ்வூர் மக்கள் அனுமதிக்கவில்லை. ஆற்று ஓரத்திலுள்ள ஆத்தா எல்லாத்தையும் பார்த்துப்பா. உங்களை அனுமதிச்சா ஆத்தா ஆவேசமடைந்து விடுவா என்கின்றனர்.

கிராம மக்களை ஏமாற்றி பூசாரி வேடத்தில் ஊருக்குள் நுழையும் போலீஸ், டாக்டர் ஒருவர் ஒவ்வொரு பெண்ணாக கற்பழித்து கொன்று விடுகிறார் என்று கண்டுபிடிக்கிறார்கள். ஏன், எதற்காக அவ்வாறு கற்பழிப்பு கொலைகள் நடைபெறுகிறது என்பதை திகில், மர்மம், தோழமை, மூட நம்பிக்கை கலந்த சமூகச் செய்திகளுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன்.

நாயகியாக ரோஸி எனும் இங்கிலாந்து நடிகை அறிமுகமாகிறார். இவரைத் தவிர்த்து கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய புதுமுகங்களுடன் போண்டா மணி, நெல்லை சிவா, முத்துக்காளை, கிங்காங் ஆகியோரும் இருக்கிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். நேமிநாதன் மியூசிக் பண்ணியிருக்கிறார்.

1983ல் நான் எடுத்த ‘ஆத்தோர ஆத்தா’ படத்தில் ரகுவரன், கோவை சரளா, ஒய்.விஜயா நடித்தார்கள். தமிழ் சினிமாவுக்கு முதன் முறையாக கோவை சரளாவை நான் தான் அறிமுகப்படுத்தினேன். என்னுடைய அனுமதியுடன்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடித்தார். என்னுடைய படம் தான் முதலில் வெளிவந்தது.

முருங்கைக்காய் மேட்டரால் ‘முந்தானை முடிச்சு’ முந்திக்கொண்டது’’ என்று சொல்லும் மாங்காடு ராமச்சந்திரன் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.விடாது கருப்பு மாதிரி, எத்தனை ஆண்டுகளானாலும் சினிமா ஆசையும் விடாது போலிருக்கு.

- ரா